திங்கள்கிழமை 22 ஜூலை 2019

ஸ்டெர்லைட் ஆலையை பராமரிக்க தனிக்குழு: வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கை நிராகரிப்பு

DIN | Published: 23rd April 2019 12:25 PM

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. 

வேதாந்தா குழும நிறுவனமான ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தின்போது போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், அந்த ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டது.  இதை எதிர்த்து வேதாந்தா குழுமம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தேதிய பசுமைத் தீர்ப்பாயம், ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு கடந்த ஆண்டு மே 28-இல் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ததுடன், அன்றைய தினத்திலிருந்து 3 வாரங்களுக்குள் ஆலை செயல்படுவதற்கான அனுமதியை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அளிக்க வேண்டும் உத்தரவிட்டது. 

இதற்கு எதிராக சமூக அமைப்புகளைச் சேர்ந்த சிலர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்கக் கூடாது என உத்தரவிட்டது.  இதை ரத்து செய்யக் கோரி, வேதாந்தா குழுமம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.  இந்நிலையில், ஆலையைத் திறக்க அனுமதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

அந்த இரண்டு மனுக்களையும் இணைத்து விசாரித்த உச்சநீதிமன்றம், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை ரத்து செய்ததுடன்,  இந்த உத்தரவுகளுக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட்  மனு தாக்கல் செய்யலாம் எனத் தெரிவித்து மேல்முறையீட்டு மனுக்களை முடித்து வைத்தது. தற்போது வேதாந்தா நிறுவனத்தின் ரிட் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து வருகிறது. 

இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது ஆலை பராமரிப்பு பணிகளை ஆய்வுசெய்ய தனிக்குழு அமைக்க வேண்டும் என்று வேதாந்தா நிறுவனத்தின் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அப்போது கண்காணிப்பு குழு ஏற்கெனவே இருப்பதாக தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது. இதனை ஏற்ற உயர்நீதிமன்றம் ஆலை தொடர்பான வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்தது. இதையடுத்து வழக்கில் அடுத்த விசாரணை ஜூன் 11ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

செளம்யாவுக்கு சங்கீத கலாநிதி விருது
தமிழ் மொழியை உயர்த்திப் பிடிக்க வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன்
நெல்லை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு
இயக்குநர் சங்கத் தலைவராக ஆர்.கே.செல்வமணி தேர்வு
சிவாஜி கணேசன் 18-ஆவது நினைவு தினம்