சனிக்கிழமை 23 பிப்ரவரி 2019

கஜா புயலை பார்வையிட நேரம் கிடைக்காத மோடிக்கு பிரியங்கா சோப்ரா திருமண வரவேற்பில் கலந்துகொள்ள நேரம் கிடைத்தது எப்படி?

DIN | Published: 06th December 2018 03:36 PM


கஜா புயலின் கோரதாண்டவத்தால் தென்னை, நெற்பயிர் உள்ளிட்ட தங்களது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதால், 50 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிட்டதாகக் கூறி கதறி அழும் விவசாயிகளை பார்வையிட முடியாத பிரதமர் மோடிக்கு, பாலிவுட், ஹாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனஸ் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சம்பவம் தமிழக தலைவர்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் பெரும் வருத்தத்தையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது. 

கடந்த 16 ஆம் தேதி கஜா புயலின் கோரதாண்டவத்தால் தமிழகத்தின் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுகை  மாவட்டங்களில் மட்டும் மொத்தம், 4.45 லட்சம் வீடுகள் சேதமடைந்துள்ளன. இதில், புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் 1.56 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் பாதிப்புக்குள்ளானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கஜா புயலால் பாதிப்புக்குள்ளான 12 மாவட்டங்களில், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்கள்தான் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.   இந்த 4 மாவட்டங்களில்  பெரும்பாலான பகுதிகளில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. வீடுகள், கடைகள்,  பயிர்கள், தென்னை,  மா, பலா, தேக்கு  உள்ளிட்ட மரங்கள், மீன்பிடி படகுகள், உடைமைகள் என வாழ்வாதாரங்களை இழந்து நிரந்தர நிவாரணத்தை எதிர்நோக்கி தற்காலிக முகாம்களில் தவித்து வருகின்றனர். 

ஞாயிற்றுக்கிழமை வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி,   புயல் பாதிப்பில்  4 மாவட்டங்களிலும் சேர்த்து 4.45 லட்சதிற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதில், புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் அதிகபட்சமாக, 1,56,922 வீடுகள் சேதமடைந்துள்ளன. அடுத்தபடியாக நாகை மாவட்டத்தில், 1,11,132 வீடுகளும், திருவாரூர் மாவட்டத்தில், 1,05,077 வீடுகளும், தஞ்சை மாவட்டத்தில், 71,877 வீடுகளும் சேதமடைந்துள்ளதாக மாவட்ட நிர்வாகங்களின் சேத மதிப்பீட்டு புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன.  

இதுதவிர சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகள் இறந்துள்ளன. சுமார் 40 லட்சம் தென்னை மரங்கள் சாய்ந்துள்ளன. நான்கு மாவட்டங்களிலும் பயிரிடப்பட்டிருந்த, 20 ஆயிரம் ஏக்கர் வாழைகளும் சேதமடைந்துள்ளது. வாழை தார் பிடித்து, வெட்டும் பருவத்தில் இருந்த நிலையில் சேதமடைந்ததால், வாழைப் பயிர்களால் மட்டும், விவசாயிகளுக்கு, சுமார் ரூ. 500 கோடி சேதம் ஏற்பட்டிருப்பது தவிர, 86 ஆயிரம் ஏக்கரில் நடவு செய்யப்பட்டிருந்த நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட வேளாண் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கணக்கெடுப்பு பணி தொடர்ந்து நடந்து வருவதால், இதில் இன்னும் சேத மதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ள நிலையில், தங்களது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதால், 50 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிட்டதாகக் கூறி கதறி அழுது வருகின்றனர். புயலால் பாதிக்கப்பட்ட தென்னைகளை தோட்டத்தில் இருந்து அகற்றுவதற்கு முடியாத நிலையிலும், வங்கிகளில் வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்த முடியாமலும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 

பாதிப்பு ஏற்பட்டு 21 நாள்களை கடந்தும் பல கிராமங்களில் மக்கள் குடிநீர், மின்சார வசதியின்றி தவித்து வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் நிவராண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை.

 

மத்திய அரசின் பயிர்க் காப்பீடுத் திட்டம் மூலம் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் கொடுக்க முடியும். இதேபோல், மோடி காப்பீடுத் திட்டம் மூலம் தேவையான மருத்துவ உதவிகள் செய்யலாம். மத்திய அரசின் அனைவருக்கும் வீடு திட்டம் மூலம் சேதமடைந்த வீடுகளை மீண்டும் கட்டிக் கொடுக்கலாம். இப்படி பலவகையில் மத்திய அரசு நேரடியாகவும், தமிழக அரசு மூலமாகவும் நிவாரணங்கள் கொடுக்க முடியும் என்ற நிலையிலும், மத்திய அரசு சார்பில் இதுவரை இடைக்கால நிவாரணமாக வெறும் 3 ஆயிரம் கோடி ரூபாய் தொகை ஒதுக்கி இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. 

கடந்த காலங்களில் ஏற்பட்ட இதுபோன்ற பேரிடர் பாதிப்பை பிரதமர் வந்து பார்வையிட்டு இடைக்கால நிவாரணம் கொடுத்தார். இம்முறை மத்திய அரசு சார்பில், மத்திய அமைச்சர்கள் பொன். ராதாகிருஷ்ணன், நிர்மலா சீதாராமன் தவிர வேறு யாரும் வந்து பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடவில்லை என்பது வேதனை.

பேரிடர் பாதிப்புகளை பார்வையிட வராத பிரதமருக்கு பல தரப்பில் இருந்தும் கண்டன குரல் எழுந்தபோது, பாஜகவை சேர்ந்த மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இரண்டு நாட்களுக்கு முன் அளித்த பேட்டியில், இந்திய பிரதமர் பதவி ஒன்றும் சாதாரண பதவி கிடையாது. அதில் நிறைய சிரமங்களும், பணிச்சுமைகளும் இருக்கிறது. அதனால்தான் மோடி கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளை வந்து பார்க்க முடியவில்லை. அவரை மக்கள் குறை கூற வேண்டாம் என கூறினார். 

தமிழகம் ஏற்கனவே கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் மேக்கோதாட்டுவில் அணை கட்ட போகிறோம் என்ற செய்தி நேரத்தில் தமிழகம் கோபத்திலே கொந்தளித்துக் கொண்டிருக்கிறது.

ஆனால், உறங்குவதற்கும், ஓய்வுக்கும் கூட நேரமில்லாமல் மக்களுக்காக பம்பரமாய் விமானத்திலேயே பறந்து பறந்து உழைக்கும் மோடிக்கு, தில்லி தாஜ் பேலஸ் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற பிரபல பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா மற்றும் அமெரிக்க பாடகரான நிக் ஜோனஸ் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 1.30 மணி நேரம் வரை செலவிட்டு பிரியங்காவின் உறவினர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளவதற்கு நேரம் கிடைத்தது எப்படி?

கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக தலைநகர் தில்லியில் மாறி மாறி போராடி வரும் விவசாயிகளை இதுவரை ஒருமுறை கூட சந்தித்து அவர்களின் கோரிக்கையை இதுவரை காது கொடுத்து கேட்க நேரமில்லாத மோடிக்கு, திரைத்துறையினர், கிரிக்கெட் வீரர்களை சந்திப்பது, உலக சுற்றுவது, இல்லையென்றால் தேர்தல் பிரச்சாரம் செய்யும் மோடியால், தமிழக விவசாயிகளை மட்டும் சந்திக்க நேரமில்லாமல் போனது ஏன்? 

இயற்கையின் பேரிடரை யாரும் தடுத்திட முடியாது, ஆனால் இதைப் போன்றதொரு பேரிடர் வேறு எந்த மாநிலத்தில் நடந்திருந்தால் மோடி பறந்து போயிருப்பாரா? மாட்டாரா? ஏன் தமிழ்நாட்டுக்கு இன்னும் வரவில்லை?, வேறு மாநிலமாக இருந்திருந்தால் ஆயிரக்கணக்கான கோடி நிவாரணமாக வழங்கியிருப்பாரா? மாட்டாரா? 

இந்நிலையில், தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்து வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, 'தங்களது வருகையால் எங்களை மகிழ்வித்த உங்களது இன்சொற்கள் மற்றும் ஆசிகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்’ என தனது கணவரை நிக் ஜோனாசை தனது டுவிட்டர் பக்கத்தில் ‘டேக்’ செய்து நடிகை பிரியங்கா சோப்ரா இன்று நன்றி தெரிவித்துள்ளார்.

கஜா சேதத்தையும், விவசாயிகளின் கோரிக்கைகளை இதுவரை கண்டுகொள்ளமால் தொடர்ந்து வஞ்சித்து வரும் பிரதமர் மோடி அரசை தமிழக மக்கள் ஒருகாலமும் மன்னிக்க மாட்டார்கள்.

More from the section

அரசியல் பேச சந்திக்கவில்லை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
நலம் விசாரிக்கவே சந்தித்தேன்: நடிகர் ரஜினிகாந்த்
சென்னை அருகே 44 ஏக்கரில் புதிய பேருந்து நிலையம்: முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்
பொன் மாணிக்கவேல் ஓய்வு பெற அனுமதித்ததை எதிர்த்து தொடரப்பட்ட மனு தள்ளுபடி
சென்னை- கொல்லத்துக்கு சிறப்பு கட்டண ரயில் இயக்கம்