தமிழ்நாடு

தலித் கிறிஸ்தவர்களைத் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்: தொல்.திருமாவளவன் 

11th Aug 2019 03:24 AM

ADVERTISEMENT

தலித் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியரை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

இந்து மதத்தைப் பின்பற்றுவோரை மட்டும்தான் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற குடியரசுத் தலைவரின் ஆணையில் 1956-ஆம் ஆண்டு திருத்தம் கொண்டுவரப்பட்டு, சீக்கிய மதத்தைச் சேர்ந்தவரையும் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பதற்கு வகை செய்யப்பட்டது. அதன்பிறகு, 1990- ஆம் ஆண்டு செய்யப்பட்ட திருத்தத்தால் பெளத்த மதத்தைச் சேர்ந்தவர்களும்,  தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்துக்கொள்ள அனுமதியளிக்கப்பட்டது. ஆனால், கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய மதங்களைத் தழுவிய தாழ்த்தப்பட்டோர் மட்டும் பட்டியலில் சேர்க்கப்படாமல் தொடர்ந்து நிராகரிக்கப்படுகின்றனர்.
மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ரங்கநாத் மிஸ்ரா கமிஷன், தலித் கிறித்தவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து இட ஒதுக்கீடு அளிக்கவேண்டும் என அறிக்கை அளித்து 10 ஆண்டுகள் ஆன பிறகும்கூட மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது வேதனைக்குரியது. ஒருவர் எந்த மதத்தை வேண்டுமானாலும் பின்பற்றுவதற்கு நமது அரசியலமைப்புச் சட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 
கிறிஸ்தவம், இஸ்லாம் மதங்களைத் தழுவிய தாழ்த்தப்பட்டோரை மட்டும் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்காமல் வஞ்சிப்பது அடிப்படை உரிமையை மறுப்பதாகும். இந்த அநீதியை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு 13 ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளது. சீக்கியம், பெளத்தம் மதங்களைத் தழுவியவர்களுக்குக் காட்டப்படும் பரிவு கிறிஸ்தவத்தைத் தழுவிய தாழ்த்தப்பட்டவர்களுக்கும் காட்டப்படவேண்டும் என்று கூறியுள்ளார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT