விரைவில் உள்ளாட்சித் தேர்தல்: முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தகவல்

தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும், அதில் பெரும்பாலான இடங்களில் அதிமுக வெற்றி பெறும் என்று முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி
விரைவில் உள்ளாட்சித் தேர்தல்: முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தகவல்

தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும், அதில் பெரும்பாலான இடங்களில் அதிமுக வெற்றி பெறும் என்று முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

சென்னையை அடுத்த வண்டலூரில் சிங்கம், புலிக் குட்டிகளுக்கு முதல்வர் கே.பழனிசாமி சனிக்கிழமை பெயர் சூட்டினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

வேலூர் மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, மக்களவைத் தேர்தலில் பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளோம். 

அதேபோன்று, வேலூர் தேர்தலிலும் பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் எனக் கூறியிருந்தார். ஆனால், 8,141 வாக்குகள் வித்தியாசத்தில்தான் திமுக வெற்றி பெற்றுள்ளது.

வேலூர் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட ஆறு சட்டப் பேரவைத் தொகுதிகளில் குடியாத்தம், கே.வி.குப்பம், அணைக்கட்டு ஆகிய 3 தொகுதிகளில் அதிமுக அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது. 

இதனை மிகப் பெரிய வெற்றியாகக்  கருதுகிறோம். முத்தலாக் மசோதா, காஷ்மீர் பிரச்னை காரணமாக சிறுபான்மையினர் வாக்கு அதிமுகவுக்கு கிடைக்கவில்லை என்று கூறுவது சரியல்ல.

விரைவில் உள்ளாட்சித் தேர்தல்: தேர்தலில் வாக்கு யாருக்கு அளிக்கப்படுகிறது என்பது ரகசியமானது. அப்படியிருக்கும் போது, சிறுபான்மையின மக்கள் வாக்களித்தார்களா, பெரும்பான்மையின மக்கள் வாக்களித்தார்களா என்று எப்படித் தெரியும். யூகத்தின் அடிப்படையிலான கேள்விக்குப் பதில் சொல்ல முடியாது. ஜாதி, மதம், இனம், மொழி அனைத்துக்கும் அப்பாற்பட்ட மாநிலம் தமிழகம். இன்றைக்கு தமிழகம்தான் அமைதிப் பூங்காவாக விளங்கிக் கொண்டிருக்கிறது. 

ஆகவே, மதம், ஜாதியின் அடிப்படையில் இங்கு அரசியல் செய்வது கிடையாது. அனைத்துத் தரப்பு மக்களையும் ஒரே கண்ணோட்டத்தோடு நாங்கள் பார்க்கிறோம்.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடத்தப்படும். அந்தத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். எனது தலைமையில் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனைக் கூட்டம் இரண்டு நாள்கள் நடந்தது. இந்தக் கூட்டத்தில் ஆட்சியர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

குறிப்பாக, மக்களுக்குத் தேவையான குடிநீர், சாலை வசதி, தெரு விளக்கு, குப்பைகளை அகற்றுதல், கழிவுநீர்ப் பிரச்னை போன்ற அடிப்படை வசதிகள் முழுவதையும் எந்தவித பிரச்னையும் இல்லாமல் ஆட்சியர்கள் கண்காணித்து மக்களுக்குத் தேவையான நன்மைகளைச் செய்ய வேண்டுமென ஆலோசனைகள் அளிக்கப்பட்டுள்ளன என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

சென்னைக்கு நீர்: ஆந்திர முதல்வருக்கு நன்றி    சென்னைக்கு நீர் தர ஒப்புதல் தெரிவித்த ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நன்றி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியது: தமிழகத்துக்குத் தேவையான தண்ணீரை திறந்து விட வேண்டுமென ஆந்திர  முதல்வரிடம் தமிழக மூத்த அமைச்சர்கள் கோரிக்கை விடுத்தனர். அந்த மாநில முதல்வரும் சுமார் 8 டி.எம்.சி., அளவுக்கு தண்ணீரை சென்னை மாநகரத்துக்கு வழங்க ஒப்புதல் தெரிவித்துள்ளார். 

அந்த நீர் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கிறோம். அப்படித் தண்ணீர் வரும்போது, சென்னை மாநகர மக்களுக்குத் தங்குதடையில்லாமல், பாதுகாக்கப்பட்ட குடிநீர் அளிக்கப்படும். எங்கள் கோரிக்கையை மனமுவந்து ஏற்றுக் கொண்டு நிறைவேற்ற முன்வந்த ஆந்திர முதல்வருக்கு நன்றி என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com