வியாழக்கிழமை 21 பிப்ரவரி 2019

நியமன எம்எல்ஏக்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு புதுவை ஆளுநர் கிரண் பேடி வரவேற்பு

DIN | Published: 07th December 2018 01:59 AM
புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடியை வியாழக்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்ற பாஜக நியமன எம்எல்ஏக்கள் வி.சாமிநாதன், கே.ஜி.சங்கர், எஸ்.செல்வகணபதி உள்ளிட்டோர்.


புதுவை நியமன எம்எல்ஏக்கள் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி வரவேற்றுள்ளார்.
புதுவை நியமன எம்எல்ஏக்களுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது. இதையடுத்து, நியமன எம்எல்ஏக்கள் வி.சாமிநாதன், கே.ஜி.சங்கர், எஸ்.செல்வகணபதி ஆகியோர் ஆளுநர் மாளிகைக்கு வந்து, ஆளுநர் கிரண் பேடியைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
பின்னர், ஆளுநர் கிரண் பேடி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
புதுவை நியமன எம்எல்ஏக்கள் சட்டப்படிதான் நியமிக்கப்பட்டனர். அதன்படியே ஆளுநர் மாளிகையில் அவர்கள் பதவியேற்றுக் கொண்டனர். இதை உச்ச நீதிமன்றத் தீர்ப்பும் உறுதி செய்துள்ளது. கடந்த ஓராண்டாக மிகுந்த இடர்பாடுகளைச் சந்தித்து வந்த நியமன எம்எல்ஏக்கள் தற்போது வெற்றி பெற்றுள்ளனர். இது மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும்.
புதுவையை யூனியன் பிரதேச சட்டம்தான் கட்டுப்படுத்துகிறது. எனவே, சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவது ஆளுநரின் பொறுப்பு. இங்கு அதிகாரத்தில் உள்ள அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். ஒவ்வொரு நாளும் புதுவையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது.
நியமன எம்எல்ஏக்களுக்கு என தனியாக எந்தத் தொகுதியும் இல்லை. அவர்கள் மூவரும் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களுக்காகக் குரல் கொடுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
நியமன எம்எல்ஏக்கள் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் மக்களுக்காக உழைக்க வேண்டும். நான்கூட வார விடுமுறையின்றி உழைக்கிறேன். புதுவை பிரதேசம் நாட்டின் சிறப்பான பகுதியாகும். மேலும், சுத்தமான பகுதியும்கூட. மாநிலத்தின் முன்னேற்றத்தைக் குறிக்கோளாக கொண்டு நாம் அனைவரும் செயல்பட வேண்டும் என்றார் அவர்.


 

More from the section

அரசியல் உதவாக்'கரைகள்' உடைந்து மக்கள் வெள்ளம் பெருக்கெடுக்கும்: கட்சியின் முதல் ஆண்டில் கமல் முழக்கம்
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
இலங்கை கடற்படை அட்டூழியம்: தமிழக மீனவர்கள் 13 பேர் கைது
காங்கிரஸுக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள்: திமுக கூட்டணியில் உடன்பாடு
ஏழைகளுக்கு சிறப்பு நிதியுதவி திட்டம்: 24-ல் தொடக்கம்