விரலில் மை வைத்தபோது எதையோ சாதித்ததைப் போல் உணர்ந்தோம்

மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்த 159 பேர்  சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநலக் காப்பகத்தில் வாக்களித்துள்ளனர். 
விரலில் மை வைத்தபோது எதையோ சாதித்ததைப் போல் உணர்ந்தோம்


மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்த 159 பேர்  சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநலக் காப்பகத்தில் வாக்களித்துள்ளனர். 
மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட மன நலக் காப்பகத்தில் சுமார் 900-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  அங்கு பல்வேறு வகையான உளவியல் மற்றும் மன நலப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது. அவர்களில் பெரும்பாலானோர் பூரண குணமடைந்து வீடு திரும்புகின்றனர். உறவினர்களால் கைவிடப்பட்ட சிலர் அங்கேயே தங்கி தொழிற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், அவ்வாறு குணமடைந்து சரியான மன நிலையில் உள்ளவர்களில்  192 பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் அண்மையில் இணைக்கப்பட்டன. அவர்களில் 78 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் அனைவரும் வாக்களிப்பதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
முதல் கட்டமாக  மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் கட்சிகள்,  அவற்றின் சின்னம்  கூட்டணி,  மத்திய சென்னை மக்களவைத் தொகுதி வேட்பாளர்கள் விவரம் ஆகியவை குறித்து மனநல சிகிச்சை பெற்று வருவோருக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. 
இதைத் தொடர்ந்து கீழ்ப்பாக்கம்  மனநலக் காப்பகத்துக்குள்ளேயே அமைக்கப்பட்ட சிறப்பு வாக்குச் சாவடியில் மன நல சிகிச்சை பெற்று வருவோர் எவ்வித குழப்பமும் இல்லாமல் வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தலில் வாக்களித்தனர்.  இதையடுத்து அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியது:  எங்களைப் போன்றவர்களுக்கு முறையாக வாக்களிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. வெளியுலகில் நடைபெறும் நிகழ்வுகள் குறித்து எங்களுக்கு அவ்வளவாக தெரியாது. எனினும் வேட்பாளர்களின் விவரம்,  தமிழக அரசியல் நிலவரம் குறித்து எங்களுக்கு மனநலக் காப்பக பேராசிரியர்கள், செவிலியர் கல்லூரி மாணவர்கள் படிப்படியாக விளக்கங்கள் அளித்தனர்.  அதேபோன்று மாதிரி வாக்குச்சாவடியில் பயிற்சி பெற்றோம்.  இதனால் தற்போது எந்தவித குழப்பமும் இல்லாமல் வாக்களிக்க முடிந்தது.   
சிறந்த கௌரவம்:  சமுதாயத்தில் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்ட சூழலில் வாழ்ந்து வரும் எங்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்பு வழங்கி கௌரவப்படுத்திய  தமிழக அரசுக்கும்,  மருத்துவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.  நீண்ட ஆண்டுகளுக்குப்  பிறகு வாக்களிப்பதற்காக விரலில் மை வைக்கப்பட்டபோது எதையோ பெரிதாக சாதித்தது போன்று இருந்தது என்றனர்.
இது குறித்து கீழப்பாக்கம் அரசு மனநலக் காப்பக இயக்குநர் டாக்டர் பூர்ண சந்திரிகா கூறுகையில்,  வாக்களித்த 159 பேரில் சிலர் பொறியியல்,  முதுநிலை,  பட்டயப் படிப்புகளை முடித்துள்ளனர். அவர்களுக்கு மாதிரி வாக்குச் சாவடியில் பயிற்சி அளிக்கும்போது,  சின்னங்களை எங்கே காணவில்லை? என்று கேட்கும் அளவுக்கு தெளிந்த மனதுடன் இருந்தனர் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com