திங்கள்கிழமை 20 மே 2019

சொந்த கிராமத்தை தத்தெடுப்பேன்: தங்கம் வென்ற தடகள வீராங்கனை கோமதி

DIN | Published: 29th April 2019 03:47 AM

தனது சொந்த கிராமத்தை தத்தெடுத்து அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பேன் என்றார்  ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற திருச்சி வீராங்கனை கோமதி மாரிமுத்து.

திருச்சி மாவட்டம், முடிகண்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் எம்.கோமதி மாரிமுத்து(30).  இவர் தோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்றார். இதையடுத்து,  விமானம் மூலம் ஞாயிற்றுக்கிழமை திருச்சிக்கு வந்த கோமதிமாரிமுத்துவை மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு பூங்கொத்து கொடுத்து வரவேற்று  வாழ்த்தினார்.

இதைத்தொடர்ந்து,  விமான நிலையத்துக்கு வெளியே காத்திருந்த  கல்லூரி மாணவிகள்,  பொதுமக்கள், அரசியல் கட்சிப் பிரமுகர்கள், தன்னார்வலர்கள் உற்சாக வரவேற்பு  அளித்தனர்.

இதையடுத்து கோமதி மாரிமுத்து செய்தியாளர்களிடம் கூறுகையில், போட்டியில் பங்கேற்கும் போது கிழிந்த ஷூ அணிந்திருந்தது உண்மை தான். எனக்கு அது ராசியானது என்பதால் தான் அதனை அணிந்திருந்தேன். எனக்கு பயிற்சி அளித்த காவல்துறையில் பணியாற்றும் ராஜாமணிக்கு நன்றி. 
இதுவரை என்னை யாரென்று தெரியாமல் இருந்தது. தற்போது அனைவருக்கும் தெரிந்துவிட்டதால் பலரும் உதவி செய்ய முன்வந்துள்ளனர். அவர்கள் உதவி செய்தால் ஒலிம்பிக் போட்டியிலும் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பேன். எனது கிராமத்துக்குத் தேவையான அடிப்படை வசதிகளை அதிகாரிகளிடம் பேசி நிறைவேற்றுவேன். 

மேலும், எனது கிராமத்தை தத்தெடுத்து அதன் வளர்ச்சிக்காக பாடுபடுவேன். பரிசு கிடைத்தது மகிழ்ச்சியை தந்தாலும் சிறுவயதிலிருந்தே  எனக்கு ஊக்கமளித்த என் தந்தை இல்லாதது மிகுந்த கவலையளிக்கிறது. 
கிராமப்புற இளைஞர்கள் அரசு தரும் நலத்திட்டங்களை பயன்படுத்தி கடினமாக உழைத்தால் வெற்றி உறுதி என்றார். இதையடுத்து, முடிகண்டம் கிராமத்துக்குச்சென்ற  கோமதிக்கு  கிராம மக்கள் பட்டாசு வெடித்துஉற்சாக வரவேற்பு அளித்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: வாகன ஓட்டிகள் அச்சம்
அமைதியாக முடிந்தது 4 பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்
தமிழகத்தில் 13 இடங்களில் வெயில் சதம் 
காஞ்சி மகா பெரியவர் ஜயந்தி மகோற்சவம்: தங்கத்தேரில் பவனி வந்த மகா பெரியவர்
மருத்துவமனைகளுக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அனுமதி: அரசு மருத்துவர்கள் ஆட்சேபம்