தமிழ்நாடு

தந்தை சடலத்தின் முன் வாலிபர் திருமணம்: விழுப்புரம் அருகே விநோதம்

11th Aug 2019 03:20 PM

ADVERTISEMENT

 

திண்டிவனம்: உயிரிழந்த தந்தை சடலத்தின் முன் இளைஞர் ஒருவர் திடீர் திருமணம் செய்து கொண்ட  விநோதம் விழுப்புரம் அருகே நடந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள சிங்கனூரைச் சேர்ந்தவர் தெய்வமணி (50), விவசாயி. இவரது மனைவி செல்வி (45). இவரது மகன் அலெக்ஸாண்டர் (29), தனியார் பள்ளி ஆசிரியர். இவருக்கும்,  உடன் பணிபுரியும் ஆசிரியையான மயிலம் அருகேயுள்ள குணமங்கலத்தைச் சேர்ந்த பாலசுந்தரம் மகள் ஜெகதீஸ்வரிக்கும்(24)  அண்மையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, வருகிற செப். 2-ஆம் தேதி, மயிலம் முருகன் கோயிலில் திருமணம் நடைபெறவிருந்தது.

இரு வீட்டாரும், திருமண அழைப்பிதழ் வழங்குதல் உள்ளிட்ட ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், அலெக்ஸாண்டரின் தந்தை தெய்வமணி உடல் நலக் குறைவால் திடீரென கடந்த வியாழக்கிழமை உயிரிழந்தார். இதனால், அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் வேதனையில் ஆழ்ந்தனர்.

ADVERTISEMENT

இந்த நிலையில், பெற்றோரின் முன்னிலையில்தான் தனது திருமணம் நடைபெற வேண்டும் என்று விரும்பிய அலெக்ஸாண்டர், தந்தையின் கையால் தாலியை தொட்டுக் கொடுத்து, திருமணம் செய்ய வேண்டும் என்று உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பெண் வீட்டாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மணமகனான அலெக்ஸாண்டரின் இந்த முடிவுக்கு அவர்களும் ஒப்புக்கொண்டனர். 

இதையடுத்து அவர்கள் பெண்ணை அழைத்துக்கொண்டு, வெள்ளிக்கிழமை சிங்கனூருக்கு வந்தனர். அங்கு உயிரிழந்த தெய்வமணி முன்னிலையில், அவரது மகன் அலெக்ஸாண்டருக்கு எளிமையாகத் திருமணம் நடைபெற்றது.  

தெய்மணியின் கையால் தொட்டு மாங்கல்யத்தைப் பெற்ற அலெக்ஸாண்டர், கண்ணீர் மல்க மணமகளுக்கு தாலி கட்டி திருமணம் செய்துகொண்டார். இந்த நிகழ்வில் பங்கேற்ற உறவினர்கள், தம்பதியை வாழ்த்தினர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT