வெள்ளிக்கிழமை 23 ஆகஸ்ட் 2019

சுட்டெரிக்கும் சூரியன்: அக்னி நட்சத்திரம் எப்போது தொடங்குகிறது தெரியுமா?

DIN | Published: 22nd April 2019 01:03 PM

 

தமிழகத்தில் ஒரு பக்கம் சூரியன் சுட்டெரித்துக் கொண்டிருந்தாலும், மறுபக்கம் கோடை மழையும் குளிர்வித்து வருகிறது. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மே 4-இல் அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது.

கோடைகாலம் தொடங்கி ஒரு மாதமாகி விட்டது. கடந்த சில தினங்களாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் வழக்கத்தைக் காட்டிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. 

கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு நாள்கள் பகலில் வெயில் கொளுத்தியபோதும், பிற்பகலில் மழையும் பெய்து வருகிறது. 

தற்போதைய வெயிலைக் காட்டிலும், அக்னி நட்சத்திரத்தின்போது வெயிலின் உக்கிரம் அதிகமாக இருக்கும். 

கோடை வெயிலில்  இருந்து உடலை பாதுகாத்துக் கொள்வது  குறித்து மருத்துவர்கள் சிலர் கூறியது: அதிகப்படியான வெப்பக் கதிர்வீச்சு உடல் மற்றும் மனரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். பருத்தியால் தயாரிக்கப்பட்ட,  எடை குறைவான, தளர்வான, வெளிர் நிற ஆடைகளை அணிய வேண்டும். 

வெளியில் செல்லும்போது தொப்பி அல்லது குடை, பாதுகாப்பான குளிர் கண்ணாடி பயன்படுத்த வேண்டும். பயணங்களின்போது கையுடன் குடிநீர் எடுத்துச் செல்லவேண்டும். உடல் வெப்பத்தைத் தணிக்க அவ்வப்போது தண்ணீர், மோர், எலுமிச்சைச் சாறு, கஞ்சி, கூழ், பழச்சாறு,  இளநீர் மற்றும் ஓ.ஆர்.எஸ். கலவை ஆகியவற்றை அருந்தவேண்டும்.

குழந்தைகள், கருவுற்ற பெண்கள், முதியோர் மற்றும் உடல்நலம் குன்றியவர்களை வெப்பத்தாக்கம் இல்லாத பகுதிகளில் வைத்து பராமரிக்கவேண்டும். நமது வசிப்பிடங்களில் பகல் நேரங்களில் திரைச் சீலைகள், கூடாரங்கள் ஆகியவற்றால் மறைத்தும், இரவு நேரங்களில் ஜன்னல்களை திறந்து வைத்தும் காற்றோட்டத்துடன் குளிர்ச்சியாக இருக்குமாறு அமைத்துக் கொள்ள வேண்டும்.

வெட்டவெளியில் பணியாற்றுபவர்கள் ஈரமான உடைகளை பயன்படுத்த வேண்டும். அடிக்கடி குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். கடும் வெயில் நேரத்தில் (நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணிவரை)  சூரிய ஒளியின் நேரடித் தாக்குதல் ஏற்படாதவாறு பணிகளை மேற்கொள்ள திட்டமிடவேண்டும். கால்நடைகளை (ஆடு, மாடு) நிழலில் கட்டி வைத்து பராமரிக்க வேண்டும். அவற்றிற்கு தேவையான அளவு குடிநீர் வழங்க வேண்டும். வேலை செய்யும் இடங்களில் குளிர்ந்த குடிநீர் இருக்குமாறு வைத்துக்கொள்ள வேண்டும்.

குழந்தைகளை சூரிய வெப்பத்தில் இருந்து பாதுகாக்கும் வகையில் நிழலில் இருக்கச் செய்ய வேண்டும். கடும் வெயிலின்போது, பொது வெளியில் வேலை செய்வதைத் தவிர்க்க வேண்டும். வெயிலால் ஏற்படும் அசதி, தலைவலி, மயக்கம் போன்ற அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்லவேண்டும்.

செய்யக்கூடாதவை:  வெயிலில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களுக்கு அருகில் குழந்தைகளையும், செல்லப் பிராணிகளையும் செல்லவிடக்கூடாது. அடர்த்தன்மையுடைய ஆடைகள் மற்றும் இறுக்கமான ஆடைகளை அணியக்கூடாது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் போது கடுமையான பணிகளை செய்யக் கூடாது.  உடலின் உஷ்ணத்தை அதிகப்படுத்த கூடிய காபி, தேநீர், பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர் பானங்கள் மற்றும் மது ஆகியவற்றை அருந்தக் கூடாது. புரதச்சத்து நிறைந்த மற்றும் பழைய உணவுகளைத் தவிர்க்க வேண்டும். தட்பவெப்ப நிலைக்குத் தக்கவாறு மக்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றனர்.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத்துறையில் வேலை வேண்டுமா..? 
விண்ணப்பித்துவிட்டீர்களா..? சென்னை நகராட்சி துறையில் சிறப்பு அதிகாரி வேலை
கூட்டுறவு வங்கியில் வேலை வேண்டுமா? 
ஆண்கள்... பெண்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்களா? பிக்பாஸ் விவாதத்தின் மீதான தினமணி டீ பிரேக் அரட்டை!
நீதிபதிகளின் தனிப்பட்ட சித்தாந்தங்களை தீர்ப்புகளில் திணிக்கக் கூடாது: மா. கம்யூ வலியுறுத்தல்