சனிக்கிழமை 24 ஆகஸ்ட் 2019

3 ஆண்டுகளில் 19,169 ரயில் பெட்டிகள் தயாரிப்பு: ரயில்வே நிர்வாகம் இலக்கு

DIN | Published: 29th April 2019 05:06 AM

அடுத்த 3 ஆண்டுகளில் 19,169 ரயில் பெட்டிகளைத் தயாரிக்க இந்திய ரயில்வேத்துறை இலக்கு நிர்ணயித்துள்ளது. இதன்மூலம், 2021-ஆண்டுக்குள் 1,000 புதிய  ரயில்களை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்த இயலும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில், 300 விரைவு ரயில்கள் இயக்கவும், அந்த்யோதயா, ஹம்சபர், இரட்டை அடுக்கு குளிர்சாதன ரயில் (டபுள்டெக்கர்) வகைகளில் சிறப்பு வகை ரயில்களை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

2.30 கோடி பேர் பயணம்: நாடு முழுவதும் 3,500 முன்பதிவு ரயில்கள், 4,600 முன்பதில்லா ரயில்கள், 5,000 மின்சார ரயில்கள் என்று மொத்தம் 13,100 ரயில்கள் தினசரி இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் தினமும் சராசரியாக 2 கோடியே 30 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். சென்னையில் உள்ள ஐ.சி.எஃப் (இணைப்பு பெட்டி தொழிற்சாலை), உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலியில் உள்ள நவீன பெட்டி தொழிற்சாலை (எம்சிஎஃப்), பஞ்சாப்பின் கபுர்தலாவில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலை (ஆர்சிஎஃப்), மேற்கு வங்கத்தில் உள்ள ஹால்டியா என நான்கு ரயில் பெட்டி தொழிற்சாலைகளில் ரயில்வேக்கு தேவையான ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. 

19,169  பெட்டிகள் தயாரிக்க இலக்கு: இந்தத் தொழிற்சாலைகளில் அடுத்த மூன்று ஆண்டுகளில் மொத்தம் 19,169 ரயில் பெட்டிகளை உற்பத்தி செய்வதற்கான அட்டவணையை ரயில்வே வாரியத்தின் இயந்திரவியல் பொறியியல் இயக்குநர் கோவிந்த் பாண்டே ஜனவரியில் வெளியிட்டார். அதில், 2019-ஆம் ஆண்டில் 5,940 பெட்டிகள்,  2020-ஆம் ஆண்டில்  6,534 பெட்டிகள், 2021-ஆம் ஆண்டில்  6,695 பெட்டிகள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மின்சார ரயில் பெட்டிகள், குளிர்சாதன வகை பெட்டிகள், படுக்கை மற்றும் இருக்கை வசதி கொண்ட முன்பதிவு பெட்டிகள், முன்பதிவில்லாத பெட்டிகள், சமையலறை பெட்டிகள், பார்சல் பெட்டிகள் என்று பல்வேறு வகைகளில் ரயில் பெட்டி தயாரிப்பு மற்றும் எண்ணிக்கை குறித்து அந்த அட்டவணையில் இடம்பெற்றுள்ளன. இதற்குத் தேவையான நிதி, மத்திய அரசு பட்ஜெட்டுகளில் ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உலகத் தரத்தில் ரயில்கள் இயக்க பெட்டிகள் தயாரிப்பு: இது குறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியது: மக்களின் போக்குவரத்து தேவைகள் பல மடங்கு அதிகரித்துள்ளதால், ரயில் போக்குவரத்தை மேலும் மேம்படுத்த ரயில்வே வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டுக்கான ரயில் பெட்டி தயாரிப்பு பட்டியலைத்தான் ரயில்வே வாரியம்  அனுப்பும். ஆனால், முதன்முறையாக 2019, 2020, 2021 ஆம் ஆண்டுக்கான ரயில் பெட்டி தயாரிப்பு இலக்கு பட்டியலை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அனுப்பியுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 19,169 பெட்டிகளி தயாரிக்கப்படவுள்ளன. உற்பத்தி அட்டவணைப்படி, ஆண்டுக்கு 200 வீதம் 600 மூன்றாம் வகுப்பு குளிர்சாதன பெட்டிகள்,  ஹம்சபர் ரயிலுக்கு தயாராகின்றன. இதனைக் கொண்டு 30 ஹம்சபர் ரயில்கள் இயக்கலாம். உலகத்தரத்தில் 32 ரயில்கள் இயக்க 640 பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. 20 அந்த்யோதயா ரயில்களை இயக்க 400 பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. இதுதவிர, 3, 396 மெயின்லைன் இ.எம்.யு. பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. இதைக் கொண்டு 400 குறுகிய தூர பயணிகள் ரயில்களை இயக்கமுடியும். இந்த வகை ரயில்கள் சராசரியாக 8 பெட்டிகளுடன் இயக்கப்படுகின்றன. 

ரயில்-18: மின்சார ரயில் பெட்டி, எல்எச்பி , ஏசி பெட்டி, ஹம்சர், ரயில்-18 போன்ற இன்ஜினுடன் கூடிய ரயில்கள், சதாப்தி, தேஜஸ், டபுள்டெக்கர் உள்ளிட்ட ரயில் வகைகள் இதில் அதிகமாக இடம் பெறும். மற்ற தொழிற்சாலைகளை ஒப்பிடுகையில் சென்னை ஐசிஎப்-இல் தான் அதிகளவில் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. அதாவது ஆண்டுக்கு 3,300-க்கும் மேற்பட்ட பெட்டிகள் இங்கு தயாரிக்கப்படுகின்றன.  தயாரிக்கப்படும் ரயில் பெட்டிகள் பழைய பெட்டிகளுக்கு மாற்றாகவும், புதிய ரயில்கள் இயக்கவும் பயன்படுத்தப்படும் என்றார் அவர்.

1,000 ரயில்களுக்கான பெட்டிகள்: இது குறித்து தட்சிண ரயில்வே தொழிலாளர்கள் சங்க துணைப் பொதுச் செயலாளர் மனோகரன் கூறியது: ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள அடுத்த 3 ஆண்டுகளுக்கான ரயில் பெட்டிகள் தயாரிப்பு பட்டியலை பார்க்கும்போது, அதிகபட்சமாக 1,000 ரயில்களுக்கான பெட்டிகள் தயாராகும். குறிப்பாக, முன்பதிவில்லாத அந்த்யோதயா ரயில்களுக்காக 300 பெட்டிகள் தயாரிக்கப்படவுள்ளன. இந்த பெட்டிகளை மாற்று பெட்டிகளாக பயன்படுத்த போவதில்லை. எனவே, இதன் மூலம் 15-க்கும் மேற்பட்ட அந்த்யோதயா ரயில்களை அறிமுகப்படுத்தலாம். இதுதவிர, மின்சார ரயில் பிரிவில், 3, 396 பெட்டிகளைத் தயாரிப்பதால் 400 குறுகிய தூர பயணிகள் ரயில்களை இயக்கலாம். இந்த வகை ரயில்களுக்கு குறைந்தது 6 பெட்டிகள் போதுமானது. முன்பதிவு இல்லாத கூடுதல் வசதிகள் கொண்ட 1,663 தீனதயாளு பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. ஏறக்குறைய 300 விரைவு ரயில்களை இந்தப் பெட்டிகளை கொண்டு அறிமுகப்படுத்த முடியும். இதுதவிர, 46 பகல் நேர விரைவு ரயில்களுக்கான 122 குளிர்சாதன  மற்றும், 619 குளிர்சாதனம் அல்லாத இருக்கை வசதி பெட்டிகள் உற்பத்தி செய்யப்படவுள்ளன. பெருமளவில் மின்சார ரயில் பெட்டிகள் தயாராகின்றன. ஒரு ரயிலை அறிமுகப்படுத்த 10 முதல் 12 பெட்டிகள் போதும். 

இதுதவிர, இரட்டை அடுக்கு குளிர்சாதன உதய் ரயில் ஒன்றும், அதி நவீன தேஜா ரயில்களை இயக்கவும் பெட்டிகள் தயாரிப்பில் உள்ளன. ரயில் -20 பெட்டிகள் உற்பத்தி இந்த அட்டவணையில் வராது. திட்டமிட்டப்படி ரயில் பெட்டிகள் உற்பத்தி நடைபெற்று வருகிறது. எனவே,  வரும் 2021 ஆண்டுக்குள் ஏறத்தாழ 1,000 புதிய ரயில்களை இந்திய ரயில்வேத்துறையால் அறிமுகப்படுத்த முடியும் என்றார் அவர்.

புதிய ரயில்கள்

2014-15-ஆம் ஆண்டில் 249 ரயில்களும், 2015-16 இல் 151 ரயில்களும், 2016-17 இல் 215 ரயில்களும், 2017-18 இல் 136 ரயில்களும், 2018-19 இல் 4 ரயில்களும் என்று மொத்தம் 755 புதிய ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதுதவிர,  114 ரயில்கள் (57 ஜோடி)  ரத்து செய்யப்பட்டன. அகலப்பாதை பணிகள், 30 சதவீதத்துக்கும் குறைவான பயணிகள் போன்ற காரணங்களால் இந்த ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

விவசாயத்துக்கு கடல் நீரைப் பயன்படுத்த தொழில்நுட்ப ஆராய்ச்சி: எம்.எஸ்.சுவாமிநாதன் வலியுறுத்தல்
அரசு மருத்துவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம்
தேசியத் திறனாய்வுத் தேர்வு: செப். 7 வரை விண்ணப்பிக்கலாம்
ஒரே வளாகத்தில் செயல்படும் அரசுப் பள்ளிகள்: நிர்வாக நடைமுறைகள் மாற்றம்
ரத்த அழுத்தம்: 46 சதவீதத்தினருக்கு விழிப்புணர்வு இல்லை