வியாழக்கிழமை 21 பிப்ரவரி 2019

சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தொற்று நோய் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்: சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் 

DIN | Published: 07th December 2018 01:57 AM


கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தொற்று நோய் பரவுவதாக சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை முதன்மைச் செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி : 
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தொற்று நோய் பரவாமல் தடுக்கும் வகையில் இதுவரை 486 நிலையான மருத்துவக் குழுக்கள் அனுப்பப்பட்டு, 29,168 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 8.37 லட்சம் பேருக்கு மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன. மேல் சிகிச்சைக்குப் பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கும் உரிய சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. 

169 சிறப்பு மருத்துவக் குழுக்கள், கேரளத்திலிருந்து அழைக்கப்பட்ட 6 சிறப்பு மருத்துவக் குழுக்கள், 6 கொள்ளை நோய்த் தடுப்பு மருத்துவக் குழுக்கள், 45 உணவுப் பாதுகாப்பு குழுக்கள் என 312 குழுக்கள், புயல் பாதித்த மாவட்டங்களில் தொற்றுநோய்த் தடுப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

இதைத் தவிர, குடிநீர் தொட்டிகளுக்கு குளோரினேஷன் செய்ய 372 குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேலும், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் என சுமார் 3 ஆயிரம் பேர் மருத்துவப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நாகை மாவட்டம், வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு அண்மையில் 5 நாள்கள் காய்ச்சல் தொடர்ந்தது. அவர், மேல் சிகிச்சைக்காக திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது குணமடைந்து வருகிறார். அதே போல, மேலும் ஒருவருக்குக் காய்ச்சல் ஏற்பட்டது. பரிசோதனைகளில் அவருக்கு எவ்விதத் தொற்றும் இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், புயல் பாதித்த மாவட்டங்களில் மூளைக் காய்ச்சல் பரவுவதாக சமூக வலைதளங்களில் தேவையற்ற வதந்திகள் பரப்பப்படுகின்றன. இந்த வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம். 

வயல்வெளிகள், தேங்கிய நன்னீர் நிலைகள் காய்ச்சலை உருவாக்கும் கொசுக்கள் வளர்வதாகக் கண்டறியப்பட்டு, அந்தப் பகுதிகளில் கொசு ஒழிப்புப் பணிகள் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

எனவே, தொற்றுநோய் குறித்து பரப்பப்படும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம், எவ்வித அச்சமும் கொள்ள வேண்டாம் என்றார் பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை முதன்மைச் செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன்.

More from the section

இலங்கை கடற்படை அட்டூழியம்: தமிழக மீனவர்கள் 13 பேர் கைது
காங்கிரஸுக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள்: திமுக கூட்டணியில் உடன்பாடு
ஏழைகளுக்கு சிறப்பு நிதியுதவி திட்டம்: 24-ல் தொடக்கம்
காவல்துறை பணியிட மாறுதலில் நீதிமன்றம் தலையிடமுடியாது
கொடநாடு வழக்கு விவகாரம்: சயன், மனோஜை கைது செய்ய தடை