வியாழக்கிழமை 21 பிப்ரவரி 2019

கரிசல் மண்ணின் மீது வெளிச்சம் படுவதே முக்கியம்: சாகித்ய அகாதெமி விருது பெற்ற எஸ்.ராமகிருஷ்ணன்

DIN | Published: 06th December 2018 01:25 AM


சாகித்ய அகாதெமி விருது கிடைத்திருப்பதன் மூலம் கரிசல் மண்ணின் மீதும், எளிய நாகஸ்வரக் கலைஞர்கள் மீதும் உலக வெளிச்சம் பட்டிருப்பதையே தான் முக்கியமாகக் கருதுவதாக எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் கூறினார்.
சஞ்சாரம் நாவலுக்காக சாகித்ய அகாதெமி விருது பெற்றிருப்பது குறித்து எஸ்.ராமகிருஷ்ணன் கூறியது: 
விருது கிடைத்திருப்பது உண்மையில் மகிழ்ச்சியாக உள்ளது. எழுத்தை மட்டுமே நம்பி வாழக்கூடியவன் என்ற முறையில், எழுத்தின் மூலம் கிடைத்த பெரிய கெளரவமாகத்தான் கருதுகிறேன். எழுத்தை நம்பி ஒருவர் வாழலாம் என்பதற்கான அங்கீகாரமாகத்தான் பார்க்கிறேன். 
சஞ்சாரம் நாவல் கரிசல் மண்ணின் கதை. அங்கிருக்கும் நாகஸ்வரக் கலைஞர்களைப் பற்றிய வாழ்க்கையும் ஆகும். 
அதனால், என்னோடு சேர்ந்து, அந்தக் கலைஞர்களுக்கும் கிடைத்த விருதாகத்தான் பார்க்கிறேன். எனக்குக் கிடைக்கும் வாழ்த்துகளில் பாதி அவர்களுக்குக் கிடைப்பதுதான்.
தாமதமாகக் கருதவில்லை: சாகித்ய அகாதெமி விருது பரிசீலனையில் பல்வேறு காலகட்டங்களில் என்னுடைய நெடுங்குருதி, யாமம், நிமித்தம் போன்ற நாவல்கள் இருந்துள்ளன. அப்போதெல்லாம் நான் நினைத்துக் கொண்டது ஒன்றுதான்.
பொதுவாக ஒரு புத்தகத்தின் அங்கீகாரம் என்பது வாசகர்கள் தருவதுதான். யாரோ ஒரு வாசகர் படித்துவிட்டு, இது நன்றாக இருக்கிறது என்று வேறு ஒருவருக்குக் கொடுப்பதுதான் விருது. 
எத்தனையோ வாசகர்கள் ஓடிவந்து, அன்பாக தேநீர் வாங்கிக் கொடுக்கிறார்கள். இந்த மாதிரியான வாசர்களுக்கு முன், அந்த அன்பே ஒரு எழுத்தாளர்களுக்குப் போதும் என்றுகூட நினைத்திருக்கிறேன்.
தற்போது வாசகர்கள் அங்கீகரித்த நாவலை ஒரு சமூகமும் அங்கீகரிக்கிறது என்கிறபோது, நான் மட்டுமல்ல, வாசகர்கள் எழுத்தாளர்கள் எல்லோரும் மகிழ்ச்சி அடைகின்றனர். 
ஒரு மகிழ்ச்சியை எல்லோருக்கும் தருவதற்காக விருது ஓர் அங்கீகாரமாக உள்ளது. அந்த வகையில் இந்த விருது தாமதமாகக் கிடைத்ததாகக் கருதவில்லை.
மண் மீது வெளிச்சம்: மாறாக, இந்தப் புத்தகத்துக்கு விருது கொடுத்ததன் மூலம் நாகஸ்வரக் கலைஞர்கள் மீதும், கரிசல் மண் மீது வெளிச்சம் படுகிறது. எளிய மனிதனின் குரல் உலகுக்குக் கேட்கிறது. அதுதான் முக்கியம் என நினைக்கிறேன்.
புதிய சிறுகதைகள், பயணக் கட்டுரை, உலக இலக்கியக் கட்டுரை ஆகியவற்றின் தொகுப்புகளைப் புத்தகக் காட்சியில் கொண்டு வர உள்ளேன்.
கரிசல் மண்ணில் உள்ள எளிய நாகஸ்வரக் கலைஞர்களுக்கு இந்த விருதை அர்ப்பணிக்கிறேன். ஒரு திருமண வீட்டில் வாசித்தால்கூட, நாகஸ்வரக் கலைஞர்களின் பெயர்கள் நமக்குத் தெரிவதில்லை. அவர்கள் சாப்பிட்டார்களா என்றுகூடத் தெரிவதில்லை. அதுபோன்ற எளிய கலைஞர்களுக்கே இந்த விருது.
 

More from the section

இலங்கை கடற்படை அட்டூழியம்: தமிழக மீனவர்கள் 13 பேர் கைது
காங்கிரஸுக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள்: திமுக கூட்டணியில் உடன்பாடு
ஏழைகளுக்கு சிறப்பு நிதியுதவி திட்டம்: 24-ல் தொடக்கம்
காவல்துறை பணியிட மாறுதலில் நீதிமன்றம் தலையிடமுடியாது
கொடநாடு வழக்கு விவகாரம்: சயன், மனோஜை கைது செய்ய தடை