தமிழ்நாடு

1937-இல் ஒரு அணா கொடுத்து அத்திவரதரை தரிசித்தேன்: 3 முறை தரிசித்த முதியவர்

11th Aug 2019 03:56 AM

ADVERTISEMENT

கடந்த 1937-ஆம் ஆண்டு  தனக்கு 4 வயதாக இருக்கும் போது  தந்தையாருடன் வந்து அத்திவரதரை ஒரு  அணா கொடுத்து தரிசித்துச் சென்றதாக சென்னை மைலாப்பூரை சேர்ந்த முதியவர் வரததேசிகன் தெரிவித்தார்.

சென்னை மயிலாப்பூரை சேர்ந்த சீனிவாசன்  மகன் வரததேசிகன்( 86). இந்தியன் ஆயில் நிறுவனத்தில் நிதி மேலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் 3-ஆம் முறையாக அத்திவரதரை தரிசனம் செய்ய தனது குடும்பத்தினருடன்  வந்திருந்தார். தரிசனத்துக்குப் பின்னர் அவர் கூறியது:

1937-இல் எனக்கு 4 வயது இருக்கும் போது தந்தையாருடன் சென்னையிலிருந்து காஞ்சிபுரம் வந்து அத்திவரதரை தரிசித்தேன். அப்போது அரசுப் பேருந்துகள் இல்லை. தனியார் பேருந்து மட்டுமே இருந்தது. பேருந்தில் எட்டணா கொடுத்து சென்னையிலிருந்து காஞ்சிபுரத்துக்கு தந்தையும் நானும் வந்தோம். 

அத்திவரதரை தரிசிக்க என் தந்தையார் ஒரு அணா கட்டணமாகச் செலுத்தினார். அதன் பிறகு 1979-ஆம் ஆண்டு எனக்கு 46 வயது ஆகும் போது  2 -ஆவது முறையாக  அத்திவரதரை  தரிசிக்க  எனது  குடும்பத்தினருடன்  வந்திருந்தேன். 

ADVERTISEMENT

அப்போது  அரசுப் பேருந்துகள்  இருந்தன. ஆனால்  நாங்கள்  தனியார்  பேருந்தில் தலா ரூ.3.50 பயணக் கட்டணம் செலுத்தி  காஞ்சிபுரத்துக்கு  வந்து  அத்திவரதரை தரிசித்தோம்.  அத்திவரதரை தரிசிக்க அப்போது ரூ.1 கட்டணமாகச் செலுத்தினோம்.

தற்போது எனக்கு 86 வயதாகும் போது 3-ஆவது  முறையாக எனது குடும்பத்தினருடன் வந்து அத்திவரதரை தரிசனம் செய்துள்ளேன். 

இப்போது பேருந்து வசதிகள் போதுமான அளவு இருந்தும் மருமகனின் காரில் சென்னையிலிருந்து காஞ்சிபுரம் வந்து அத்திவரதரை தரிசனம் செய்திருக்கிறேன். 

அத்திவரதரை தரிசிக்க வி.ஐ.பி.பாஸ் பெற்று வந்து  இம்முறை தரிசனம் செய்துள்ளேன். காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் திருவோணம் நட்சத்திரத்தன்று நடைபெறும் பெரியாழ்வார் சாற்றுமுறை திருவிழாவை தொடர்ந்து 75 ஆண்டுகளாக நடத்தி வருவதாகவும் வரததேசிகன் தெரிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT