வியாழக்கிழமை 22 ஆகஸ்ட் 2019

புயல் எச்சரிக்கை: விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன தெரியுமா? 

DIN | Published: 27th April 2019 08:24 PM


ஃபானி புயல் பாதிப்பில் இருந்து மரப்பயிர்கள், வேளாண் பயிர்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகளுக்கு வேளாண்மைத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து ஈரோடு வேளாண்மை இணை இயக்குநர் வ.குணசேகரன் தெரிவித்துள்ளதாவது:

இந்திய வானிலை ஆய்வு மைய அறிக்கையின்படி ஏப்ரல் 30, மே 1 ஆம் தேதி தமிழக வட கடலோர மாவட்டங்களில் ஃபானி புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காற்றுடன் கூடிய கனமழையால் தென்னை உள்ளிட்ட ஆண்டு தோட்டக்கலை மரங்களை பாதுகாக்கும் வகையில் விவசாயிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மகசூல் தரும் தென்னை மரங்களின் தலை பாகத்தில் தேங்காய், இளநீா், பச்சை ஓலை, காய்ந்த ஓலை போன்றவை அதிகம் இருந்தால் காற்றின் வேகத்தால் மரம் முழுவதும் அடியோடு சாய்வதற்கோ, முறிந்து விழுவதற்கோ வாய்ப்புள்ளது.

எனவே, இளம் ஓலைகளை தவிர்த்து, மீதமுள்ள பச்சை மற்றும் காய்ந்த மட்டைகள், இளநீா், தேங்காய் போன்றவற்றை வெட்டி அகற்றி விட வேண்டும். 

தென்னை மரத்தின் தலைப்பகுதி அதிக பாரம் இல்லாமல் இருந்தால் காற்றின் வேகத்தை தாங்கி நிற்கும் வாய்ப்பு மரத்துக்கு அதிகமாக இருக்கும்.

இப்போது முதல் புயல் கரையை கடக்கும் வரை விவசாயிகள், தென்னந்தோப்புகளுக்கு நீா் பாய்ச்சுவதை நிறுத்திவிட வேண்டும். இதனால் தென்னையின் வோ்ப் பகுதி மண்ணில் நன்றாக இறுகி மரம் சாய்ந்து விடாமல் பாதுகாக்க உதவியாக இருக்கும்.

காற்று வேகமாக வீசும்போது, மரங்களின் இடையே புகுந்து செல்லும் வகையில் பக்கவாட்டு கிளைகளையும், அதிகப்படியான இலைகளையும் கவாத்து செய்து, மரம் வேரோடு சாய்வதை தடுக்கலாம். 

கவாத்து செய்த இடங்களில் பூஞ்சாண நோய் பரவாமல் தடுக்க 300 கிராம் காப்பர் ஆக்ஸி குளோரைடை ஒரு லிட்டா் நீரில் கலந்த கலவை கொண்டு பூச வேண்டும்.

உரமிடுதல் போன்ற பணிகளுக்காக மரத்தை சுற்றி பாத்தி கட்டுதல் போன்ற பணிகளை கன மழை, காற்று கடந்த பின் மேற்கொள்வது சிறந்தது. 

வாழைத் தோப்பினை சுற்றி வாய்க்கால் எடுத்து, மழை நீா் தேங்காமல் வெளியேற வழி வகை செய்ய வேண்டும்.

தற்போது விவசாயிகள் மேற்கொள்ளவிருக்கும் விதைப்புப் பணிகளை காற்று, மழை முடிந்த பின் மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். 

மேலும் நெல், பயறு வகைகள், சிறுதானியங்கள், பருத்தி, கரும்பு, நிலக்கடலை சாகுபடி வயல்களில் தேங்கியிருக்கும் மழை நீரை வடிக்க உரிய வடிகால் வசதியினை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். 

இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடித்து கன மழை, காற்று பாதிப்பில் இருந்து விவசாயிகள் பயிர்களை பாதுகாத்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

உயர்கல்வி பெறுவோர் எண்ணிக்கை 48.6 சதவீதமாக உயர்வு: முதல்வர் எடப்பாடி பழனிசாமி
ஊழல் செய்பவர்கள் தண்டனையை அனுபவிக்கத்தான் வேண்டும்: பிரேமலதா
எம்.பி. மீது தாக்குதல்: இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்
போர்க்குற்றம் புரிந்தவர் இலங்கை ராணுவத் தளபதி: ராமதாஸ் கண்டனம்
தில்லியில் திட்டமிட்டபடி இன்று எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்