தமிழ்நாடு

அடுத்த 2 நாள்களுக்கு மிக பலத்த மழை: வானிலை ஆய்வு மையம்

11th Aug 2019 04:28 AM

ADVERTISEMENT


தென்மேற்குப் பருவக்காற்று வலுவாக இருப்பதால், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி ஆகிய மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் அடுத்த இரண்டு நாள்களுக்கு மிக பலத்த மழை  பெய்யும் என்று  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் சனிக்கிழமை கூறியது:

ஈரப்பதத்துடன் கூடிய தென்மேற்குப் பருவக்காற்று வலுவான நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மோதி வீசக் கூடிய நிலை நீடிக்கிறது. இதன் காரணமாக, நீலகிரி, கோயம்புத்தூர்  தேனி ஆகிய மாவட்டங்களில் மலைப்பகுதியில் அடுத்த 2 நாள்களுக்கு மிக பலத்த மழை பெய்யும். மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களான நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்யும்.  உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும். சென்னையில் பொதுவாக வானம் மேகமூட்டமாக இருக்கும். ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 

தென் மேற்குப் பருவமழை காலத்தில் சென்னையில் மழை குறைவாகத்தான் இருக்கும் என்றார் அவர். 

ADVERTISEMENT

ஆக.14 வரை பலத்த மழைக்கு வாய்ப்பு : நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் வரும் 14-ஆம் தேதி வரை பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில்  வரும் 12-ஆம் தேதி முதல் வரும் 14-ஆம்தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை : தமிழகம், புதுச்சேரி கடலோரத்தில் குறிப்பாக தென் தமிழக கடலோரப் பகுதிகளில் தென் மேற்குத் திசையில் இருந்து  மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும். கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.  எனவே, இந்தப் பகுதிகளுக்கு அடுத்த 2 நாள்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்  என்று  அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அவலாஞ்சியில் 350 மி.மீ.: சனிக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி, நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில்  350 மி.மீ. மழை பதிவானது.  மேல்பவானியில் 190 மி.மீ.,  தேவாலாவில் 160 மி.மீ., நடுவட்டம், கோயம்புத்தூர் சின்னக்கல்லாறில் 140 மி.மீ., நீலகிரி மாவட்டம் கூடலூர் பஜாரில் 130 மி.மீ.,  வால்பாறையில் 80 மி.மீ., வால்பாறை  வட்டாட்சியர் அலுவலகம்,  கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் தலா 70 மி.மீ., கோயம்புத்தூர் மாவட்டம் சூலூரில் 50 மி.மீ. மழை பதிவானது.

ADVERTISEMENT
ADVERTISEMENT