வியாழக்கிழமை 21 பிப்ரவரி 2019

நமது ரத்த அணுவில் சமய நல்லிணக்கம் கலந்துள்ளது: தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் பேச்சு

DIN | Published: 06th December 2018 02:40 AM
பெரும்புலவர் சி. நயினார் முகமது சமய நல்லிணக்க அறக்கட்டளைச் சொற்பொழிவில் பேசுகிறார் கல்லூரிச் செயலர் மற்றும் தாளாளர் ஏ.கே.காஜா நஜிமுதீன். 

 சமய நல்லிணக்கம் ஒவ்வொரு இந்தியனின் ரத்தத்திலும் கலந்திருக்கிறது என்றார் தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன்.
திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் முதுகலை மற்றும் தமிழாய்வுத் துறை சார்பில் புதன்கிழமை நடைபெற்ற பெரும்புலவர் சி. நயினார் முகமது சமய நல்லிணக்க அறக்கட்டளைச் சொற்பொழிவில் பங்கேற்று, சமய நல்லிணக்கம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றிய அவர் மேலும் பேசியது: 
அரை நூற்றாண்டுக்கு முன்னால், ஒவ்வொருவரின் அடையாளமாகத் திகழ்ந்தவை இரண்டு மட்டுமே. ஒன்று, எல்லோரும் அறிந்த ஆலயங்கள், மற்றொன்று கல்விச்சாலைகள். இந்த வகையில் திருச்சி என்றாலே ஜமால் முகமது கல்லூரியைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது.
அன்றைய கல்விச்சாலைகளுக்கும், இன்றைய கல்விச்சாலைகளுக்கும் வேறுபாடுகள் உள்ளன. எந்த உள்நோக்கமும் இல்லாமல், நமது சமுதாயம் முன்னேற வேண்டும் என்ற அடிப்படையில் இலவசமாகக் கல்வி அளிப்பதற்காக கல்விச் சாலைகள் அந்தக் காலத்தில் உருவாக்கப்பட்டன. இப்போது, அனைத்துமே வணிகமயமாகிவிட்டது. 
சமுதாயத்துக்கு கல்விச் சேவை அளிக்க வேண்டும் என்பதற்காக ஜமால் முகமது கல்விக் குழுமங்களை உருவாக்கிய என்.எம். காஜாமியான், எம். ஜமால் முகமது ஆகியோரை தலை வணங்குதல் அவசியமாகிறது. சமய நல்லிணக்கம் கல்வியால் மட்டுமே சாத்தியமாகும். அந்தப் பணியை ஜமால் முகமது கல்லூரியை நிறுவிய மகான்கள் தீர்க்க தரிசனத்துடன் செய்ய முயன்றிருக்கிறார்கள்.
இந்த வரிசையில் பெரும்புலவர் நயினார் முகமது திருச்சி ஜமால் முகமது கல்லூரிக்குத் தனிப்பெரும் பெயரை பெற்றுத் தந்துள்ளார். ஐந்தாண்டுகள் ஜமால் முகமது கல்லூரியின் முதல்வராக இருந்தது மட்டுமல்லாமல், சீறாப் புராணம் குறித்த அவரது நூலுக்கு சாகித்ய அகாதெமியின் விருதும் பெற்றவர் பெரும்புலவர் நயினார் முகமது. குன்றக்குடி அடிகளாரிடம் பெரும்புலவர் என்ற பட்டத்தைப் பெற்ற அவரது பெயரிலான சிறப்புச் சொற்பொழிவில் உரையாற்றுவதில் பெருமிதம் அடைகிறேன். 
சமய நல்லிணக்கம் என்பது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இந்தியனின் ரத்த அணுவிலும் கலந்துள்ளது. பிரிட்டிஷ் காலனி ஆட்சி வந்தது முதல் அதனைச் சிதைக்கும் முயற்சி தொடர்கிறது. 
தமிழ் இலக்கியங்கள் சமய நல்லிணக்கம் குறித்துத் தெளிவாகக் குறிப்பிடுகின்றன. புறநானூறு "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்றும், கம்பகாதை "அனைத்து நதிகளும் கடலில் சங்கமிப்பதுபோல, அனைத்து மதங்களும் ஒரே இறைவனை அடைவதற்கு வழிகோலுகின்றன' என்றும் எடுத்துரைக்கின்றன. 
இந்தியாவில் 99 விழுக்காட்டினர் மத்தியில் சமய நல்லிணக்கம் உள்ளது. ஒரு சதவீதத்தினர் மட்டுமே அதைச் சிதைக்கும் எண்ணத்தில் உள்ளனர். குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைப்பவர்கள் எதற்காக அப்படிச் செய்கிறார்கள் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
வளைகுடா நாடுகளில் ஒரே மதம், ஒரே மொழி பேசினாலும் பிரிந்து கிடக்கும் நிலையைக் காணமுடிகிறது. ஆனால், இந்தியாவில் பல மொழிகள், பல மதங்கள் இருந்தாலும் நாம் ஒரே நாடாக இருக்கிறோம்.
இந்தியாவில் சமய நல்லிணக்கத்தைத் தனியாகப் பேசத் தேவையில்லை. சமய நல்லிணக்கத்தைக் குலைக்க முயல்பவர்களை நாம் அடையாளம் கண்டாலே போதுமானது. இந்த உலகில் யாரும் நிரந்தரமாகத் தங்குவதற்கு வரவில்லை. இடைக்கால நுழைவு அனுமதியில்தான் வந்துள்ளோம் என்பதை உணர்ந்தாலே மனித நேயம் மலர்ந்து விடும் என்றார்.
இந்த சொற்பொழிவுக்குத் தலைமை வகித்து கல்லூரித் துணை முதல்வர் ஏ. முகமது இப்ராஹிம் பேசுகையில், மத நல்லிணக்கம் எனக் குறிப்பிடும்போது மதம் என்ற சொல்லைப் பயன்படுத்துதல் சரியாக இருக்காது. மதம் என்பதே விலங்குகளுக்கானது. மதம் பிடித்துவிட்டது என்றால் யானையைத்தான் குறிப்பிடுவோம். எனவே, சமயம் என்றே குறிப்பிட வேண்டும். சமயம் என்ற சொல்லே பக்குவப்படுத்தும் என்றார்.
கல்லூரிச் செயலர் மற்றும் தாளாளர் ஏ.கே.காஜா நஜிமுதீன் பேசியது: சமய நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக மட்டுமன்றி தமிழ் வளர்க்கும் பணியிலும் ஜமால் முகமது குழுமங்கள் தொன்று தொட்டுப் பணியாற்றி வருகின்றன. இதற்கென அறக்கட்டளை நிறுவி ஆண்டுதோறும் இலக்கியச் சொற்பொழிவுகள் வாயிலாக தமிழ்ப் பணியாற்றி வருகிறோம் என்றார்.
கல்லூரித் துணைச் செயலர் கே. அப்துல் சமது, இயக்குநர் மற்றும் நிதியாளுநர் கே.என். அப்துல்காதர் நிஹால், தமிழாய்வுத்துறைத் தலைவர் (பொறுப்பு) அ. சையத் ஜாகீர் ஹசன், இணைப் பேராசிரியர் கா. முகமது இஸ்மாயில், உதவிப் பேராசிரியர் து. பிரபாகரன் உள்ளிட்டோர் பேசினர். 
கல்லூரித் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் சொற்பொழிவில் பங்கேற்றனர்.

 நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள்.


 

More from the section

அரசியல் உதவாக்'கரைகள்' உடைந்து மக்கள் வெள்ளம் பெருக்கெடுக்கும்: கட்சியின் முதல் ஆண்டில் கமல் முழக்கம்
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
இலங்கை கடற்படை அட்டூழியம்: தமிழக மீனவர்கள் 13 பேர் கைது
காங்கிரஸுக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள்: திமுக கூட்டணியில் உடன்பாடு
ஏழைகளுக்கு சிறப்பு நிதியுதவி திட்டம்: 24-ல் தொடக்கம்