வியாழக்கிழமை 21 பிப்ரவரி 2019

கருணாநிதி சிலை திறப்பு: ரஜினி, கமலுக்கு திமுக அழைப்பு

DIN | Published: 06th December 2018 06:35 PM

 

முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதியின் முழு உருவச் வெண்கலச் சிலை அண்ணா அறிவாலயத்தில் டிசம்பர் 16-ஆம் தேதி திறக்கப்படும் என்று திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. புனரமைக்கப்பட்ட அண்ணாவின் சிலையும் அதே நாளில் நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவாலயத்தின் முகப்பில் அண்ணாவின் சிலை இருந்தது. இந்தச் சிலை 1987 செப்டம்பர் 16-இல் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. தற்போது அறிவாலயத்தில் கருணாநிதியின் வெண்கலச் சிலை அமைக்கப்பட உள்ளது. அதனால், அண்ணாவின் சிலையும் வெண்கலச் சிலையாக இருக்க வேண்டும் என்று திமுக தலைமை முடிவு செய்தது. 

அதைத் தொடர்ந்து அண்ணாவின் சிலை அகற்றப்பட்டு, கருணாநிதியின் சிலை தயாராகி வரும் மீஞ்சூருக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு ஏற்கெனவே அறிவாலயத்தில் இருந்தது போன்று அதே வடிவத்தில் அண்ணாவின் வெண்கலச் சிலை செதுக்கப்பட உள்ளது. இந்த இரு சிலைகளும் டிசம்பர் 16-ஆம் தேதி அறிவாலயத்தில் திறக்கப்பட உள்ளது.

கருணாநிதியின் சிலையைத் திறந்து வைக்க வருமாறு சோனியாகாந்திக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நவம்பர் 11-ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், மு.க.ஸ்டாலினுக்கு சோனியாகாந்தி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பது, சமூக நீதிக்காகவும், ஜனநாயகத்தின் மாண்புக்காகவும் அர்ப்பணித்தவர். அவருடைய சிலையை திமுக தலைமை அலுவலகத்தில் திறப்பது சிறப்பாகும். இந்த விழாவில் நான் பங்கேற்பது எனக்குக் கிடைத்த கெளரவம். உங்கள் அழைப்பை ஏற்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கு நடிகர் ரஜினிகாந்த், நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் ஆகியோருக்கு திமுக மூத்த நிர்வாகிகள் நேரில் சென்று வியாழக்கிழமை அழைப்பு விடுத்தனர்.

More from the section

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
இலங்கை கடற்படை அட்டூழியம்: தமிழக மீனவர்கள் 13 பேர் கைது
காங்கிரஸுக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள்: திமுக கூட்டணியில் உடன்பாடு
ஏழைகளுக்கு சிறப்பு நிதியுதவி திட்டம்: 24-ல் தொடக்கம்
காவல்துறை பணியிட மாறுதலில் நீதிமன்றம் தலையிடமுடியாது