சனிக்கிழமை 23 பிப்ரவரி 2019

இயற்கை விவசாய நிபுணர் நெல் ஜெயராமன் காலமானார்: விவசாயிகள் கண்ணீர் அஞ்சலி

DIN | Published: 07th December 2018 01:59 AM


திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாய ஆர்வலர் நெல். ஜெயராமன்(50) வியாழக்கிழமை காலமானார். 

கட்டிமேடு கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி வாண்டையார்- முத்துலெட்சுமி தம்பதிக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தவர் நெல்.ஜெயராமன். பள்ளிக் கல்வியை முடித்த இவர், திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார் அச்சகம் ஒன்றில் வேலை செய்தார்.

பின்னர், நுகர்வோர் பாதுகாப்புக் குழுவைத் தொடங்கி, தீவிரமாக செயல்பட்டதன் காரணமாக, நுகர்வோர் பாதுகாப்பு குறித்த அரசு சார்பிலான பல்வேறு அமைப்புகளில் ஆலோசகராக விளங்கினார். 

மேலும், பள்ளிகளில் மாணவர்களுக்கான நுகர்வோர் மன்றங்களைத் தொடங்கியதுடன், நுகர்வோர் குறைதீர் மன்றங்கள் மூலமாக பலருக்கு இழப்பீடுகளையும் பெற்றுத்தந்துள்ளார். இதன் காரணமாக, கடந்த காலங்களில் நுகர்வோர் ஜெயராமன் என அழைக்கப்பட்டார். 

பின்னர், கேரள மாநிலத்தைச் சேர்ந்த கிரியேட் நமது நெல்லைக் காப்போம் என்ற அமைப்பின் தமிழக ஒருங்கிணைப்பாளராக செயல்படத் தொடங்கினார். இயற்கை விவசாயத்தின் மீது தனி அக்கறை கொண்டு, இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரால் ஈர்க்கப்பட்டு, அழிந்துபட்ட பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்தல், இயற்கை முறை விவசாயத்தில் விவசாயிகளின் கவனத்தை ஈர்க்கச் செய்தல் பணிகளுக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். 

தனது நீண்ட நெடிய தேடல்கள் மூலம், மாப்பிள்ளை சம்பா, சீரக சம்பா, மைசூர் மல்லி, கிச்சடி சம்பா உள்பட சுமார் 170-க்கும் அதிகமான பாரம்பரிய நெல் ரகங்கள் மீட்டெடுத்த பெருமைக்குரியவர் நெல் ஜெயராமன். ஆண்டுதோறும் நெல் திருவிழா நடத்தி, ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்குப் பாரம்பரிய நெல் விதைகளை இலவசமாக 2 கிலோ வழங்கி, அடுத்த ஆண்டில் 4 கிலோவாக பெறும் சுழற்சி முறையில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான விவசாயிகளை பாரம்பரிய நெல் ரகங்களை உற்பத்தி செய்ய வைத்தவர். 

அழிவின் விளிம்பில் இருந்த பாரம்பரிய நெல் ரகங்களையும், இயற்கை விவசாயத்தையும் காப்பாற்ற சிறப்பாக பங்காற்றியவர் என்ற அடிப்படையில் ஜெயராமனை, இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் நெல் ஜெயராமன் என அடையாளப்படுத்தினார். 

கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நெல்.ஜெயராமன், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் வியாழக்கிழமை காலமானார். இவருக்கு மனைவி சித்ரா, மகன் சீனிவாசராம் ஆகியோர் உள்ளனர். 

சென்னையில் இருந்து வியாழக்கிழமை இரவு கட்டிமேடு கிராமத்துக்குக் கொண்டு வரப்பட்ட நெல். ஜெயராமனின் உடலுக்குத் திரளான விவசாயிகள் அஞ்சலி செலுத்தினர். இறுதிச் சடங்கு வெள்ளிக்கிழமை (டிச.7) நடைபெறுகிறது. தொடர்புக்கு 94433 20954

முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இரங்கல்: நமது பாரம்பரிய நெல் ரகங்களைப் பாதுகாக்கும் அரும்பணியை ஆற்றியவர் நெல் ஜெயராமன். அவர் உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் காலமானார் என்பதை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

இதுவரை ஆயிரக்கணக்கான விவசாயிகளை பாரம்பரிய நெல் விவசாயத்தில் ஈடுபடுத்தி தமிழகத்தில் பாரம்பரிய நெல் உற்பத்தியை உயர்த்தினார் . அவரது சிறப்பான சேவையைப் பாராட்டி ரூ.5 லட்சம் நிதியுதவி தமிழக அரசால் அளிக்கப்பட்டது. நெல் ஜெயராமனின் மறைவு தமிழகத்துக்கும், வேளாண் துறைக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்துக்கும், விவசாயிகளுக்கும் ஆழ்ந்த இரங்கல் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இரங்கல்: மண்வளம் காக்கும் நெல் விளைச்சலைப் பெருக்கி இயற்கை வேளாண்மை வாயிலாக புதிய விடியலை உருவாக்கி வந்த நெல் ஜெயராமன் மறைவு செய்தி அறிந்து வேதனையடைகிறேன்.

ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி: மறைந்த நெல் ஜெயராமனின் உடல், தேனாம்பேட்டையில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் முத்தரசன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட தலைவர்களும், இயக்குநர்கள் சுசீந்திரன், தங்கர்பச்சான், நடிகர்கள் கார்த்தி, சூரி உள்ளிட்ட திரைப் பிரமுகர்களும், ஐஏஎஸ் அதிகாரி சகாயமும் நேரில் அஞ்சலி செலுத்தினர். இயற்கை வேளாண்மையை மீட்டெடுக்க அயராது பாடுபட்ட ஜெயராமன், இயற்கை எய்தியது விவசாயிகளுக்கு மட்டுமன்றி அனைத்து மக்களுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு என்று அவர்கள் இரங்கல் தெரிவித்தனர். மறைந்த ஜெயராமனுக்கு மனைவி, மகன் உள்ளனர்.

More from the section

அதிமுக கூட்டணியை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: ப. சிதம்பரம்
மீட்கப்பட்ட சிலைகளை வைக்க பாதுகாப்பான இடங்களைக்  கண்டறிந்து வருகிறோம்: உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல்
ஆயுதப்படையில் துணை ஆணையர்கள் 4 பேர் மாற்றம்
அமைச்சரின் செல்லிடப்பேசி மாயம்: போலீஸார் விசாரணை
தைலாபுரத்தில் முதல்வர், துணை முதல்வர்