வெள்ளிக்கிழமை 23 ஆகஸ்ட் 2019

புதுகையில் அமமுக வேட்பாளர் தர்னா; பெண் வாக்காளர் மயங்கி விழுந்து மரணம்

DIN | Published: 19th April 2019 03:00 AM
புதுகையில் வாக்குச்சாவடிக்குள் அமர்ந்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்ட திருச்சி மக்களவைத் தொகுதி அமமுக வேட்பாளர் சாருபாலா ஆர். தொண்டைமான்.


புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளர் சீட்டு வழங்கவில்லை எனக்கூறி வாக்குச்சாவடியை மக்கள் பூட்டியது, வாக்குப்பதிவு இயந்திரத்தை மாற்றியது தொடர்பாக அமமுக வேட்பாளர் தர்னா, பெண் வாக்காளர் மயங்கி விழுந்து மரணம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. 
வாக்குச்சாவடியை பூட்டிய மக்கள்:  அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட தினையாகுடி ஊராட்சி திருநெல்லிவயல் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் 190 என்ற எண் கொண்ட வாக்குச்சாவடியை வாக்காளர்கள் சிலர் திடீரெனப் பூட்டினர். இப்பகுதி வாக்காளர்களுக்கு வாக்காளர் சீட்டு வழங்கப்படவில்லை என்றும், வாக்குச்சாவடிக்கு வெளியே ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியில் திமுக கூட்டணியின் ஏணி சின்னமும், அமமுகவின் பரிசுப் பெட்டி சின்னமும் அச்சிடப்படவில்லை என்றும் அந்த வாக்காளர்கள் புகார் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த மண்டல அலுவலர்கள் உரிய மாற்று ஏற்பாட்டைச் செய்த பிறகு வாக்குச்சாவடி திறக்கப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது.
அமமுக வேட்பாளர் சாருபாலா ஆர். தொண்டைமான் தர்னா: புதுக்கோட்டை நகரைச் சேர்ந்த மச்சுவாடியில் 61 ஆவது எண் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றி வைத்ததாக பிற்பகலில் புகார் எழுந்தது. வாக்குச்சாவடிகளைப் பார்வையிட வந்த அமமுக திருச்சி மக்களவைத் தொகுதி வேட்பாளர் சாருபாலா ஆர். தொண்டைமான், மாலை 4 மணிக்கு வாக்குச்சாவடிக்குள் அமர்ந்து தர்னா போராட்டத்தில்  ஈடுபட்டார்.  தகவலறிந்து வந்த உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர் எம்.எஸ். தண்டாயுதபாணி, துணைக் காவல் கண்காணிப்பாளர் பா. ஆறுமுகம் உள்ளிட்டோர் சாருபாலாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். வாக்குப்பதிவு இயந்திரம் மாற்றப்பட்டது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கவுள்ளதாகத் தெரிவித்து சாருபாலா அங்கிருந்து சென்றார். சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு வாக்குப்பதிவு தொடர்ந்தது.
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத நடிகரை மட்டும் வாக்களிக்க அனுமதித்தது ஏன் ? அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட எருக்கலாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் பிற்பகலில் வாக்களிக்க வந்த வாக்காளர் தேன்மொழியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை.  இதைத் தொடர்ந்து வாக்குப்பதிவு அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர், இதுவரை இரண்டு முறை இதே வாக்குச்சாவடியில் வாக்களித்த எனக்கு தற்போது மட்டும் பட்டியலில் இருந்து பெயர் எடுக்கப்பட்டது எப்படி என வாக்குவாதம் செய்த அவர், நடிகர் சிவகார்த்திகேயன்,  நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோருக்கு பெயர் இல்லாவிட்டாலும் கூட வாக்களிக்க அனுமதிப்பீர்கள் - என்னை அனுமதிக்கக் கூடாதா? எனக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.  தேர்தல் அலுவலர்கள் அவருக்கு விளக்கம் அளித்ததைத் தொடர்ந்து சிறிதுநேரத்துக்குப் பிறகு தேன்மொழி அங்கிருந்து சென்றுவிட்டார்.
பெண் வாக்காளர் மயங்கி விழுந்து மரணம்: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஏம்பல் காவல் சரகத்துக்குள்பட்ட குறுங்கலூர் கிராமத்திலுள்ள வாக்குச்சாவடியில் முற்பகலில் அப்பகுதியைச் சேர்ந்த மல்லிகா (60) என்ற வாக்காளர் வாக்களிக்க வந்தார். வாக்காளர் சீட்டு, அடையாள அட்டை சரிபார்க்கப்பட்டு கையில் மை வைத்தபோது, சாவடிக்குள்ளேயே மயங்கிவிழுந்தார்.
அவரைப் பரிசோதித்துப் பார்த்தபோது இறந்துவிட்டது தெரியவந்தது. உறவினர்கள் வந்து மல்லிகாவின் சடலத்தை வீட்டுக்கு எடுத்துச் சென்றனர்.

 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத்துறையில் வேலை வேண்டுமா..? 
விண்ணப்பித்துவிட்டீர்களா..? சென்னை நகராட்சி துறையில் சிறப்பு அதிகாரி வேலை
கூட்டுறவு வங்கியில் வேலை வேண்டுமா? 
ஆண்கள்... பெண்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்களா? பிக்பாஸ் விவாதத்தின் மீதான தினமணி டீ பிரேக் அரட்டை!
நீதிபதிகளின் தனிப்பட்ட சித்தாந்தங்களை தீர்ப்புகளில் திணிக்கக் கூடாது: மா. கம்யூ வலியுறுத்தல்