தமிழ்நாடு

முதல் காலாண்டின் வருவாய் ரூ.1,127 கோடி: சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் தகவல்

16th Aug 2019 02:49 AM

ADVERTISEMENT


நிகழாண்டின் முதல் காலாண்டில், சென்னை ரயில்வே கோட்டம் ரூ.1,127.56 கோடி வருவாய்  ஈட்டியுள்ளது என்று சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் பி.மகேஷ் தெரிவித்தார்.
73-ஆவது சுந்திர தினத்தையொட்டி சென்னை ரயில்வே கோட்டம் சார்பில் சென்னையில் வியாழக்கிழமை  நடைபெற்ற நிகழ்ச்சியில் ரயில்வே கோட்ட மேலாளர் பி.மகேஷ் தேசிய கொடியை ஏற்றி, ரயில்வே பாதுகாப்பு படை வீரர்களின்  அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
பின்னர் அவர் பேசியது: சென்னை ரயில்வே கோட்டம் நிகழாண்டில் குறிப்பிட்டத்தக்க சாதனைகளைப் படைத்துள்ளது. பயணிகள் வசதிக்காக நிகழாண்டில் ஏப்ரல் முதல் ஜூலை வரை 690 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. 
காஞ்சிபுரம் அத்திவரதர் விழாவையொட்டி 186 இணை ரயில்கள் விடப்பட்டுள்ளன. பயணிகள் வசதிக்காக இரண்டு சுற்றுவட்டப்பாதை ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. 
2019-ஆம் ஆண்டில் ஏப்ரல் முதல் ஜூலை வரை மெயில், விரைவு ரயில்களை 77.33 சதவீதமும், புறநகர் ரயில்கள் 89.07 சதவீதமும், பாசஞ்சர் ரயில்கள் 79.25 சதவீதமும் சரியான நேரம் இயக்கப்பட்டுள்ளன.
சென்னை ரயில்வே கோட்டம்  2019-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான முதல் காலாண்டில்   ரூ.1,127.56 கோடி வருவாய்   ஈட்டியுள்ளது. இதில், பயணிகள் மூலம் ரூ.713.05 கோடி வருவாய் கிடைத்துள்ளது. 
சென்னை ரயில்வே கோட்டம் சார்பில், ரயில் பயணிகளுக்கு பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. பெரம்பூர் லோகோ ஒர்க்ஸில் பயணிகள் வசதிக்காக சுரங்கப்பாதை திறக்கப்பட்டுள்ளது. 
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஏசி பிரிபெய்டு காத்திருப்போர் அறை செயல்பட தொடங்கியுள்ளது.  80 ரயில்  நிலையங்களில் வைஃபை சேவை  வழங்கப்பட்டுள்ளது. மேலும்,  20 நிலையங்களில் வைஃபை சேவை இந்த மாத இறுதிக்குள் வழங்கப்பட உள்ளது என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT