கிறிஸ்தவக் கல்வி நிறுவனங்கள் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்றதா? - உயர்நீதிமன்றம்

கிறிஸ்தவக் கல்வி நிறுவனங்கள் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்றது என பெற்றோர்கள் மத்தியில் பொதுவான ஒரு கருத்து நிலவி வருவதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
கிறிஸ்தவக் கல்வி நிறுவனங்கள் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்றதா? - உயர்நீதிமன்றம்


கிறிஸ்தவக் கல்வி நிறுவனங்கள் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்றது என பெற்றோர்கள் மத்தியில் பொதுவான ஒரு கருத்து நிலவி வருவதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் விலங்கியல் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவிகள் 34 பேர் அந்தக் கல்லூரி பேராசிரியர் சாமுவேல் டென்னிசன் மீது பாலியல் புகார் அளித்துள்ளனர். கடந்த மே மாதம், பேராசிரியர் சாமுவேலுடன் மாணவிகள் பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட பகுதிகளுக்குக் கல்லூரிச் சுற்றுலா சென்றுள்ளனர். அந்த சமயத்தில் தான் பேராசிரியர் தங்களிடம் தவறாக நடந்துகொண்டதாக மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர்.

இதன் காரணமாக அடுத்த 3 ஆண்டுகளுக்கு வினாத்தாள்களை தயாரிக்க மற்றும் விடைத்தாள்களை திருத்த தடை விதித்து கல்லூரி நிர்வாகம் முதற்கட்ட நடவடிக்கையை எடுத்தது.. மேலும், 5 பேர் கொண்ட விசாகாக் குழு பேராசிரியர் மற்றும் மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது.

இந்த சூழ்நிலையில், தனது பணி நீக்க நோட்டீசை ரத்து செய்யக்கோரி, பேராசிரியர் சாமுவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

இந்த மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி தீர்ப்பளித்தார். மனுதாரர் சாமுவேலுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விசாரணைக்குழு எல்லையை மீறி விசாரிப்பதாக மனுதாரர் கூறுகிறார். ஆனால், சரியான முறைப்படியே விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணைக்குழுவின் அறிக்கையில் மனுதாரர் மீதான பாலியல் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.  எனவே, கல்லூரியின் பணி நீக்க நடவடிக்கைக்கு தடை விதிக்க முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மேலும் நீதிபதிகள் பேசும்போது, "தற்போதைய காலகட்டத்தில் கிறிஸ்தவ நிறுவனங்கள் மீது ஏதாவது ஒரு புகார் வந்துகொண்டே இருக்கிறது. கிறிஸ்தவ நிறுவனங்கள் சிறந்த கல்வியை வழங்கினாலும், அறநெறியை போதிக்கிறதா என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

பெண்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு தண்டனை வழங்கும் சட்டங்கள் மீது அரசு கவனம் செலுத்த இதுவே சரியான நேரம். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சம்பவங்களை தடுக்கும் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ள அரசு முன்வர வேண்டும். சில சட்டங்கள் பெண்கள்  எளிதாக அணுகும் வகையில் உள்ளது. அதே நேரத்தில் அப்பாவி ஆண்மகனை சிக்க வைக்க வேண்டும் என்று தொடரப்படும் வழக்குகளும் நிறைய இருக்கின்றன. வரதட்சணை தடுப்புச் சட்டத்தின் கீழ் உச்சநீதிமன்றத்தில் போலியான பல வழக்குகள் உள்ளன.

எனவே,  பெண்கள் எளிதில் அணுகும் வகையிலும், துஷ்பிரயோகம் செய்ய முடியாத வகையிலும் சட்ட விதிமுறைகளில் அரசு போதிய மாற்றங்களை கொண்டு வர வேண்டும்" என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com