சனிக்கிழமை 24 ஆகஸ்ட் 2019

நீட் விவகாரத்தில் கடித நாடகத்தை தொடர வேண்டாம்: முதல்வருக்கு ஸ்டாலின் வேண்டுகோள் 

DIN | Published: 14th August 2019 05:48 PM

 

சென்னை: நீட் விவகாரத்தில் கடித நாடகத்தை தொடர வேண்டாம் என்று முதல்வருக்கு எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக புதனன்று ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

நீட் தேர்வு மசோதாக்கள் மீதான ஒப்புதலை, குடியரசுத் தலைவர் அவர்கள் நிறுத்தி வைத்த விவரத்தை தமிழக சட்டமன்றத்திற்கு தெரிவித்து விட்டோம்” என்று கூறி, உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த “நீட் “ மசோதாக்கள் தொடர்பான வழக்கினை, அடுத்து நடவடிக்கையின்றி முற்றுப்புள்ளி வைத்து, முடித்து வைப்பதற்கு மட்டுமே அ.தி.மு.க அரசு உதவிசெய்து ஆர்வம் காட்டியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

“இந்த அவையிலே  இரண்டு நீட் மசோதாக்கள் ஏகமனதாக, ஒருமனதாக 1.2.2017 அன்று நிறைவேற்றப்பட்டு  ஜனாதிபதி அவர்களின் ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன. அவை எந்த நிலையில் இருக்கிறது” என்று 28.6.2018 அன்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் திரு விஜயபாஸ்கர், “ஜனாதிபதி அவர்கள் அதை நிறுத்தி (withheld) வைத்திருக்கிறார். ஏன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது (withheld)? என்று நம்முடைய அரசின் சார்பில் விளக்கம் கேட்கப்பட்டிருக்கிறது”என்று பதிலளித்தார். ஆனால் மசோதாக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, திரும்பியே வந்து விட்டன என்ற உண்மையை பேரவைக்கும், பேரவையின் மூலமாக நாட்டுக்கும், தெரிவிக்காமல் மறைத்தார். அந்த மசோதாக்களைத் திரும்பப் பெற்றுக்கொண்டு,  மத்திய அரசுக்கு தமிழக அரசு ஒப்புதல் கடிதம் அனுப்பி வைத்ததையும் மறைத்தார்.

ஒப்புதல் அனுப்பிவிட்டாலே, மறுக்கப்பட்டதை ஏற்றுக் கொண்டதாகத்தான் பொருள். இந்நிலையில் மான்யக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காக சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் நீட் மசோதாக்கள் “நிராகரிக்கப்பட்டதா" “நிறுத்தி வைக்கப்பட்டதா” என்பது குறித்து நீண்ட விவாதம் நடத்தப்பட்டது.  இறுதியில் “நீட் மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்ப சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட கூட்டத் தயார்” என்று முதலமைச்சரே அறிவித்தார். குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் மசோதாக்கள் தொடர்பான அரசியல் சட்டப்பிரிவுகளை அ.தி.மு.க அரசு படித்துப் பார்த்தாலே “நீட் மசோதாக்கள் குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டு விட்டது; மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றி அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கும் அதிகாரம் இருக்கிறது” என்பது தெளிவாகத் தெரிய வரும். ஆனால் நீட் மசோதாக்களை மீண்டும் அவையில் நிறைவேற்றி, அனுப்பி வைத்து மத்திய பா.ஜ.க அரசை சங்கடப்படுத்தக் கூடாது என்ற உள் நோக்கத்துடன்,  “விளக்கம் கேட்கிறோம்” என்ற போர்வையில் கடிதங்களை எழுதி, அ.தி.மு.க அரசு திட்டமிட்டு காலதாமதம் செய்து வருகிறது. மத்திய பா.ஜ.க அரசுடன் நீட் விவகாரத்தில் ஒத்திசைந்து போக வேண்டும் என்பதற்காக, தமிழக சட்ட மன்றத்தின் சட்டமியற்றும் அதிகாரத்தை  நீர்த்துப் போக வைக்கவே முதலமைச்சர் திரு பழனிசாமியும், சுகாதாரத்துறை அமைச்சரும் “கடித நாடகத்தை” அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

2018 ஜூன் மாதத்தில் நீட் மசோதாக்கள் குறித்து சட்டமன்ற கூட்டத் தொடரில் நடைபெற்ற வாதங்களின் நடவடிக்கைக் குறிப்புகளை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அ.தி.மு.க அரசு, சமீபத்தில் நடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் நடைபெற்ற விவாதங்களின் நடவடிக்கைக் குறிப்புகளை ஏன் தாக்கல் செய்யவில்லை? அந்த விவாதத்தின் போது,  “நீட் மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றுவோம்” என்று முதலமைச்சர் அவையில் அளித்த உறுதிமொழியை உயர்நீதிமன்றத்தில் ஏன் தெரிவிக்கவில்லை? முதலமைச்சர் அவையில் கொடுத்த உறுதிமொழியைக் கூட உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்காமல் இருப்பது, நீட் மசோதாக்களை மீண்டும் அவையில் நிறைவேற்றும் மன நிலையில்  அ.தி.மு.க அரசு இல்லை என்பதையும், நீட் பிரச்சினையை மூடிமுடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தையும் தெளிவாக்குகிறது.

ஆகவே “கடிதம் எழுதுகிறோம்” என்ற நாடகத்தை இனியும் தொடராமல், ஏற்கனவே வாக்குறுதியளித்தபடி முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிசாமி உடனடியாக சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக் கோரும் இரு மசோதாக்களையும் மீண்டும் அவையில் நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்க வேண்டும்; அனுப்பி வைத்துவிட்டு சும்மா இருக்காமல், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்களை அழைத்துக்கொண்டு பிரதமரைச் சந்தித்து நேரில் வலியுறுத்த வேண்டும்; என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : tamilnadu NEET DMK ADMK stalin EPS assembly chennai HC case parliment

More from the section

பயங்கரவாதிகளுடன் தொடர்பா? கோவையில் மூவர் கைது
ஜேட்லி கொள்கை வேறுபாடு கொண்டவர்களிடமும் அன்பாக பழகும் பண்பாளர்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி
தாய்மொழி கல்விக்கு அடுத்தபடியாகவே மற்ற மொழிகள் இருக்க வேண்டும்: வெங்கய்ய நாயுடு பேச்சு
மோடியை துதிபாடி பிழைக்க நினைப்பவர்கள் காங்கிரஸில் இருந்து வெளியேறலாம்: கே.எஸ். அழகிரி அதிரடி
பொருளாதார சரிவை ஒப்புக்கொண்டு சீர்திருத்தங்களை செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்