11 மாநிலங்களில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

தமிழகம் உள்பட 11 மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் வியாழக்கிழமை மக்களவைத் தொகுதிகளுக்கான இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. மொத்தம் 67.84 சதவீத
11 மாநிலங்களில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு


தமிழகம் உள்பட 11 மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் வியாழக்கிழமை மக்களவைத் தொகுதிகளுக்கான இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. மொத்தம் 67.84 சதவீத வாக்குகள் பதிவாகின.
11 மாநிலங்களில் 95 தொகுதிகளில் வியாழக்கிழமை வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. தமிழகத்தில் 18 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும், ஒடிஸாவில் 35 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.  ஆந்திரப் பிரதேசம், அருணாசலப் பிரதேசம், அஸ்ஸாம், பிகார், சத்தீஸ்கர், ஜம்மு-காஷ்மீர், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த 11ஆம் தேதி முதல்கட்டமாக தேர்தல் நடைபெற்றது. மே 19ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலின், இரண்டாவது கட்ட தேர்தல் 18ஆம் தேதி நடைபெற்றது.
கர்நாடகத்தில் 14 தொகுதிகள், மகாராஷ்டிரத்தில் 10 தொகுதிகள், உத்தரப் பிரதேசத்தில் 8 தொகுதிகள், அஸ்ஸாம், பிகார், ஒடிஸா ஆகிய மாநிலங்களில் தலா 5 தொகுதிகள், சத்தீஸ்கர், மேற்கு வங்கம் மாநிலங்களில் தலா 3 தொகுதிகள், ஜம்மு-காஷ்மீரில் 2 தொகுதிகள், மணிப்பூர் மற்றும் புதுச்சேரியில் தலா ஒரு தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்தத் தேர்தலில் மொத்தம் 1,600 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஒட்டுமொத்தமாக 15.80 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்குப் பதிவு செய்ய தகுதி பெற்றிருந்தனர். சட்டம்-ஒழுங்கு பிரச்னையை காரணமாகக் கூறி, திரிபுரா (கிழக்கு) மக்களவைத் தொகுதியில் வியாழக்கிழமை நடைபெறவிருந்த தேர்தல் 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஜம்மு-காஷ்மீரில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றது. தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா உள்பட 10 வேட்பாளர்கள் அந்த மாநிலத்தில் போட்டியிடுகின்றனர். ஸ்ரீநகர், பட்காம், கந்தர்பால் ஆகிய மாவட்டங்களில் உள்ள வாக்குச் சாவடிகளில் பாதுகாப்புப் படையினர் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பெரும்பாலான வாக்குச் சாவடிகள் காலியாக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த மாநிலத்தில் 10 வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கு மொத்தம் 12 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் தகுதி பெற்றவர்களாக இருந்தனர்.
ஒடிஸாவில் நக்ஸல் பாதிப்பு பகுதிகள் உள்பட அனைத்து இடங்களிலும் வியாழக்கிழமை அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. பாதுகாப்புப் பணியில் போலீஸாரும், துணை ராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். எந்தவொரு இடத்திலிருந்தும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் அரங்கேறவில்லை என்று அந்த மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சுரேந்திர குமார் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com