வியாழக்கிழமை 21 பிப்ரவரி 2019

மத்திய அரசுக்கு எதிராக வரிகொடா இயக்கம்:  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

DIN | Published: 06th December 2018 01:30 AM


காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு எதிராக மத்திய அரசு தொடர்ந்து வஞ்சகம் செய்தால் வரி கொடா இயக்கம் நடத்துவோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
இது தொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: காவிரி என்பது வெறும் ஆறு அல்ல. அது தமிழகத்துக்குத் தாய். அதில் ஓடுவது வெறும் நீரல்ல. விளை நிலங்களுக்கு தாய்ப்பால். 
டெல்டா மாவட்டங்கள் எனும் குழந்தையை அந்தத் தாய்ப்பால் ஊட்டித்தான் வளர்க்கிறாள் காவிரித் தாய். அந்தத் தாயைக் காக்க வேண்டிய தனயர்கள்தான் தமிழர்கள். அதனால்தான், காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்ட கர்நாடகம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதைக் கண்டித்து திருச்சியில் போராட்டம் நடத்தினோம்.
அந்தப் போராட்டத்தில் காவிரி விவகாரத்தில் தமிழகத்தைத் தொடர்ந்து வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசு அதன் போக்கை மாற்றிக் கொள்ளாவிட்டால் தமிழகத்துக்குள் பிரதமர் மோடி வர முடியாது என்ற குரலே பலமாக ஒலித்தது. 
துரோகம்: உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பு செல்லும் என்பதையும், காவிரி ஆறு கர்நாடகத்துக்கு மட்டும் சொந்தம் கிடையாது என்பதையும் அழுத்தமாகக் கூறிவிட்டது. இந்த நிலையில், உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை வாரியத்தின் அனுமதியின்றி, மேக்கேதாட்டு அணைக்கு மத்திய அரசு அனுமதியளித்திருப்பது தமிழகத்துக்கு மோடி அரசு செய்திருக்கும் பச்சைத் துரோகம். 
அதனால்தான், வஞ்சகத்தைத் தொடர்ந்து மேற்கொண்டு வரும் மத்திய அரசுக்கு தமிழகம் ஏன் வரி கட்ட வேண்டும் என என்னுடைய கண்டன உரையில் கேள்வி எழுப்பினேன். வஞ்சகம் தொடர்ந்தால் பிரிட்டிஷாரை எதிர்க்க காந்தி காட்டிய வழியில் தோழமைக் கட்சிகளின் துணையுடனும் மக்களின் பங்கேற்புடனும் வரிகொடா இயக்கம் நடத்த திமுக தயாராக இருக்கிறது என்றார்.
 

More from the section

இலங்கை கடற்படை அட்டூழியம்: தமிழக மீனவர்கள் 13 பேர் கைது
காங்கிரஸுக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள்: திமுக கூட்டணியில் உடன்பாடு
ஏழைகளுக்கு சிறப்பு நிதியுதவி திட்டம்: 24-ல் தொடக்கம்
காவல்துறை பணியிட மாறுதலில் நீதிமன்றம் தலையிடமுடியாது
கொடநாடு வழக்கு விவகாரம்: சயன், மனோஜை கைது செய்ய தடை