சனிக்கிழமை 20 ஜூலை 2019

2 நாள் மழையில் 1 அடி உயர்ந்த பாபநாசம் அணை நீர்மட்டம்: மணிமுத்தாறு அருவியில் 3 ஆம் நாளாகக் குளிக்கத் தடை

DIN | Published: 26th December 2018 12:42 AM
பாபநாசம் அகஸ்தியர் அருவியில் செவ்வாய்க்கிழமை குளித்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்


மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த 22 ஆம் தேதி இரவு முதல் தொடர்ந்து மழை பெய்தும் பாபநாசம் அணையின் நீர்மட்டம் 1 அடி மட்டுமே உயர்ந்துள்ளது. மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 3 ஆவது நாளாக வனத் துறையினர் தடைவிதித்துள்ளனர்.
நிகழாண்டு வடகிழக்குப் பருவமழை காலதாமதமாகத் தொடங்கிய நிலையில், தென் தமிழகத்தில் இதுவரை போதுமான அளவு மழை இல்லை. வழக்கத்திற்கு மாறாக சுமார் 25 சதவீதம் மழை குறைவாகவே பெய்துள்ளது. இந்நிலையில், கடந்த 22 ஆம் தேதி இரவு முதல் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அதிக மழைப்பொழிவு இருந்தது. என்றாலும், அணைகளில் எதிர்பார்த்த அளவு நீர்மட்டம் உயராததால், விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
143 அடி உயரம் கொண்ட பாபநாசம் காரையார் அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 119.5 அடியாகவும், செவ்வாய்க்கிழமை காலை 120.60 அடியாகவும் இருந்தது. 2 நாள்கள் மழை பெய்தாலும் அணையின் நீர்மட்டம் ஓர் அடி மட்டுமே உயர்ந்துள்ளது. 156 அடி உயரம் கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 23-ம் தேதி 120.80 அடியாகவும், செவ்வாய்க்கிழமை 2 அடி உயர்ந்து 122.87 அடியாகவும் இருந்தது.
118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 23-ம் தேதி 103.83 அடியாகவும், செவ்வாய்க்கிழமை 104.30 அடியாகவும் இருந்தது. 85 அடி உயரம் கொண்ட கடனாநதி அணையின் நீர்மட்டம் 23-ம் தேதி 78.5 அடியாகவும், செவ்வாய்க்கிழமை 79.10 அடியாகவும் இருந்தது. 84 அடி உயரம் கொண்ட ராமநதி அணையின் நீர்மட்டம் 23-ம் தேதி 65 அடியாகவும், செவ்வாய்க்கிழமை 65.75 அடியாகவும் இருந்தது.
காரையாறு அணைக்கு செவ்வாய்க்கிழமை காலை நீர்வரத்து 1409.58 கனஅடியாகவும், அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 855.99 கனஅடியாகவும் இருந்தது. மணிமுத்தாறு அணைக்கு நீர்வரத்து 922 கன அடியாகவும், அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 480 கன அடியாகவும் இருந்தது. கடனாநதி அணைக்கு நீர்வரத்து 145 கன அடியாகவும், அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 70 கன அடியாகவும் இருந்தது. ராமநதி அணைக்கு நீர்வரத்து 54 கன அடியாகவும், அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 30 கன அடியாகவும் இருந்தது.
இதுவரை பெய்த வடகிழக்குப் பருவமழை மூலம் அணைகளுக்கு போதிய நீர்வரத்து இல்லை. இதனால், பிசான சாகுபடிக்கும், கோடைகாலத்தில் குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளது. இந்நிலையில், மணிமுத்தாறு அருவியில் நீரின் வேகம் அதிகமாக இருப்பதால், 3ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத் துறையினர் தடைவிதித்தனர். அருவிக்குச் சென்று பார்வையிட மட்டும் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். இதனால், கிறிஸ்துமஸ் விடுமுறையில் வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
அதேநேரத்தில், பாபநாசம், அகஸ்தியர் அருவிக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்திருந்தனர். கோயம்புத்தூர், சென்னை, பெங்களூரு, திருச்சி உள்ளிட்ட இடங்களிலிருந்து வந்திருந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அகஸ்தியர் அருவியில் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.


 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

திருச்சியில் தியாகராஜ பாகவதருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும்: முதல்வா் பழனிசாமி அறிவிப்பு
நியாய விலைக் கடை பணியாளா்களுக்கு முதல்வர் அறிவித்துள்ள சலுகைகள் இதுதான்!
வேலூர் மக்களவைத் தேர்தல்: தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
தமிழகத்தில் தமிழை வளர்க்கும் நடவடிக்கையில் மத்திய அரசு: சொன்னது நிச்சயம் இவர்தான்!
யாரும் எதிர்பாராத வகையில் அத்திவரதரைக் காண வந்த கூட்டம் திடீரென குறைந்தது