தமிழ்நாடு

புதுவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் ஆக.19-இல் தொடக்கம்

11th Aug 2019 01:31 AM

ADVERTISEMENT

புதுவை சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் வருகிற 19-ஆம் தேதி தொடங்குகிறது.
புதுவை சட்டப்பேரவையில் ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். ஆனால், கடந்த 8 ஆண்டுகளாக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. 
பின்னர், சில மாதங்கள் கழித்து முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
நிகழாண்டு மக்களவைத் தேர்தல் வந்ததால், கடந்த மார்ச்  2-ஆம் தேதி, 5 மாதங்களுக்கான (ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை) அரசின் செலவினங்களுக்குத் தேவையான இடைக்கால பட்ஜெட்டை சட்டப்பேரவையில் முதல்வர் வே.நாராயணசாமி தாக்கல் செய்தார்.
இதைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 3-ஆம் தேதி புதுவை சட்டப்பேரவைக் கூடியது. இந்தக் கூட்டத்தில் புதிய தலைவராக சிவக்கொழுந்து பதவியேற்றுக் கொண்டார். தொடர்ந்து, புதுவை மாநில திட்டக் குழுத் தலைவரும், ஆளுநருமான கிரண் பேடி தலைமையில் பட்ஜெட்டுக்கான தொகையை இறுதி செய்ய திட்டக் குழுக் கூட்டம் ஜூலை 13-ஆம் தேதி நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் மாநிலத்தின் பட்ஜெட் தொகை ரூ. 8,425 கோடியாக இருக்கும் என முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான அறிக்கை மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
 இந்த நிலையில், கடந்த மாதம் 22, 23 ஆகிய தேதிகளில் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. நீர்வளப் பாதுகாப்புக்கும், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டாம் என்றும், மத்திய அரசின் நீட், நெக்ஸ்ட் தேர்வுகளைக் கண்டித்தும், இரு மொழிக் கொள்கையை புதுவையில் தொடருவது என்றும் இந்தக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த நிலையில், புதுவை அரசு அனுப்பி வைத்த பட்ஜெட்டுக்கு மத்திய அரசு விரைவில் ஒப்புதல் அளிக்கும் எனத் தெரிகிறது. எனவே, வருகிற 19-ஆம் தேதி புதுவை சட்டப்பேரவையைக்  கூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும். இல்லாவிட்டால், அரசு ஊழியர்கள் மற்றும் அரசின் செலவினங்களுக்கு நிதி ஒதுக்குவதில் சட்ட ரீதியான சிக்கல் ஏற்படும்.
இந்தக் கூட்டத் தொடர் வருகிற 19-ஆம் தேதி தொடங்கி, இந்த மாத இறுதி வரை நடைபெறும் எனத் தெரிகிறது. மேலும், சட்டப்பேரவையில்  எழுப்பக் கூடிய கேள்விகள் தொடர்பான பட்டியலை அனுப்பி வைக்குமாறு சட்டப்பேரவைச் செயலகம் எம்.எல்.ஏ.க்களுக்கு தனித் தனியாகக் கடிதம் அனுப்பியுள்ளது. இந்த பட்ஜெட் கூட்டத் தொடரைத் தொடக்கி வைத்து, துணைநிலை ஆளுநர் கிரண் பேடி உரையாற்றுகிறார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT