திங்கள்கிழமை 19 ஆகஸ்ட் 2019

தேசிய மருத்துவ ஆணையத்துக்கு எதிர்ப்பு: 1 லட்சம் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்

DIN | Published: 01st August 2019 02:03 AM


தேசிய மருத்துவ ஆணையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர்.
அதன்படி, மாநிலத்தில் உள்ள 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள், கிளீனிக்குளில் புறநோயாளிகள் சிகிச்சையை அவர்கள் புறக்கணித்தனர்.
அதேவேளையில், அவசர சிகிச்சைகள் மற்றும் உள்நோயாளிகளுக்கான மருத்துவ சிகிச்சைகளில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அரசு மருத்துவமனைகளைப் பொருத்தவரை மருத்துவர்கள் வழக்கம் போல பணிக்கு வந்தனர்.
இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு (எம்சிஐ) பதிலாக தேசிய மருத்துவ ஆணையத்தை (என்எம்சி) நடைமுறைப்படுத்தும் மசோதா மாநிலங்களவையில் அண்மையில் நிறைவேறியது.
அந்த ஆணையம் அமலாக்கப்பட்டால்  மருத்துவத் துறைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என பல்வேறு தரப்புகளில் இருந்து விமர்சனங்கள் எழுந்தன. இந்தச் சூழலில், தேசிய மருத்துவ ஆணையத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) நாடு முழுவதும் 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்தது.  
அதன்படி, புற நோயாளிகள் சிகிச்சையைப் புறக்கணித்து  தேசிய அளவிலான வேலைநிறுத்தப் போராட்டத்தில் மருத்துவர்கள் புதன்கிழமை ஈடுபட்டனர். தமிழகத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் அதில் பங்கேற்றனர். இதனால் சிகிச்சைக்காக மருத்துவமனைகள், கிளீனிக்குகளை நாடி வந்த நோயாளிகள் மருத்துவர்கள் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
இதனிடையே, தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் கருப்புப் பட்டை அணிந்து மருத்துவர்கள் பணியாற்றினர்.
அதன் ஒரு பகுதியாக, சென்னை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மருத்துவர்கள் கருப்பு சட்டை, கருப்பு பேட்ஜ் அணிந்து ஒரு மணி நேரம் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் ஐஎம்ஏ அமைப்பைச் சேர்ந்த மருத்துவர்களும், அரசு மருத்துவர்களும், மருத்துவக் கல்லூரி மாணவர்களும் பங்கேற்றனர். 
இதேபோன்று, மாநிலத்தின் 100 இடங்களில் ஆர்ப்பாட்டங்களும், தர்னா போராட்டங்களும் நடைபெற்றதாக ஐஎம்ஏ நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக, சென்னை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்தின்போது அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் (எஸ்டிபிஜிஏ) மாநில நிர்வாகி பெருமாள் பிள்ளை கூறியதாவது:
மருத்துவர்களுக்கும் நாட்டு மக்களுக்கும் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ள தேசிய மருத்துவ ஆணையத்தை  எதிர்த்து மருத்துவர்கள் அனைவரும் தெருவில் இறங்கி போராடிக்கொண்டிருக்கின்றோம். மருத்துவ மாணவர்கள், மருத்துவர்கள் மட்டுமின்றி பொதுமக்களுக்கும் மிகப்பெரிய பாதிப்பை இந்த ஆணையம் ஏற்படுத்தும்.
நீட் நுழைவுத் தேர்வைத் தாண்டி மருத்துவ படிப்பில் நுழையும் மாணவர்களுக்கு மீண்டும் நெக்ஸ்ட் எனப்படும் தேர்வை நடத்தி அவர்களுக்கு மேலும் பல தடைகளை உருவாக்குவது ஏற்புடையதல்ல என்றார் அவர்.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

ஆவின் பால் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது
அவசரகோலத்தில் அரசின் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள்
கேந்திரிய வித்யாலயத்துக்கு நிலம் கை விரிக்கிறதா புதுச்சேரி அரசு?
அரசு பெண்கள் பள்ளிக்கு மாற்று இடம் வலுத்து வருகிறது கோரிக்கை..!
ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வால் 4.60 லட்சம் உற்பத்தியாளர்கள் பயனடைவர்: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி