தமிழ்நாடு

போக்குவரத்து விதிமுறை மீறல் புதிய அபராதம்: விரைவில் அமல்

16th Aug 2019 02:45 AM

ADVERTISEMENT


போக்குவரத்து விதிமுறை மீறல் தொடர்பான புதிய அபராதம் விரைவில் அமல்படுத்த உள்ளதாக சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:
சென்னையில் அதிகரிக்கும் விபத்துக்களால் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தலைக்கவசம் அணியாமல் வாகனத்தை ஓட்டுவது, சீட் பெட் அணியாமல் கார் ஓட்டுவது, அதிவேகமாக வாகனத்தை ஓட்டுவது, மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டுவது போன்ற போக்குவரத்து விதிமுறை மீறலினால் சாலை விபத்துக்கள் அதிகளவில் ஏற்படுகின்றன.
இத்தகைய போக்குவரத்து விதிமுறை மீறல்களில் ஈடுபடுவோரிடம் குறைவான அபாரதத் தொகை வசூலிக்கப்படுவதால், அது அவர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. 
இதைக் கருத்தில் கொண்டும், உயிரிழப்புகளை தடுக்கும் வகையிலும், வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறையைக் கடைப்பிடிக்கும் வகையிலும் நாடாளுமன்றத்தில் மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதா அண்மையில் நிறைவேற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து, இந்தச் சட்டத்திருத்தம் சென்னையில் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. அப்போது போக்குவரத்து விதிமுறை மீறலில் ஈடுபடுவோரிடம், அச் சட்டத்தின் உள்ளபடி அபராதம் வசூலிக்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமும் 20 ஆயிரம் வழக்குகள்: சென்னையில் போக்குவரத்து விதிமுறை மீறலில் ஈடுபடுவோரை கண்டறிந்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக போக்குவரத்து  போலீஸார் தினமும் 100 இடங்களில் வாகனச் சோதனை செய்கின்றனர். 
அதோடு குறிப்பிட்ட நாள்களில் வாகனச் சோதனை நடைபெறும் இடங்களும் அதிகரிக்கப்படுகிறது. மேலும் நள்ளிரவு, அதிகாலை வேளையிலும் சில நாள்கள் சிறப்பு வாகனத் தணிக்கை நடத்தப்படுகிறது.
சென்னையில் போக்குவரத்து விதிமுறை மீறலில் ஈடுபடுவதாக நாளொன்றுக்கு சுமார் 20 ஆயிரம் வழக்குகள் பதியப்படுவது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT