திங்கள்கிழமை 19 ஆகஸ்ட் 2019

இதயத்தில் துளை, கல்லீரலில் புற்றுநோய்க் கட்டி: குழந்தையைக் காப்பாற்றி மருத்துவர்கள் சாதனை

DIN | Published: 07th August 2019 02:49 AM


குறைப்பிரசவத்தில் பிறந்து, பல்வேறு பாதிப்புக்குள்ளான குழந்தையை, அப்பல்லோ டாக்டர்கள் தொடர் சிகிச்சையின் வாயிலாக காப்பாற்றியுள்ளனர்.
சென்னை தாம்பரத்தைச் சேர்ந்தவர்கள் ரங்கநாதன்-காயத்ரி. இந்தத் தம்பதிக்கு, 2018 நவம்பர் மாதம், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில், எட்டு மாத குறை பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையின் எடை, 1.2 கிலோவாக இருந்தது. மேலும், குழந்தையின் இதயத்தில் துளை இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, நுரையீரல் பாதிப்பும், கல்லீரலில் புற்றுநோய் கட்டி இருப்பதும் தெரிய வந்தது. 
இதையடுத்து, எட்டு மாதங்களில், குழந்தைக்கு தொடர் சிகிச்சை அளித்து, அப்பல்லோ டாக்டர்கள் காப்பாற்றியுள்ளனர். தற்போது, குழந்தைக்கு, நேத்ரன் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அப்பல்லோ மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் பிரிவு மருத்துவர் லதா காஞ்சி பார்த்தசாரதி கூறியதாவது: குழந்தை மிகவும் குறைவான எடையில் இருந்தது. குழந்தையின் நுரையீரல் அடிக்கடி செயலிழந்தபடி இருந்தது. மேலும், கிருமித்தொற்று பாக்டீரியாக்கள் ரத்தத்தில் பரவி, உடல் உறுப்புகளை செயலிழக்கக் கூடிய, செப்சிஸ் பாதிப்பும் இருந்தது. கல்லீரலில் இருந்த புற்றுநோய்க் கட்டியும் பெரியதாகி கொண்டிருந்தது. இதனால், கல்லீரல் அறுவை சிகிச்சைக்கு முன், புற்றுநோய்க் கட்டியை சுருங்க செய்ய வேண்டும் என கீமோதெரபி சிகிச்சையை ஆரம்பித்தோம். ஆனால், இதயத்தில் துளை இருந்ததால், அவற்றை தொடர முடியவில்லை. 
இதையடுத்து, குழந்தைக்கு சிக்கலான இதய அறுவை சிகிச்சை செய்தோம். அதன்பின், மீண்டும் செப்சிஸ் தாக்குதல் ஏற்பட்டது. இதனால், குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது. ஆனால், குழந்தை விட்டுக்கொடுக்காமல் தொடர்ந்து போராடியது. நாங்களும்  போராடினோம். இதய அறுவை சிகிச்சை முடிந்த ஒரு மாதத்திற்கு பின், கல்லீரலில் இருந்த கட்டியை அகற்றினோம். மூன்றாவது முறையாக செப்சிஸ் தாக்குதல் ஏற்பட்டது, ஆண்டிபயாடிக் வாயிலாக சரிசெய்தோம். 
தொடர் சிகிச்சையின் காரணமாக, குழந்தையின் மண்டை ஓடு, கூம்பு போல இணைய துவங்கியது. இதை குணப்படுத்த, கிரானியல் அறுவை சிகிச்சை மேற்கொண்டோம். கடைசி கீமோதெரபி, ஜூலை 4-இல், செய்யப்பட்டது. தற்போது, குழந்தையின் உடல்நிலை நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

அவசரகோலத்தில் அரசின் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள்
கேந்திரிய வித்யாலயத்துக்கு நிலம் கை விரிக்கிறதா புதுச்சேரி அரசு?
அரசு பெண்கள் பள்ளிக்கு மாற்று இடம் வலுத்து வருகிறது கோரிக்கை..!
ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வால் 4.60 லட்சம் உற்பத்தியாளர்கள் பயனடைவர்: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி
அனந்தசரஸ் திருக்குளத்தில் எழுந்தருளிய அத்திவரதர்