தமிழ்நாடு

முன்னாள் மேயர் கொலை வழக்கு சிபிசிஐடி போலீஸார் தொடர்ந்து விசாரணை

11th Aug 2019 07:40 AM | திருநெல்வேலி

ADVERTISEMENT

திருநெல்வேலியில் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்பட மூவர் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, கொலை நடந்த வீடு உள்ளிட்ட பகுதிகளுக்கு இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திகேயனை நேரில் அழைத்துச் சென்று சிபிசிஐடி போலீஸார் சனிக்கிழமை விசாரணை நடத்தினர்.
திருநெல்வேலியில் முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி, அவரது கணவர் முருகசங்கரன், பணிப் பெண் மாரியம்மாள் ஆகியோர் கடந்த ஜூலை 23ஆம் தேதி கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக திமுக பெண் பிரமுகரின் மகன் கார்த்திகேயனை தனிப்படை போலீஸார் கடந்த ஜூலை 30ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். முன்னதாக, இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றம் செய்யப்பட்டது.
இந்நிலையில், கார்த்திகேயனை  சிபிசிஐடி போலீஸார் 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க கடந்த புதன்கிழமை (ஆக.7) முதலாவது குற்றவியல் நீதிமன்றம் அனுமதியளித்தது.  இதையடுத்து, கொலை நடந்த வீடு, அப்பகுதியில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டிருந்த கடை, கார்த்திகேயன் கார் நிறுத்தியிருந்த இடம் உள்ளிட்ட பகுதிகளை சிபிசிஐடி ஐஜி சங்கர், டிஎஸ்பி அனில்குமார் உள்ளிட்டோர் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனர். இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் அந்தப் பகுதிகளில் டிஎஸ்பி அனில்குமார் தலைமையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். 
அப்போது கார்த்திகேயனை நேரில் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியில் உள்ளதுபோல் கார்த்திகேயனை நடித்துக் காட்டச் சொல்லி போலீஸார் அதை பதிவு செய்தனர்.
 சுமார் ஒரு மணி நேரம் இந்த விசாரணை நடைபெற்றது. இந்த நேரத்தில் அப்பகுதி காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. பின்னர், கார்த்திகேயனை  போலீஸார் அழைத்துச் சென்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT