தேர்தலில் வாரிசுகள் போட்டியிடலாமா?: மு.க. ஸ்டாலின் விளக்கம்

தகுதியும், திறமையும் உள்ள வாரிசுகள் தேர்தலில் களமிறங்குவது தவறில்லை; அவர்களை மக்கள் வாக்களித்து அங்கீகரிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியில் திமுக வேட்பாளர் பொன்.கெளதமசிகாமணியை ஆதரித்து வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசுகிறார் அந்தக் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின். 
விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியில் திமுக வேட்பாளர் பொன்.கெளதமசிகாமணியை ஆதரித்து வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசுகிறார் அந்தக் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின். 


தகுதியும், திறமையும் உள்ள வாரிசுகள் தேர்தலில் களமிறங்குவது தவறில்லை; அவர்களை மக்கள் வாக்களித்து அங்கீகரிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியில் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் பொன்.கெளதமசிகாமணியை ஆதரித்து வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது:  

சாதாரண மக்களைப் பற்றி பிரதமர் மோடிக்கும், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் கவலையில்லை.  ஆகவே, அவர்கள் அந்தப் பதவிகளில் தொடர்வதற்கும் தகுதி இல்லை. 

இவர்களை அகற்றும் நல்ல வாய்ப்பாக இந்தத் தேர்தலை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

திமுக ஆட்சியில் பல சமூக நீதித் திட்டங்களை கொண்டு வந்தவர் கருணாநிதி. ஆனால், திமுக ஆட்சியில் இருந்தபோது என்ன செய்தது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்கிறார். கடந்த 2006-இல் நடைபெற்ற வன்னியர் சங்க மாநாட்டில், கருணாநிதியை அழைத்து நன்றி தெரிவித்துப் பேசிய ராமதாஸ், இப்போது மாற்றிப் பேசுகிறார்.

திமுக இந்தத் தேர்தலுடன் இல்லாமல் போய்விடும் என்பது ராமதாஸின் வாடிக்கைப் பேச்சு. மக்கள் அதனை வேடிக்கையாகத் தான் எடுத்துக் கொள்வர். ஏற்கெனவே, ஜெயலலிதாவை ஒருமையில் பேசிய அவர், எங்களுக்கு நாகரிகம் இல்லை என்கிறார். சாதியின் பெயரால் அரசியல் லாபம் தேடும் அவரது முயற்சிக்கு மக்கள் உரிய பதிலடி தருவர். திமுகவின் தேர்தல் அறிக்கையில், விவசாயிகளின் நலனுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், ஏழைக்குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கும் திட்டம் சிறப்பான திட்டம்.

திமுக ஆட்சிக்கு வந்ததும்,  மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கப்படும். 10-ஆம் வகுப்பு தகுதியில் ஒரு கோடி பேருக்கு சாலைப் பணியாளர்கள் வேலை வழங்கப்படும்,  50 லட்சம் மகளிருக்கு வேலை, மகளிருக்கு ரூ.50 ஆயிரம் வட்டியில்லா கடன் வழங்கப்படும்.

கடந்த 8 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள அதிமுகவினர்,  அவர்களது சாதனையைச் சொல்லாமல்,  திமுகவை குறை சொல்லி பிரசாரம் செய்கின்றனர். முதல்வர் பழனிசாமி தன்னை விவசாயி என்கிறார். சேலம் எட்டு வழிச் சாலைத் திட்டத்தால் 186 ஏரிகள், 341 குளங்கள்,  4,000 கிணறுகள் பாதிக்கப்படுவதை ஆதரிப்பவர் தன்னை ஒரு விவசாயி என்று சொல்லிக் கொள்வதை எப்படி ஏற்க முடியும்?

தேர்தலில் வாரிசுகள் களமிறங்குவது தவறில்லை,  தகுதியும்,  திறமையும் உள்ளவர்களுக்கு வாய்ப்பளிப்பதை நீங்கள்தான் அங்கீகரிக்க வேண்டும் என்றார் அவர்.

கூட்டத்தில் திமுக முன்னாள் அமைச்சர் க.பொன்முடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com