பலத்த மழை பெய்து வரும் நீலகிரி மாவட்டத்தின் தாழ்வானப் பகுதிகளில் இருந்து 15 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளதாக தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.
மதுரையில் சனிக்கிழமை பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், முன்னதாக செய்தியாளர்களிடம் கூறியது:
கேரளம், கர்நாடகம், ஆந்திர மாநிலங்களில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக தமிழகத்துக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், நீலகிரி மாவட்டத்தின் குந்தா, உதகை, கூடலூர், பந்தலூர் ஆகிய வட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரி மாவட்டத்தில் 155 முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு, இந்த முகாம்களில் 3 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் மிகவும் தாழ்வானப் பகுதிகளிலிருந்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர்.
முகாம்களில் உள்ளவர்களுக்குத் தேவையான உணவு, மருத்துவ வசதி, குழந்தைகளுக்கு பால், பிஸ்கெட் போன்றவை வழங்கப்பட்டு வருகிறது. பலத்த மழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 5 பேர் இறந்துள்ளனர்.
வீடுகளில் விரிசல் ஏற்பட்டாலோ , பாதிப்பு ஏற்படும் எனத் தெரிந்தாலோ உடனடியாக முகாம்களுக்குச் சென்று தங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக முதல்வர் தலா ரூ. 10 லட்சம் நிவாரண நிதி அறிவித்துள்ளார். மழையால் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் நிவாரண உதவிகள் வழங்கப்படும்.
நிலச்சரிவு காரணமாக பந்தலூர் சாலை சேதமடைந்துள்ளது. அச்சாலையை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் மிக அதிக மழை பெய்துள்ளது. இதனால் அப்பகுதி தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தமிழக அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மேற்பார்வையில் தமிழக அரசின் பேரிடர் மீட்புக் குழு, தேசிய பேரிடர் மீட்புக் குழு, தீயணைப்பு, காவல், மருத்துவக் குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் நீலகிரி மாவட்டத்தில் மீட்பு, நிவாரணம் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. மேலும், ராணுவ ஹெலிகாப்டரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்றார்.