திங்கள்கிழமை 19 ஆகஸ்ட் 2019

நூலிழையில் தப்பிய திமுக, வெற்றியை நழுவவிட்ட அதிமுக!

DIN | Published: 10th August 2019 02:08 AM


குதிரைப் பந்தயத்தையும் விட பரபரப்பாக இருந்தது வேலூர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை. அதிமுக வேட்பாளர்கள் ஏ.சி.சண்முகமும், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தும் மாறிமாறி முன்னேறுவதும், பின்னடைவதுமாக போராடி, கடைசியில் வெற்றிக்கோட்டை கதிர் ஆனந்த் தொட்டுள்ளார்.  

திமுக மொத்தம் 4, 85,340 வாக்குகள் பெற, அதிமுக 4,77,199 வாக்குகள் பெற்றுள்ளது. இரண்டுக்கும் வித்தியாசம் 8,411 வாக்குகள்தாம். இந்தத் தொகுதியில் மொத்தம் 6 சட்டப்பேரவைத் தொகுதிகள். இதில், ஆம்பூர், வாணியம்பாடி, வேலூர் ஆகிய 3 தொகுதிகளில் திமுகவும், கே.வி.குப்பம், குடியாத்தம், அணைக்கட்டு ஆகிய 3 தொகுதிகளில் அதிமுகவும் கூடுதல் வாக்குகளைப் பெற்றுள்ளன.

ஏப்ரல் மாதம் புதுச்சேரி உள்ளிட்ட 39 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் திமுக வெற்றிபெற்ற 23 தொகுதிகள் மட்டுமல்லாமல், காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றிபெற்றனர்.

அந்தத் தேர்தல் முடிவுகளோடு வேலூர் மக்களவைத் தேர்தலை ஒப்பிட்டுப் பார்த்தால், தோல்வியிலிருந்து தப்பிய திமுக, வெற்றியை நெருங்கிய அதிமுக என்று சொல்லலாம்.

தேர்தலில் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றாலும், அது வெற்றிதான் என்பதை மறுப்பதற்கு இல்லை.

ஆனால், ஏப்ரலில் நடந்த தேர்தலில் அபாரமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுவிட்டு, 4 மாதங்களில்  வாக்கு வித்தியாசம் வெகுவாகச் சரிந்து வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் தோல்வி பயத்தைக் கொடுத்ததை திமுகவினராலேயே ஜீரணிக்க முடியவில்லை. இந்தச் சரிவு எதனால் ஏற்பட்டது என்பதை ஆராய வேண்டிய கட்டாயத்துக்கு திமுக தள்ளப்பட்டுள்ளது.

"மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்ற 38  பேரும் நாடாளுமன்றத்தையே நடுநடுங்க வைத்துக் கொண்டிருக்கிறோம். தபால் துறை தேர்வை ஹிந்தியில் நடத்த வேண்டும் என்பதைத் தடுத்து நிறுத்தினோம், தென்னக ரயில்வேயில் ஹிந்தியில்தான் பேச வேண்டும் என்று கூறியதைத் தடுத்து நிறுத்தினோம்' என்றெல்லாம் மு.க.ஸ்டாலின் மார்தட்டி வரும் நிலையில்தான் இந்தச் சரிவு ஏற்பட்டுள்ளது.

அதுவும் ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற்றபோது பிரதமர் பதவிக்கு மோடியா, ராகுல் காந்தியா என்பதுதான் பிரதான பிரசாரமாக இருந்தது. 

ஆனால், வேலூரைப் பொருத்தவரை முதல்வர் எடப்பாடி பழனிசாமியா, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினா என்பதுதான் பிரதானமாக இருந்தது.

இதில், தற்போது வாக்குகள் சரிந்ததன் அடிப்படையில் பார்க்கும்போது மு.க.ஸ்டாலின் ஒன்றும் முந்திவிடவில்லை, எடப்பாடி ஒன்றும் பிந்திவிடவில்லை என்பதாகத்தான் தீர்ப்புகள் வந்துள்ளன.

திமுகவின் வெற்றிக்குக் கைகொடுத்தது வேலூர், ஆம்பூர், வாணியம்பாடி ஆகிய 3 தொகுதிகள்தாம். இந்தத் தொகுதிகளில் முஸ்லிம் வாக்குகள் கணிசமாக உள்ளன. முஸ்லிம்களின் வாக்குகள் பொதுவாகவே திமுகவுக்குக் கிடைக்கும் என்றாலும், தேர்தல் நடைபெற்ற நாளான ஆகஸ்ட் 5-ஆம் தேதிதான் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கான தனி அதிகாரம் ரத்து செய்யும் மசோதாவும், காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக மாற்றும் மசோதாவும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. 

வேலூரில் வாக்குப்பதிவு நடைபெற்றபோது காலையில் மந்தமாகவும் பிற்பகலுக்கு மேல் வேகமாகவும் இருந்தது. காஷ்மீர் தீர்மானத்துக்குப் பிறகு இஸ்லாமிய சமுதாய மக்கள் அதிக அளவில் வந்து வாக்களித்தனர் என்று கூறப்பட்டது. இந்த வாக்குகள்தாம் திமுகவை வெற்றிக்கு அழைத்துச் சென்றிக்கக் கூடும் எனத் தெரிகிறது. இதே 3 தொகுதிகளில் முதல் 8 சுற்றுகள் வரையும் கூட அதிமுகதான் முன்னணியில் இருந்தது. இந்த 8 சுற்றுகளில் கிடைத்த வாக்குகளைப் பொதுவான வாக்குகள் என்றோ, முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த வாக்குகள் என்றோ அறுதியிட்டு கூற முடியாது என்றாலும், திமுகவுக்கு கடந்த தேர்தலில் கிடைத்த பொதுவான வாக்குகள் இப்போது குறைந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. அதுவும் திமுகவின் கோட்டை என்று  அழைக்கப்படும் வேலூரிலேயே குறைந்திருக்கிறது. 

வேலூரில் நாயகம் என அழைக்கப்படுபவர் துரைமுருகன். அவரது மகன் போட்டியிட்ட நேரத்தில் வாக்குகள் குறைந்துள்ளன. இது பொதுவான வாக்குகள் என்பது மட்டுமல்லாமல், கட்சியினரின் வாக்குகளும் சரிந்திருப்பாக திமுகவினராலேயே தெரிவிக்கப்படுகிறது. 

இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது ஏப்ரல் மாதத்தில் அதிமுக அடைந்த தோல்வியைவிட, வேலூர் தேர்தலில் அதிமுக முன்னேற்றம் அடைந்திருப்பதாகவே பார்க்கப்படுகிறது. 

அதுவும், எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின் 5 நாள்களுக்கு மேல் பிரசாரத்தில் ஈடுபட்டார். வீதிவீதியாக நடந்து சென்று மு.க.ஸ்டாலின் வாக்குச் சேகரித்தார். ஆனால்,  முதல்வர் எடப்பாடி பழனிசாமி 3 நாள்கள் மட்டுமே பிரசாரத்தில் ஈடுபட்டார். ஏற்கெனவே, வெற்றிபெற்ற கட்சியின் தலைவரே தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும்போது, 3 நாள்கள் பிரசாரத்தை நிறைவு செய்தது போதாமையாகிவிட்டது.

அதனால், இந்தத் தேர்தலைப் பொருத்தவரை தோல்வியிலிருந்து தப்பிய திமுக, வெற்றியை நெருங்கிய அதிமுக என்பதே சரியாக இருக்கும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

ஆவின் பால் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது
அவசரகோலத்தில் அரசின் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள்
கேந்திரிய வித்யாலயத்துக்கு நிலம் கை விரிக்கிறதா புதுச்சேரி அரசு?
அரசு பெண்கள் பள்ளிக்கு மாற்று இடம் வலுத்து வருகிறது கோரிக்கை..!
ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வால் 4.60 லட்சம் உற்பத்தியாளர்கள் பயனடைவர்: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி