தமிழ்நாடு

ஆன்லைன் தேர்வு-மென்பொருள் கொள்முதல்: மின்ஆளுமை அமைப்பை விருப்ப நிறுவனமாகத் தேர்ந்தெடுக்கலாம்: தமிழக அரசு உத்தரவு

11th Aug 2019 03:42 AM

ADVERTISEMENT

 

ஆன்லைன் தேர்வு, மென்பொருள்கள் கொள்முதல் ஆகியவற்றுக்காக தமிழ்நாடு மின்ஆளுமை முகமையை விருப்ப நிறுவனமாகத் தேர்ந்தெடுக்கலாம் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இதுகுறித்து, தகவல் தொழில்நுட்பவியல் துறை முதன்மைச் செயலாளர் சந்தோஷ் பாபு அண்மையில் வெளியிட்ட உத்தரவு விவரம்: அரசுத் துறைகள், அரசு பொதுத்துறை நிறுவனங்கள், மாநில தன்னாட்சி பெற்ற அமைப்புகள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு மென்பொருள்கள், வன்பொருள்கள் ஆகியவற்றை கொள்முதல் செய்து அளிக்கும் விருப்ப நிறுவனமாக தமிழ்நாடு மின்னணு கழகத்தை (எல்காட்) தமிழக அரசு அங்கீகரித்து இருந்தது.
இந்த நிலையில், தமிழ்நாடு மின்ஆளுமை முகமை நிறுவனத்தையும் விருப்ப நிறுவனமாக அங்கீகரிக்க வேண்டுமென அந்த நிறுவனம் அரசுக்குக் கடிதம் எழுதி இருந்தது. 
தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் கோரிக்கையை கவனமுடன் பரிசீலித்த தமிழக அரசு, தகவல் தொழில்நுட்ப சேவைகள் மற்றும் ஆலோசனைகளை அரசுத் துறைகள், அரசு பொதுத் துறை நிறுவனங்கள், அரசு தன்னாட்சி பெற்ற அமைப்புகள் போன்றவற்றுக்கு மின்ஆளுமை முகமை வழங்கலாம் என்ற அனுமதியை வழங்கியுள்ளது.
அதன்படி, மென்பொருள் மேம்பாடு, மென்பொருள் பராமரிப்பு, பரிசோதனை, தகவல் தொழில்நுட்பப் பாதுகாப்பு சேவைகள், தரவு சேவைகள், தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் நியமனம், ஆன்லைன் தேர்வு, தரவு மைய பராமரிப்பு, ஆதார் உறுதிப்படுத்துதல் சேவைகள், டிஜிட்டல் தொழில்நுட்ப உருவாக்கம் மற்றும் பராமரிப்பு போன்ற 17 வகையான சேவைகளை அரசுத் துறைகளுக்கும், அரசின் தன்னாட்சி பெற்ற அமைப்புகளுக்கும் தமிழ்நாடு மின் ஆளுமை வழங்கலாம்.
எனவே, அரசு நிறுவனங்களும், பொதுத்துறை நிறுவனங்களும் தமிழ்நாடு மின்ஆளுமை முகமையிடம் இருந்து விருப்பத்தின் அடிப்படையில் தொழில்நுட்ப உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம். 
அதேசமயம், தகவல் தொழில்நுட்ப தயாரிப்புகள், கொள்முதல் மற்றும் ஒப்பந்தங்கள் கோரும் முறைகளில் அரசு அவ்வப்போது வெளியிடும் வழிகாட்டுதல்கள், உத்தரவுகளை தமிழ்நாடு மின்ஆளுமை முகமை பின்பற்றிட வேண்டும் என்று தனது உத்தரவில் சந்தோஷ் பாபு தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT