தமிழ்நாடு

பால் கொள்முதல் விலை உயர்வு: விவசாயிகள் வரவேற்பு

18th Aug 2019 08:55 AM

ADVERTISEMENT

தமிழக அரசு பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்துள்ளதற்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
 தமிழக அரசு பால் விலையை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதே நேரத்தில் ஆவின் நிறுவனத்தின் மூலம் கொள்முதல் செய்யப்படும் பால் விலையை லிட்டருக்கு ரூ.4 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வால் மாட்டுப் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.28 இல் இருந்து ரூ.32 ஆகவும், எருமைப் பால் லிட்டருக்கு ரூ.35 இல் இருந்து ரூ.41ஆகவும் உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
 இது குறித்து நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.எஸ்.பாபு கூறியதாவது: பால் விலையை உயர்த்த விவசாயிகள் சார்பாக தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. தற்போது, பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது விவசாயிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், மாட்டுப் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.50, எருமைப் பால் ரூ.60க்கும் கொள்முதல் செய்ய சங்கத்தின் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
 பால் உற்பத்தி செய்யும் விவசாயிகள் இதுவரையில் கட்டுபடியாகாத விலையில்தான் பால் உற்பத்தியை மேற்கொண்டு வந்தனர். இந்த விலை உயர்வுக்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பதுடன், விவசாயிகளின் பயிர்க் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
 கட்சிசார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.கே.சண்முகம்:
 பால் விலை உயர்வு வரவேற்கத்தக்கது. ஆனால், கால்நடை வளர்ப்புக்குத் தேவையான இடுபொருள்களின் விலை அதிகமாக உள்ளது. நீண்ட காலமாக பால் விலையை அரசு உயர்த்தவில்லை. இதனால், விவசாயிகள் அதிக அளவிலான கால்நடைகளை வளர்க்க முடியாமல் விற்பனை செய்துவிட்டனர். இந்நிலையில், பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது விவசாயிகளுக்கு ஆறுதலை அளிக்கும் என்றார்.
 தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், கோவை மாவட்டத் தலைவர் சு.பழனிசாமி:
 பால் கொள்முதல் விலை உயர்வு நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வந்தது. கொள்முதல் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தாலும், விற்பனை விலை ரூ.6 உயர்த்தி இருப்பது சாதாரண கூலி வேலைக்குச் செல்லும் மக்களுக்கும் பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் என்றார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT