வியாழக்கிழமை 21 பிப்ரவரி 2019

இரட்டை இலைச் சின்னத்துக்கு லஞ்ச விவகாரம்: நீதிமன்ற விசாரணைக்கு தடை இல்லை

DIN | Published: 06th December 2018 01:32 AM


அதிமுகவின் இரட்டை இலைச் சின்னம் பெறுவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக, தில்லி பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் என்ற மல்லிகார்ஜுனாவின் கோரிக்கையை தில்லி உயர்நீதிமன்றம் நிராகரித்தது.
இது தொடர்பான வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அருண் பரத்வாஜ் அமர்வில் கடந்த நவம்பர் 17-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. 
அப்போது இந்த வழக்கில் தொடர்புடைய சுகேஷ் சந்திரசேகர், டிடிவி தினகரன், டி.பி. மல்லிகார்ஜுனா, பி. குமார் ஆகியோருக்கு எதிராக தில்லி காவல்துறை குற்றத் தடுப்புப் பிரிவு சுமத்திய குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய நீதிபதி உத்தரவிட்டார். 
இதன்படி அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. மேலும், இந்த விசாரணையின் போது குற்றம்சாட்டப்பட்டிருந்த மற்றவர்களான நத்து சிங், புல்கித் குந்த்ரா, ஜெய் விக்ரம் அரன், நரேந்திர ஆகியோர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
இதனிடையே, குற்றச்சாட்டுகள் பதிவு நடவடிக்கைக்கு எதிராக டி.பி. மல்லிகார்ஜுனா சார்பில் தில்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு தில்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.கே. பாதக் அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. 
அப்போது டி.பி. மல்லிகார்ஜுனா சார்பில் வழக்குரைஞர்கள் சுதீர் நந்தரஜோக், ஹாண்டு ஆஜராகி, இந்த விவகாரத்தில் தில்லி காவல்துறை குற்றத் தடுப்புப்பிரிவு தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் டி.பி. மல்லிகார்ஜுனாவின் பெயர் இடம் பெறவில்லை. 
துணைக் குற்றப்பத்திரிக்கையில்தான் இடம் பெற்றுள்ளது. டி.பி. மல்லிகார்ஜுனா அதிமுகவிலும் இல்லை; இந்த விவகாரத்தில் சதி செய்ததாக அவருக்கு எதிராக ஆதாரமும் இல்லை. 
எனவே, சிபிஐ சிறப்பு நீதிமன்றம் பதிவு செய்துள்ள குற்றச்சாட்டு நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும். மேலும், தில்லி பாட்டியலா சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அருண் பரத்வாஜ் அமர்வில் நடைபெறும் விசாரணைக்கும் தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
இந்தக் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி ஏ.கே. பாதக், இந்த வழக்கு தொடர்பாக தில்லி காவல் துறையின் குற்றத் தடுப்புப் பிரிவு 2 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கு விசாரணை ஜனவரி 21-ஆம் தேதி நடைபெறும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.
 

More from the section

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
இலங்கை கடற்படை அட்டூழியம்: தமிழக மீனவர்கள் 13 பேர் கைது
காங்கிரஸுக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள்: திமுக கூட்டணியில் உடன்பாடு
ஏழைகளுக்கு சிறப்பு நிதியுதவி திட்டம்: 24-ல் தொடக்கம்
காவல்துறை பணியிட மாறுதலில் நீதிமன்றம் தலையிடமுடியாது