தமிழ்நாடு

தொழிலாளர்கள் பற்றாக்குறையால் உற்பத்தி பாதிப்பு: தீபாவளிக்கு பட்டாசு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

11th Aug 2019 03:29 AM

ADVERTISEMENT

 

உச்சநீதிமன்றத்தில் பட்டாசு தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதாலும், தொழிலாளர்கள் பற்றாக்குறை காரணமாகவும் பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் நிகழாண்டு தீபாவளிக்கு பட்டாசு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக விருதுநகர் மாவட்ட பட்டாசு உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 

கடந்தாண்டு ஜூலை மாதம் 13-ஆம் தேதி மத்திய சுற்றுச்சூழல் துறை மற்றும் வனத்துறையினரின் சார்பில், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்  நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது. அதில், பட்டாசு வெடிக்கும்போது வெளியாகும் அலுமினியப் பவுடர் மற்றும் பேரியம் நைட்ரேட் ஆகிய வேதி பொருள்கள் காரணமாக காற்றில் மாசு அதிகளவு ஏற்படுகிறது எனத் தெரிவித்திருந்தது.

இதைத்தொடர்ந்து பட்டாசில் இருந்து வெளியேறும் புகையை குறைக்கவும்,

ADVERTISEMENT

தரத்தை மேம்படுத்தவும், நீரி மற்றும் சிவகாசியில் உள்ள பட்டாசு நிறுவனங்கள் ஆய்வு செய்ய மத்திய அரசு கேட்டுக் கொண்டது.

இதன் பேரில், சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் மேம்படுத்தப்பட்ட பட்டாசுகளை கண்டறிந்தனர்.  பட்டாசு தயாரிக்க  பயன்படுத்தும் கரித்தூள் மற்றும் சாம்பல் உள்ளிட்டவற்றை குறைத்தால்,  25 முதல் 45 சதவீதம் வரை காற்றில் மாசு குறையும் எனக் குறிப்பிட்டனர்.  இந்த அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல் துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. மேலும்  மத்திய சுற்றுச்சூழல் துறை, பேரியம் நைட்ரேட் பயன்படுத்தி தயாரிக்கப்படும் பட்டாசுகள் மற்றும் சரவெடிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கலாம் எனவும் பரிந்துரை செய்தது.

இதன் பேரில், கடந்தாண்டு உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதியளித்தும்,  பேரியம் நைட்ரேட் பயன்படுத்தி தயாரிக்கப்படும் பட்டாசுகள் மற்றும் சரவெடிகளுக்கு தடை விதித்தும் உத்தரவிட்டது. 

இதற்கிடையே,  பேரியம் நைட்ரேட் வேதி பொருள் இல்லாமல் பட்டாசு தயாரிக்க இயலாது எனக் கூறி சுமார் 3 மாத காலம் ஆலைகளை மூடி பட்டாசு உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தினர்.

இக்காலகட்டத்தில் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டதால், சுமார் 30 சதவீதம் தொழிலாளர்கள், வெளியூர்களுக்கும், சுமைதூக்கும் தொழில், கட்டுமானப் பணிகளுக்கும் மாற்று வேலைக்கு சென்று விட்டனர். 

இதைத்தொடர்ந்து பட்டாசு ஆலைகள் திறக்கப்பட்டபோது, போதிய தொழிலாளர்கள் இல்லாமல் ஆலை உரிமையாளர்கள் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டது. இதனால் பட்டாசு உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட்டது. தொழிலாளர்கள் தட்டுப்பாடு மற்றும் வழக்கு நிலுவையில் உள்ளதாலும்,  பட்டாசு உற்பத்தி முழுவீச்சில் நடைபெறவில்லை.

இந்நிலையில்,  நிகழாண்டில் தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 27-இல் கொண்டாடப்படவுள்ளது.

இதையொட்டி வட மாநிலங்களிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலிருந்தும் வியாபாரிகள் பட்டாசுகளை கொள்முதல் செய்ய சிவகாசி வருகின்றனர். அவர்களுக்குத் தேவையான பட்டாசு ரகங்களை, உற்பத்தியாளர்களால் கொடுக்க இயலவில்லை.  ஒரு வியாபாரி சுமார் ரூ . 10 லட்சத்திற்கு கொள்முதல் செய்ய வந்தால், உற்பத்தியாளர்கள் சுமார் ரூ.  7 லட்சத்திற்கு மட்டுமே பட்டாசுகளை கொடுக்கின்றனர். இதனால்,  நிகழாண்டு தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்புள்ளது. மேலும் பட்டாசு ரகங்களின் விலையும் கடுமையாக உயர வாய்ப்பு உள்ளதாக பட்டாசு உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். 

இதுகுறித்து பட்டாசு தயாரிப்பாளர் என். இளங்கோவன் கூறியது: பேரியம் நைட்ரேட்டுக்கு உலகில் எந்த நாட்டிலும் தடை இல்லை.  மத்திய அரசின் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் விதிமுறைகளின் படியே பட்டாசு தயாரிக்கப்படுகிறது.  பசுமை பட்டாசுகளை தயாரிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால்,  இதுவரை "பசுமை பட்டாசு' என்றால் என்னவென்று தெளிவுபடுத்தப்படவில்லை. பட்டாசு தொழிலை நடத்துவதற்கு மத்திய அரசு பல சட்டத் திட்டங்களை வகுத்துள்ளது. மேலும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையினரும் கண்காணித்து வருகின்றனர். அரசால் அங்கீகரிக்கப்பட்ட பட்டாசுத் தொழிலுக்கு ஏன் இந்த நெருக்கடி எனத் தெரியவில்லை. மத்திய, மாநில அரசுகள் இந்தத் தொழிலையும், இதை சார்ந்திருக்கும் தொழிலாளர்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT