வியாழக்கிழமை 21 பிப்ரவரி 2019

தனியார் மருத்துவமனைகள் நெறிசார்ந்து செயல்பட வேண்டும்: மருத்துவப் பல்கலை. துணைவேந்தர் கீதாலட்சுமி

DIN | Published: 28th November 2018 02:38 AM


தனியார் மருத்துவமனைகள் வணிக நோக்கமின்றி நெறி சார்ந்து செயல்பட வேண்டும் என்று தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி வலியுறுத்தியுள்ளார். 
தமிழக அரசு, இந்திய தொழில் வர்த்தக சபை (ஃபிக்கி) மற்றும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் ஆகியற்றின் சார்பில் டேன்கேர் - ஒரு நாள் மருத்துவக் கருத்தரங்கு சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 11-ஆவது ஆண்டாக நடைபெறும் இந்த நிகழ்வில், இந்த முறை அனைவருக்கும் தரமான மற்றும் தகுந்த மருத்துவம் என்ற தலைப்பில் பல்வேறு கருத்தரங்க அமர்வுகள் நடைபெற்றன. அதில் தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எட்வின் ஜோ உள்பட பலர் கலந்துகொண்டனர்.
முன்னதாக நடைபெற்ற தொடக்க விழாவில் , தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் வர்த்தகப் பிரிவு துணைத் தலைவர் ஜே.விக்னேஷ் குமார், அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவ நிபுணர் டாக்டர் வி.பாலாஜி, ஃபிக்கி தமிழக கவுன்சில் தலைவர் அருண், முதன்மை நிர்வாகி ரூபன் ஹாப்டே ஆகியோர் பங்கேற்றனர். மாநிலத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தன்னார்வ அமைப்புகளுக்கு அப்போது விருதுகள் வழங்கப்பட்டன.
அதன்படி நிகழாண்டுக்கான சிறந்த அரசு மருத்துவமனையாக மதுரை தோப்பூர் மருத்துவமனை தேர்ந்தெடுக்கப்பட்டது. அதேபோன்று, சென்னை, மேடவாக்கத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அடையாறு புற்றுநோய் மருத்துவமனை, தி பான்யன் சென்னை தன்னார்வ அமைப்பு ஆகியவற்றின் சேவைகளை பாராட்டி விருதுகள் வழங்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து, கருத்தரங்க தொடக்க விழாவில் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி பேசியதாவது:
மருத்துவத் துறையை மேம்படுத்தவும், அனைவருக்கும் உரிய மருத்துவ வசதிகளை ஏற்படுத்தித் தரவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தரமான வகையிலும், குறைந்த கட்டணத்திலும் மருத்துவ சேவைகள் அரசால் வழங்கப்பட்டு வருகின்றன.
விரிவான காப்பீட்டுத் திட்டம் உள்பட பல்வேறு நலத் திட்டங்களின் மூலமாக அவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
அதேவேளையில் தனியார் மருத்துவமனைகளில் அத்தகைய சூழல் உள்ளதா? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். ஒரு சில மருத்துவமனைகள் மட்டுமே நோயாளிகளின் பொருளாதாரச் சூழல் அறிந்து சிகிச்சைக்கான கட்டணத்தை வசூலிக்கின்றன. பெரும்பாலான மருத்துவமனைகள் அதுகுறித்து கவலைப்படுவதில்லை.
மருத்துவ சேவைகளுக்கு இந்திய அளவில் தமிழகம்தான் மிகச் சிறந்த மாநிலமாக திகழ்ந்து வருகிறது. நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும் இங்கு சிகிச்சை பெற மக்கள் வருகின்றனர். வெளிமாநிலத்தவர் அனைவரும் நமது மருத்துவ வசதிகளைக் கண்டு வியப்படைகின்றனர். அந்த நற்பெயரை காப்பாற்ற வேண்டும்.
அதற்கு தனியார் மருத்துவமனைகள் நெறி சார்ந்த பண்புகளுடன் சேவையாற்ற வேண்டியது அவசியம். அடுத்தபடியாக, சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நோயாளிகளுக்கும், மருத்துவர்களுக்குமான தொடர்பு நீடிக்க வேண்டும். அதாவது, சிகிச்சைக்கு பிறகு எவ்வாறு இருக்க வேண்டும், எத்தகைய வாழ்வியல் முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பன தொடர்பான விழிப்புணர்வை நோயாளிகளுக்கு மருத்துவர்கள் ஏற்படுத்த வேண்டும்.
சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் தனியார் மருத்துவமனைகளும் பங்களிப்பது அவசியம் என்றார் அவர்.

More from the section

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
இலங்கை கடற்படை அட்டூழியம்: தமிழக மீனவர்கள் 13 பேர் கைது
காங்கிரஸுக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள்: திமுக கூட்டணியில் உடன்பாடு
ஏழைகளுக்கு சிறப்பு நிதியுதவி திட்டம்: 24-ல் தொடக்கம்
காவல்துறை பணியிட மாறுதலில் நீதிமன்றம் தலையிடமுடியாது