தமிழ்நாடு

காஷ்மீர் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை காங்கிரஸ் நிறைவேற்றவில்லை: வைகோ 

11th Aug 2019 03:44 AM

ADVERTISEMENT

காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு நடத்துவதாக அம்மாநில மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை காங்கிரஸ் நிறைவேற்றவில்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டினார்.
மதிமுகவின் உயர்நிலைக் குழு மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் எழும்பூரில் உள்ள தாயகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமை வகித்தார். கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறியது:
என்னை யார் வசை பாடினாலும் பரவாயில்லை. காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று ஜவாஹர்லால் நேரு வாக்குறுதி கொடுத்தார். அதை நிறைவேற்றவில்லை. அதைத்தான் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டேன். 
காஷ்மீரில் ஷேக் அப்துல்லாவின் வீட்டிற்குச் சென்றபோது, காங்கிரஸ் நன்றி இல்லாதது என்று குறிப்பிட்டார். அதைத்தான் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டேன்.
காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து மத்திய பாஜக அரசு ஜனநாயக படுகொலை செய்துள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் வாஜ்பாய் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டோம் என்று பாஜகவினர் கூறுவது தவறு. 370-ஆவது பிரிவை நீக்குவோம் என்று வாஜ்பாய் எதுவும் கூறவில்லை. 
காஷ்மீருக்கான தனி அதிகாரத்தை ரத்து செய்ததை செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
அண்ணாவின் 111-ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி ஒரு நாள் மாநாட்டை செப்டம்பர் 15-ஆம் தேதி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடத்த உள்ளோம். மாநாட்டை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். 
ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டெரிக் ஓபிரையன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர் என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT