ஜலசமாதி அடைந்தானா சிறுவன்? பிரேத பரிசோதனை அறிக்கை சொல்லும் உண்மை!

போளூரை அடுத்த படவேடு அருகே ஜல சமாதி அடைந்ததாகக் கூறப்பட்ட சிறுவனின் உடல் திங்கள்கிழமை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
ஜலசமாதி அடைந்தானா சிறுவன்? பிரேத பரிசோதனை அறிக்கை சொல்லும் உண்மை!


போளூரை அடுத்த படவேடு அருகே ஜல சமாதி அடைந்ததாகக் கூறப்பட்ட சிறுவனின் உடல் திங்கள்கிழமை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த படவேடு செண்பகத்தோப்பு அருகேயுள்ள ராமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அரிகிருஷ்ணன் - சுமதி தம்பதி. இவர்கள் தங்களது விவசாய நிலத்தில் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இவர்களது மகன் தனநாராயணன்(16).  இவர், பத்தாம் வகுப்பு படித்துவிட்டு வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்தார்.

இந்த நிலையில், கடந்த மாதம் 24-ஆம் தேதி, வலிப்பு நோய் வந்து தனநாராயணன் விவசாயக் கிணற்றில் விழுந்துவிட்டார். தீயணைப்பு வீரர்கள் தனநாராயணனின் உடலை மீட்டனர். பின்னர், 108 அவசரகால ஊர்தி மருத்துவர்கள் தனநாராயணனின் உடலைப் பரிசோதித்துவிட்டு அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

அப்போது, அந்தப் பகுதிக்கு வந்த நாடி ஜோதிடர் பழனி, தனநாராயணனின் நாடியைப் பிடித்துப் பார்த்து உயிர்நாடி உள்ளது எனக் கூறி, ஜலசமாதி ஆகியுள்ளதாகத் தெரிவித்தார். இதையடுத்து, அரிகிருஷ்ணன் தனது நிலத்திலேயே பள்ளம் தோண்டி தனநாராயணனின் உடலை சம்மணமிட்டு அமர்ந்தவாறு புதைத்துவிட்டார். இந்த நிலையில், ஜலமாதி பற்றி கட்செவி அஞ்சல், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவல் பரவியதால், படவேடு கிராம நிர்வாக அலுவலர் மகாலிங்கம் சந்தவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதைத் தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி உத்தரவின் பேரில் தனநாராயணனின் உடல் திங்கள்கிழமை தோண்டி எடுக்கப்பட்டு, அதே இடத்தில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. இதில், தனநாராயணன் கிணற்றில் விழுந்ததில்தான் மரணமடைந்தது தெரிய வந்தது. 

இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, காவல் கண்காணிப்பாளர் சிபி.சக்கரவர்த்தி ஆகியோர் அரிகிருஷ்ணன், சுமதி தம்பதியிடம் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து ஆட்சியர் கந்தசாமி கூறியதாவது: மருத்துவப் பரிசோதனையில், கிணற்றில் விழுந்த சிறுவன் மூச்சுத் திணறித்தான் இறந்ததாகத் தெரிய வந்துள்ளது. தவறான தகவலை நம்ப வேண்டாம். கட்செவி அஞ்சலில் தவறான தகவல் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com