கள்ள ஓட்டு போட்டு சிக்கிய வாக்குச் சாவடி  முகவர்: அரை மணி நேரத்துக்கு மேல் வாக்குப் பதிவு நிறுத்தம் 

சென்னையில் உள்ள வாக்குச் சாவடி ஒன்றில் பிரதான கட்சியின் வாக்குச் சாவடி முகவர் ஒருவர், தேர்தல் நடத்தும் அதிகாரி உதவியுடன் கள்ள



அமமுக புகாரைத் தொடர்ந்து அதிகாரி மாற்றம்
சென்னையில் உள்ள வாக்குச் சாவடி ஒன்றில் பிரதான கட்சியின் வாக்குச் சாவடி முகவர் ஒருவர், தேர்தல் நடத்தும் அதிகாரி உதவியுடன் கள்ள ஓட்டு போட்டதை, அங்கு வந்த அமமுக கட்சியினர் பீப் சத்தத்தை வைத்து கண்டுபிடித்தனர். 
இதுதொடர்பாக அங்கிருந்த காவல்துறை அதிகாரிகளிடம் அவர்கள் புகார் அளித்ததைத் தொடர்ந்து, அந்த வாக்குச் சாவடியில் உடனடியாக வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது. பின்னர் அரை மணி நேரத்துக்குப் பிறகு, மாற்று வாக்குச் சாவடி அதிகாரி வந்ததும், அங்கு பணியிலிருந்த அதிகாரி மாற்றப்பட்டு மீண்டும் வாக்குப் பதிவு தொடங்கியது. தமிழகத்தில் உள்ள 38 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தலும், 18 சட்டப்பேரவைகளுக்கான இடைத் தேர்தலும் வியாழக்கிழமை நடைபெற்றது. 
கள்ள ஓட்டு: சென்னையின் பல பகுதிகளில் மக்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல், வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். இந்த நிலையில், சென்னை ஓட்டேரி குக்ஸ் சாலையில் அமைந்துள்ள பெருநகர சென்னை உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த, வாக்குச் சாவடியில் ( எண்.119) பிரதான கட்சியின் முகவர், அங்கு யாரும் இல்லாத நேரத்தில் கள்ள ஓட்டு போட்டுள்ளார்.வாக்குச் சாவடியில் மதியம் 2 மணியளவில் வாக்காளர்கள் யாரும் இல்லாத காரணத்தால், பிற கட்சி முகவர்கள் வெளியே வந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, உள்ளே இருந்த பிரதான கட்சியின் முகவர், அந்த வாக்குச் சாவடி அதிகாரி தமிழரசு உதவியுடன் கள்ள ஓட்டு போட்டுள்ளார்.  
அப்போது பீப் சத்தத்தைக் கேட்டு அமமுக கட்சியைச் சேர்ந்த இளங்கோ, வினோத் ஆகியோர் வாக்குச் சாவடிக்குள்  சென்று பார்த்தபோது, அந்த முகவர் வாக்குப் பதிவு இயந்திரத்தின் அருகிலிருந்து வந்துள்ளார். 
இதனைத் தொடர்ந்து அமமுக கட்சியினர், அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் உதவி கண்காணிப்பாளர் விதுல் ஆனந்த், ஆய்வாளர் அ.வள்ளி, மற்றொரு ஆய்வாளர் இரா.சிவசங்கரி ஆகியோரிடம் புகார் அளித்தனர்.
இந்த சர்ச்சையால் அங்கு கூட்டம் கூடியது. உடனடியாக அந்தப் பள்ளியின் பிரதான வாயிலை மூடவும், பத்திரிகையாளர் யாரையும் உள்ளே அனுமதிக்க வேண்டாம் எனவும்  காவல் ஆய்வாளர் அ.வள்ளி  போலீஸாருக்கு உத்தரவிட்டார். மேலும், 20-க்கும் மேற்பட்ட போலீஸார் அங்கு வரவழைக்கப்பட்டு, பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதனால், அங்கு சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சர்ச்சை காரணமாக அந்தப் பள்ளியில் அமைந்திருந்த (111,112, 113,118,119,120) 6 வாக்குச் சாவடியிலும் வாக்களிக்க வந்த வாக்காளர்கள் அரை மணி நேரம் வெளியிலேயே காத்திருக்கும் நிலை உருவானது.
அதிகாரி மாற்றம்: இந்த விவகாரம் தொடர்பாக போலீஸார் மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். மேலும், வாக்குச் சாவடி தேர்தல் நடத்தும் அதிகாரியை மாற்றவும் பரிந்துரைத்தனர். இதனைத் தொடர்ந்து, மாற்று அதிகாரி அங்கு வந்ததும், பணியிலிருந்த தமிழரசு விடுவிக்கப்பட்டார். பின்னர் வாக்குப் பதிவு தொடங்கியது.
இதுகுறித்து அங்கிருந்த காவல் துணைக் கண்காணிப்பாளர் சரவணன் கூறியது:
வாக்குச் சாவடியிலிருந்து அமமுக கட்சியினர்  வெளியில் வந்தபோது, வாக்குப் பதிவு இயர்ந்திரத்தில் பீப் சத்தம் கேட்டுள்ளது. உடனே அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, பிரதான கட்சியின் முகவர் வாக்குப் பதிவு இயந்திரத்தின் அருகில் இருந்து வந்துள்ளார். ஆனால், வாக்குகள் எதுவும் பதிவாகவில்லை. இருந்தபோதும், சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வாக்குச் சாவடி அதிகாரி மாற்றப்பட்டிருக்கிறார் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com