சென்னை - செங்கல்பட்டு - அரக்கோணம் - சென்னை: நாட்டிலேயே மிக நீண்ட சுற்றுவட்ட ரயில் சேவை விரைவில் தொடக்கம்

சென்னை புறநகர் மக்களின் நீண்ட காலக் கோரிக்கை சென்னை,  செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம், திருவள்ளூர்
சென்னை - செங்கல்பட்டு - அரக்கோணம் - சென்னை: நாட்டிலேயே மிக நீண்ட சுற்றுவட்ட ரயில் சேவை விரைவில் தொடக்கம்


சென்னை புறநகர் மக்களின் நீண்ட காலக் கோரிக்கை சென்னை,  செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம், திருவள்ளூர் வழியாக சென்னைக்கு சுற்றுவட்ட ரயில் விட வேண்டும் என்பதுதான். எதிரெதிர் திசைகளில் ரயில் சேவை தொடங்கும்போது குறிப்பிட்ட கால இடைவெளியில் மக்கள் பயணம் செய்ய முடியும்.

இச்சேவை தொடங்கும்போது நாட்டிலேயே மிக நீண்ட தூரமுள்ள அதாவது 194 கி.மீ. சுற்றுவட்டப் பாதையாக இது அமையும்.

பொதுமக்களின் மிக நீண்ட காலக் கோரிக்கையான  சுற்றுவட்டப்பாதை திட்டம் நிறைவேறாமல் இருந்ததற்கு அரக்கோணம் -தக்கோலம் இடையேயான பாதை மின்மயமாக்கப்படாததுதான் காரணம். இப்போது இப்பணிகள் நிறைவடைந்துள்ளநிலையில், விரைவில் சுற்றுவட்டப்பாதை ரயில் சேவை துவங்க உள்ளது.

 அரக்கோணம் - செங்கல்பட்டு இடையே குறுகிய ரயில்பாதை இருந்தது. தமிழகத்தின் தென்மாவட்டங்களில் இருந்து வடமாநிலங்களுக்கு அரிசி உள்ளிட்டவைகளும், வடமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் கோதுமை, பருப்பு உள்ளிட்டவற்றை தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்வதற்கு அரக்கோணம் ரயில் நிலையம் முக்கிய சந்திப்பாக இருந்தது. 

குறுகிய ரயில் பாதையில் இருந்து அகல பாதையில் நிற்கும் ரயில்களுக்குப் பொருள்களை மாற்ற வேண்டும். இதே நிலைதான் ரயில்பயணிகளுக்கும்.
 செங்கல்பட்டு-காஞ்சிபுரம்-அரக்கோணம் இடையே இருந்த குறுகிய பாதையை அகலப்பாதையாக  மாற்றும் பணி 1994 முதல் 2000-ஆம் ஆண்டு வரை நடைபெற்றது. இதன்பின் ரயில் பாதையை  மின்மயமாக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. அரக்கோணம்-காஞ்சிபுரம் பிரிவில், மின்மயமாக்கல் பணி தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தள நிர்வாகம் தங்களது எல்லைக்கு அருகே ரயில்பாதையை மின்மயமாக்கும் பணிக்குத் தடை விதித்தது. இப்பாதை மின்மயமாக்கப்பட்டால் அதில் செல்லும் 25 ஆயிரம் கிலோவாட் மின்சாரம் தங்களது தளத்திலிருந்து விமானம் பறப்பதற்கும் இறங்குவதற்கும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே அரக்கோணம் - தக்கோலம் இடையே 6.5 கி.மீ. ரயில் பாதையை மின்மயமாக்கக்கூடாது எனவும் ஆட்சேபனை தெரிவித்தது. இதையடுத்து அங்கு மட்டும் மின்மயமாக்கல் பணி நிறுத்தப்பட்டது. இதனால் தக்கோலம் வரை மின் மயமாக்கப்பட்டு செங்கல்பட்டு வழியாக சென்னை  - திருமால்பூர் இடையே மட்டும் மின்சார ரயில் இயக்கப்பட்டது. 

இந்நிலையில்,  ரயில்வே நிர்வாகத்துக்கு  ஐஎன்எஸ் ராஜாளி நிர்வாகம் மற்றொரு யோசனையைத் தெரிவித்தது.  கல்லாறு பகுதியில் இருந்து அரக்கோணம் ரயில் நிலையம் வரையிலான 5 கிலோமீட்டர் பாதைக்கு பதிலாக,  கல்லாறு பகுதியில் இருந்து பொய்ப்பாக்கம், பருத்திபுத்தூர், மேல்பாக்கம் வழியாக அரக்கோணம் ரயில்நிலையம் வரையுள்ள 9.8 கிலோமீட்டர் தூரத்துக்கு  மாற்றுப்பாதை அமைத்துக்கொள்ள ஆலோசனை தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ரயில்வே துறைக்கும் பாதுகாப்பு அமைச்சகத்துக்கும் கடந்த 2003-இல்  உடன்படிக்கை  ஏற்பட்டது. மேலும் இப்பணிக்கான செலவு தொகையாக ரூ.25 கோடி நிதியை ரயில்வே துறைக்கு  பாதுகாப்புத் துறை அளிக்க ஒப்புக்கொண்டது. 

ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், நிலம் கையகப்படுத்தும் பணியில் தொய்வு ஏற்பட்டதால் இப்பணி கிடப்பில் போடப்பட்டது.  இதனால், ரூ.25 கோடிக்கு மதிப்பிடப்பட்டிருந்த நிதி ரூ.54 கோடியாக உயர்ந்தது. இந்த பணியை விரைந்து முடிக்க ரயில்வே பயணிகள் சங்கத்தினர் ரயில்வே நிர்வாகத்துக்கும், பாதுகாப்பு துறைக்கும் கோரிக்கை வைத்தனர். 
இதையடுத்து அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், தெற்குரயில்வே பொது மேலாளர் குல்சிரேஷ்டா ஆகியோரின் முயற்சி காரணமாக இந்தப் பணி மீண்டும் தொடங்கியது.  தமிழக அரசு அலுவலர்களிடமும், வேலூர் மாவட்ட ஆட்சியரிடமும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி, நிலம் கையகப்படுத்தப்பட்டது.

புதிய ரயில் பாதையில் நெடுஞ்சாலை,  கிராமச்சாலைகளில் அமைக்கப்படவேண்டிய இரு ரயில்வே கடவுப்பாதைகளுக்கும் ஒப்புதல் பெறப்பட்டது. இதையடுத்து, 2017-ஆம் ஆண்டில் பணி வேகமெடுத்தது. 
கல்லாறு பகுதியில் இருந்து மேல்பாக்கம் ரயில்நிலையம் வரை புதிய பாதையில் மேற்கொள்ளப்பட்ட மின்மயமாக்கல் பணி கடந்த ஆண்டு டிசம்பரில்  நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து, தென் மண்டல ரயில்வே  பாதுகாப்பு ஆணையர் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி இந்தப்பாதையில் ரயிலை இயக்கி ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கினார். இதையடுத்து, ஏப்ரல் 5-ஆம் தேதியில் இருந்து 15-ஆம் தேதி வரை ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு, மேல்பாக்கம் ரயில்நிலையத்தில் சிக்னல்கள் மாற்றப்பட்டன. மேலும் பொய்ப்பாக்கத்தில் தக்கோலம் - அரக்கோணம் பழைய பாதை துண்டிக்கப்பட்டு, புதியபாதை இணைக்கும் பணிகள் நடைபெற்றன.
தற்போது, அரக்கோணம்-செங்கல்பட்டு, புதுச்சேரி-திருப்பதி செல்லும் ரயில் ஆகிய  இரு ரயில்களும், சரக்கு ரயில்களும் இயக்கப்படுகின்றன. 
விரைவில் சுற்றுவட்டப்பாதை  ரயில் சேவை: இது குறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியது: தக்கோலம்-அரக்கோணம் இடையே புதிதாக அமைக்கப்பட்ட ரயில் பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளது. இப்பாதையில்,  தற்போது திருப்பதி-புதுச்சேரி பயணிகள் ரயில், செங்கல்பட்டு-அரக்கோணம் பயணிகள் ரயில் இயக்கப்படுகின்றன. 

நாட்டிலேயே மிக நீண்ட சுற்றுப்பாதை ரயில் சேவை: சுற்றுவட்டப்பாதை ரயில் சேவை அதிகபட்சமாக 35 கி.மீ. கொண்டதாக மட்டுமே இருக்கிறது. (கொல்கத்தா புறநகர் ரயில்வே)  தக்கோலம்-அரக்கோணம் பாதையில் பணிகள் முடிந்து, சுற்றுவட்டப்பாதையில் ரயில் சேவை தொடங்குவது மூலமாக, மிக நீண்ட ரயில்வே சுற்றுப்பாதையாக (194 கி.மீ.) சென்னை புறநகர் ரயில்வே மாறும் என்றார் அவர்.

பயணிகளுக்குக் கிடைக்கும் பலன்கள்: இந்த சுற்றுவட்டப்பாதை ரயில், சென்னை சென்ட்ரலில்  இருந்து திருவள்ளூர், அரக்கோணம்,  தக்கோலம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு வழியாக கடற்கரையை அடையும்.  இந்த புதிய ரயில் பாதை மற்றும் புதிய ரயில் மூலம் ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், வேப்பம்பட்டு மற்றும் திருவள்ளூர் பகுதிகளில் இருந்து செங்கல்பட்டுக்கு பயணிக்கும் பயணிகளின் பயண தூரம் சுமார் பல கி.மீ. அளவுக்குக் குறையும்.
 இந்த புதிய ரயில் பாதை மூலம் காவேரிபாக்கம், ஒச்சேரி, திருமால்பூர் உள்ளிட்ட சில கிராம மக்களும் ரயில் வசதியை பெறுவார்கள்.
திருவள்ளூர் மார்க்கத்தில் இருந்து பயணிகள் சென்னை சென்ட்ரல் அல்லது கடற்கரை ரயில் நிலையத்துக்கு வந்து, செங்கல்பட்டுக்குச் செல்லும் ரயிலில் பயணிக்க வேண்டும். இது சுமார் 106 கி.மீ. தூரமாகும். ஆனால், திருவள்ளூரில் இருந்து செங்கல்பட்டுக்கு அரக்கோணம் வழியாகச் செல்ல வேண்டும் என்றால் வெறும் 96 கி.மீ. தூரம்தான். இதன் மூலம் பயண நேரம் 40 நிமிஷம் குறையும்.
 
இதுபோல, வண்டலூர், மறைமலைநகர், செங்கல்பட்டில் இருந்து ஆவடி, பட்டாபிராம், அம்பத்தூர் வர வேண்டும் என்றால் அவர்கள் இதுவரை பேருந்துப் பயணத்தையே பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் இந்த புதிய ரயில் பாதை மூலம் இந்தப்பகுதி மக்கள் ரயில் பாதையை தேர்வு செய்ய வாய்ப்பு ஏற்படும்.
வரவேற்கத்தக்கது

தெற்கு ரயில்வே தொழிலாளர்கள் சங்க துணைப் பொதுச்செயலாளர் மனோகரன்: 
மின்மயமாக்கல் திட்டங்களுக்கு அரசு தந்து வரும் முக்கியத்துவத்தால், தேக்க நிலையில் இருந்த பல்வேறு மின்மயத் திட்டங்கள் கடந்த சில ஆண்டுகளாக வேகமெடுத்தன. அதில் இதுவும் ஒன்று. பெருநகர வளர்ச்சியின் போக்குவரத்து தேவைக்கு நிச்சயம் ஈடுகொடுக்கும் இந்தத்திட்டம் வரவேற்கத்தக்க ஒன்று என்றார் அவர்.

பயணங்கள் எளிதாகும்: இது குறித்து அரக்கோணம் ரயில் பயணிகள் சங்கத்தலைவர் நைனா மாசிலாமணி கூறியது:  எங்களது 12 வருட கோரிக்கை. தற்போது நிறைவேற இருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.  திருவள்ளூர், அரக்கோணம் பகுதிகளில் இருந்து செங்கல்பட்டு, காஞ்சிபுரம் செல்பவர்களுக்கு  நேரம், பணம் மிச்சமாகும். மேலும் மேல்மருவத்தூர், அச்சிறுபாக்கம் ஆகிய இடங்களில் உள்ள கோயில்களுக்கு பொதுமக்கள் மிகவும் சிரமத்துடன் சென்று வந்தனர். தற்போது சர்க்குலர் ரயில் இயக்கப்பட்டால்  பயணங்கள் எளிதாகும். அரக்கோணம் ,திருவள்ளூர் பகுதிகளில் இருந்து மறைமலைநகர், தாம்பரம் பகுதிகளுக்கு வேலைக்கு சென்று வந்தவர்கள் இனி எளிதாக செல்வர் என்றார் அவர்.

தெற்கு ரயில்வேயில் முதல் கோட்டம்...

முழுமையாக மின்மயமாக்கப்பட்ட சென்னை கோட்டம்: 

தக்கோலம்-அரக்கோணம் இடையே மின்மயமாக்கப்பணி முடிவடைந்துள்ளநிலையில், தெற்கு ரயில்வேயில் சென்னை கோட்டம் முழுமையாக மின்மயமாக்கம் செய்ய முதல் கோட்டமாக மாறி சாதனை படைத்துள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com