திங்கள்கிழமை 19 ஆகஸ்ட் 2019

அத்திவரதர் சிலை வைக்கப்படும் அனந்தசரஸ் குளத்தை பராமரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?

DIN | Published: 10th August 2019 03:39 AM

அத்திவரதர் சிலை வைக்கப்படும் அனந்தசரஸ் குளத்தை எதிர்காலத்தில் சுத்தமாக பராமரிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. 

சென்னை உயர்நீதிமன்றத்தில் அசோகன்  என்பவர் தாக்கல் செய்த மனுவில், "40 ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியே எடுக்கப்பட்ட அத்திவரதர் சிலை பக்தர்கள் தரிசனத்துக்காக வைக்கப்பட்டுள்ளது. தற்போது அத்திவரதர் சிலை வெளியே வைக்கப்பட்டுள்ளதால், அனந்தசரஸ் குளத்தை ஆழமாக தூர்வாரி சுத்தம் செய்ய உத்தரவிட வேண்டும். ஒருவேளை தவறிவிட்டால், குளத்தை தூர்வாரி சுத்தம் செய்ய 40 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்' என கோரியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது அனந்தசரஸ் குளத்தில் அனைத்து கழிவுகளும் அகற்றப்பட்டு முறையாக சுத்தம் செய்யப்பட்டுள்ளதாக, இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அனந்தசரஸ் குளம் தூர்வாரி சுத்தம் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத்துறையின் அரசு சிறப்பு வழக்குரைஞர்கள் எம்.மகாராஜா, எம்.கார்த்திகேயன் ஆகியோருக்கு உத்தரவிட்டிருந்தது. 

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆதிகேசவலு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சிறப்பு வழக்குரைஞர்கள் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், "அத்திவரதர் சயனகோலத்தில் 40 ஆண்டுகள் ஓய்வு எடுக்கும் புனிதமான இடமாக அனந்தசரஸ் குளம் கருதப்படுகிறது. இந்தக் குளத்தில் அத்திவரதர் மண்டபத்தின் கீழ் 24 அடி ஆழத்தில் சிலை வைக்கப்படும். சிலையை உள்ளே வைத்து பாம்பு தலையை போன்ற கற்களைக் கொண்டு பூட்டி வைக்கப்படும். இந்த குளத்துக்கு மழைநீர் தான் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. இந்தக் குளத்தில் கடுமையான வறட்சி காலத்திலும் தண்ணீர் வற்றாது. இந்தக் குளத்தினுள் யாரும் செல்லவும் கூடாது, பயன்படுத்தவும் முடியாது. நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு இந்த குளத்தை சுத்தம் செய்வது கிடையாது. இயற்கையாகவே இந்தக் குளத்தில் உள்ள மீன்கள் உள்ளிட்ட பிற உயிரினங்கள் குளத்தை சுத்தமாக பராமரித்து வருகின்றன. இந்தக் குளத்தினுள் ஏகாந்த கோலத்தில் சாமி சிலை இருப்பதாக நம்பப்படுவதால், அங்கு நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினால் தேவையில்லாத ஒலி மாசு ஏற்படும். மேலும் அது சாமியின் சிலையைப் பாதிக்கும் வாய்ப்புள்ளது. இந்த ஆண்டு, பக்தர்களின் காணிக்கை மூலம் கோயிலுக்கு ரூ.6 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இந்தத் தொகையானது, கோயில் மற்றும் அனந்தசரஸ் குளத்தை பராமரிக்க செலவிடப்படும். குளம் இயற்கையாகவே சுத்தமாகி விடுவதால், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுத்தம் செய்ய தேவையில்லை. சாமியின் சிலையை எடுக்கும்போதும், வைக்கும் போதும் அனந்தசரஸ் குளத்தில் உள்ள தண்ணீர், மீன் உள்ளிட்ட உயிரினங்கள் பொற்றாமரை குளத்துக்கு மாற்றப்படுகின்றன' என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதனையடுத்து அறிக்கையைப் படித்து பார்த்த நீதிபதி, "அனந்தசரஸ் குளம் குறித்து ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் குளத்தில் இருந்து சேறு, நெகிழி கழிவுகள் அகற்றப்பட்டதாகக் கூறப்பட்டிருந்தது. எனவே எதிர்காலத்தில் குளத்தைப் பராமரிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து விரிவான அறிக்கையை இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டு, விசாரணையை வரும் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

ஆவின் பால் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது
அவசரகோலத்தில் அரசின் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள்
கேந்திரிய வித்யாலயத்துக்கு நிலம் கை விரிக்கிறதா புதுச்சேரி அரசு?
அரசு பெண்கள் பள்ளிக்கு மாற்று இடம் வலுத்து வருகிறது கோரிக்கை..!
ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வால் 4.60 லட்சம் உற்பத்தியாளர்கள் பயனடைவர்: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி