சனிக்கிழமை 24 ஆகஸ்ட் 2019

செயற்கை மூட்டு உபகரணங்கள்: விலையை 20% உயர்த்துவதற்கு பரிசீலனை

DIN | Published: 15th August 2019 02:53 AM


செயற்கை மூட்டு உபகரணங்களின் விலையை 20 சதவீதம் உயர்த்திக் கொள்ள உற்பத்தி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆய்வு செய்யப்படும் என்று சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதேவேளையில், அடுத்த ஓராண்டுக்கு தற்போது உள்ள விலை நடைமுறையே தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவைப் பொருத்தவரை இதய அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு அதிக அளவில் மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சைகளே மேற்கொள்ளப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கு தனியார் மருத்துவமனைகள் பல லட்ச ரூபாயை கட்டணமாக வசூலிக்கின்றன. 
குறிப்பாக, மூட்டு பகுதியில் பொருத்தப்படும் செயற்கை உபகரணத்துக்கு மட்டும் ரூ.4 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரை விலை நிர்ணயிக்கப்படுவதாகத் தெரிகிறது. மருத்துவமனைகளின் இந்த நடவடிக்கைகளுக்கு எந்தவிதமான வரம்புகளும் இல்லாமல் இருந்தன. இந்நிலையில், கடந்த 2017-ஆம் ஆண்டில் செயற்கை மூட்டு மாற்று உபகரணங்களுக்கான விலைக்கு கட்டுப்பாடு விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி, அந்த உபகரணங்களுக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 13,950 வரை மட்டுமே நிர்ணயிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதன் காரணமாக செயற்கை மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகத் தெரிகிறது. மேலும், அந்த வகை உபகரணங்களின் விற்பனை கடந்த இரு ஆண்டுகளில் 30 சதவீதம் உயர்ந்திருப்பதாக மத்திய அரசின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், அந்த விலைக் கட்டுப்பாட்டை மேலும் ஓராண்டுக்கு, அதாவது 2020 ஆகஸ்ட் மாதம் வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பொதுவாகவே விதிகளின்படி மருத்துவ உபகரணங்களுக்கான விலையை ஆண்டுதோறும் 10 சதவீதம் வரை உயர்த்த அனுமதி உண்டு. ஆனால், விலைக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால் கடந்த ஆண்டு அதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை. இந்நிலையில், கடந்த ஆண்டுக்கும், நிகழாண்டுக்கும் சேர்த்து 20 சதவீதம் விலையை அதிகரித்துக் கொள்ள அனுமதி வழங்குமாறு செயற்கை மூட்டு உபகரண உற்பத்தியாளர்கள், 
இறக்குமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதனைப் பரிசீலித்த சுகாதாரத் துறை அதிகாரிகள், விதிகளில் அதற்கான வாய்ப்புள்ளதா? என்பதை ஆய்வுக்குட்படுத்துவதாக உத்தரவாதம் அளித்துள்ளனர். அதேநேரத்தில் நிகழாண்டு வழக்கம்போலவே செயற்கை மூட்டு உபகரணங்களின் விலை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

தாய்மொழி கல்விக்கு அடுத்தபடியாகவே மற்ற மொழிகள் இருக்க வேண்டும்: வெங்கய்ய நாயுடு பேச்சு
மோடியை துதிபாடி பிழைக்க நினைப்பவர்கள் காங்கிரஸில் இருந்து வெளியேறலாம்: கே.எஸ். அழகிரி அதிரடி
பொருளாதார சரிவை ஒப்புக்கொண்டு சீர்திருத்தங்களை செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
மதியம் பெய்த தூறல் டிரெய்லர்தான்: மாலை அல்லது இரவில் இருக்கிறது மழை விருந்து!
இந்தியாவின் தலைசிறந்த சட்ட வல்லுனர் அருண் ஜேட்லி: ராமதாஸ் இரங்கல்