வருவாய் கொட்டும் தேனீ வளர்ப்பு

வருவாய் கொட்டும் தேனீ வளர்ப்பு

வருவாய் கொட்டும் தேனீ வளர்ப்பு குறித்து திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் பரிந்துரை செய்துள்ளனர். 


நீடாமங்கலம்: வருவாய் கொட்டும் தேனீ வளர்ப்பு குறித்து திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் பரிந்துரை செய்துள்ளனர். 

இதுதொடர்பாக வேளாண் விஞ்ஞானிகள் ராஜா.ரமேஷ், மு.ராமசுப்பிரமணியன் ஆகியோர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேன் மற்றும் தேனீ வளர்ப்பின் வரலாறானது பன்னெடுங்காலத்துக்கு முற்பட்டது. தேனீ வளர்ப்பானது வேளாண் சார்ந்த தொழில்களில் அதிக முதலீடு இல்லாமல் தொடர்ந்து வருமானம் தரக்கூடிய உப தொழிலாகும். இன்றைய காலகட்டத்தில் வேலையில்லா திண்ணடாட்டத்தைக் குறைப்பதற்கும், கிராம பண்ணை மகளிரும் ஈடுபட்டு வருவாய் ஈட்டும் தொழிலாக தேனீ வளர்ப்பு விளங்குகிறது. இதனால் தனி மனித வருமானமும், கிராமப்புற பொருளாதாரமும் உயரும். மேலும், தேனீக்களால் அயல் மகரந்தச்சேர்க்கை நடைபெற்று வேளாண் உற்பத்தியும் அதிகரிக்கிறது. இந்தியாவில் 2017-18-ஆம் ஆண்டில் 1.05 லட்சம் மெட்ரிக் டன் தேனானது உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதில் 51,547 மெட்ரிக் டன் தேனானது அதாவது உற்பத்தியில் 50 சதவீதத்துக்கும் மேல் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.  உலக அளவில் தனி மனிதர்களால் சராசரியாக ஆண்டுக்கு 250 முதல் 300 கிராம் தேன் உண்ணப்படுகிறது. ஆனால் இந்தியாவில் சராசரியாக 50 கிராம் மட்டுமே தேன் உண்ணப்படுகிறது. உலக அளவில் அதிக அளவாக ஜெர்மனியில் ஆண்டொன்றுக்கு 2 கிலோ தேன் உண்ணப்படுகிறது. ஆசிய கண்டத்தைப் பொருத்தளவில் ஜப்பானில் அதிக அளவாக 700 கிராம் தேன் உண்ணப்படுகிறது.

தேனீ வளர்ப்புக்கான மூலப்பொருளானது பூக்களில் இருக்கும் மகரந்தம் ஆகும். காட்டு வகை மற்றும் சாகுபடி செய்யப்படும் 500-க்கும் மேற்பட்ட வகையான பூக்கும் தாவரங்களானது மகரந்தத்துக்கு முக்கிய ஆதாரமாகத் திகழ்கிறது.

தேனீ வகைகள்...

மலைத் தேனீ: அளவில் பெரியதான இவை 20 மி.மீ. நீளமுடையவை. மிகவும் ஆக்ரோஷமாகக் காணப்படுவதால் வளர்ப்பதற்கு ஏற்றவை அல்ல. இவை மலைகள், அணைக்கட்டுகள், உயர்ந்த கட்டடங்கள் உள்ளிட்ட திறந்தவெளியில் ஒற்றை அடை கட்டும். அடிக்கடி இடம்விட்டு இடம் பெயரும் தன்மை கொண்டவை. வருடத்துக்கு அதிகபட்சாக 60 கிலோ தேன் கிடைக்கும். இவை மகரந்தச் சேர்க்கைக்கு அதிகம் உதவுகிறது.

கொம்புத் தேனீ:  திறந்தவெளியில் மரங்களின் கிளை அல்லது கொம்புகளில் அளவில் சிறிய ஒற்றை அடை கட்டும்  இவை, வளர்ப்பதற்கு ஏற்றவை அல்ல. இடம்விட்டு இடம் பெயரும் தன்மை கொண்ட இவற்றின் கூடுகள் மரக் கிளைகளில் காணப்படும். வருடத்துக்கு குறைந்தளவாக 0.5 கிலோ தேன் மட்டுமே கிடைக்கும். 

இந்தியத் தேனீ:  இவை பெட்டிகளில் வளர்க்கத்தக்க தேனீக்கள் ஆகும். 

இடம்விட்டு இடம் பெயரும் தன்மையற்ற  இவை, அடுக்கடுக்காக பல அடைகளை வெளிச்சம் குறைவான மரப்பொந்துகள், சுவர் இடைவெளி மற்றும் கிணற்றுப் பகுதியில் கற்களுக்கு இடையிலும் கூடு கட்டும். வருடத்துக்கு 5 முதல் 10 கிலோ தேன் தரவல்லது.

இத்தாலியத் தேனீ:  இத்தாலியிலிருந்து இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட இவை பெட்டிகளில் வளர்க்கத்தக்க தேனீக்கள் ஆகும். அடுக்கடுக்காக பல அடைகளை வெளிச்சம் குறைவான இடத்தில் கட்டும்.  அதிக தேன் விளைச்சலாக வருடத்துக்கு 5 முதல் 10 கிலோ தேன் தரவல்லது. வணிகரீதியாக வளர்ப்பதற்கு மிகவும் ஏற்ற வகை தேனீக்களாகும்.  

கொசுத் தேனீ:    தேனீ வகைகளிலேயே அளவில் மிகவும் சிறியவை. இவற்றுக்கு கொடுக்குகள் கிடையாது. மண் சுவர்களிலும், மரப்பொந்துகளிலும் கூடு கட்டும்.  மண் பானைகளிலும் இவற்றை வளர்க்கலாம். வருடத்துக்கு மிகவும் குறைந்தளவே அதாவது ஒரு கூட்டுக்கு 100 கிராம் மட்டுமே தேன் கிடைக்கும். இந்த தேனுக்கு மருத்துவ குணமுண்டு. 

தேனீ குடும்பம்: தேனீக்கள் கூட்டம் கூட்டமாக குடும்பமாக வாழ்பவை.  ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு ராணி தேனீ, சில நூறு ஆண் தேனீக்கள், 25,000-க்கும் மேற்பட்ட வேலைக்கார அல்லது பணி தேனீக்கள் என ஒரு கூட்டில் காணப்படும்.

அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெறும் பயிர்கள்...

பழ வகை பயிர்கள்: மா, கொய்யா, மாதுளை, சீத்தாப்பழம், அத்தி, பப்பாளி, ஆப்பிள், திராட்சை, பேரிக்காய்.

காய்கறிப் பயிர்கள்: கத்திரி, வெண்டை, தக்காளி, கொத்தமல்லி, வெங்காயம், பூசணி, முட்டைக்கோசு, காலிஃபிளவர், கேரட்.

எண்ணெய்வித்துப் பயிர்கள்: எள், சூரியகாந்தி, கடுகு மற்றும் தென்னை, கோகோ, தர்ப்பூசணி உள்ளிட்டவற்றில் அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெறுவதில் தேனீக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. 

தேனில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, வைட்டமின் பி 3, பி 6 வைட்டமின் சி, கால்சியம், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம் மற்றும் துத்தநாகச் சத்துகள் அடங்கியுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com