வியாழக்கிழமை 21 பிப்ரவரி 2019

அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி பெறுவோம்: ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுகவினர் உறுதி

DIN | Published: 06th December 2018 12:45 AM
நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து புதன்கிழமை மரியாதை செலுத்திய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர்.


சட்டப் பேரவை இடைத் தேர்தல் உள்பட அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி பெறுவோம் என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அதிமுகவினர் உறுதி ஏற்றுக் கொண்டனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை அண்ணாசாலையில் இருந்து அதிமுக சார்பில் அமைதிப் பேரணி நடைபெற்றது. 
கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. காலை 10.45 மணியளவில் தொடங்கிய பேரணி 11.30 மணியளவில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை வந்தடைந்தது.
மலர் அஞ்சலி-உறுதிமொழி: ஜெயலலிதாவின் நினைவிடத்தில், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் உள்பட பலரும் மலர் வளையம் வைத்தும், மலர்களைத் தூவியும் அஞ்சலி செலுத்தினர். இதன்பின்பு, நினைவிட வாயிலில் அமைக்கப்பட்டிருந்த தனி மேடையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உறுதிமொழியை வாசிக்க, கட்சியினர் அனைவரும் தொடர்ந்து உறுதிமொழி ஏற்றனர்.
உறுதிமொழி விவரம்: 34 ஆண்டுகளாக உலகமே வியக்கும் வகையில் ஓய்வறியாது உழைத்து, கட்சியை வெற்றிச் சிகரத்தில் வீற்றிருக்கச் செய்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகழை எந்நாளும் பறைசாற்ற உறுதி ஏற்போம். 
கட்டுக்கோப்புடனும் கடமை தவறாமலும் கண்ணியத்துடனும் மக்களுக்குத் தொண்டாற்றுவது எப்படி என்பதை எல்லோருக்கும் தனது வாழ்வின் வழியாக எடுத்துரைத்தவர் ஜெயலலிதா. அவரால் வளர்த்தெடுக்கப்பட்டு ஆயிரம் காலத்துப் பயிராக வளர்ந்திருக்கும் அதிமுகவை அவர் காட்டிய வழியில் தொடர்ந்து பயணிக்க உறுதி ஏற்போம்.
இந்தியாவிலுள்ள மாநிலங்கள் வலுவுள்ளவையாகத் திகழ்ந்தால் மட்டுமே இந்திய தேசம் வலிமை பெற்றதாக விளங்கும் என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தவர் ஜெயலலிதா. தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட, நாடாளுமன்றத்தில் அதிமுகவை வலிமை படைத்த கட்சியாக விளங்க வேண்டுமென வியூகம் வகுத்து தமிழகத்தில் 37 மக்களவைத் தொகுதிகளிலும் வெற்றி பெற்று அதிமுகவை நாடாளுமன்றத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக உயர்த்தியவர். 
அவரது அரசியல் மதிநுட்பத்தையும், மாநில சுயாட்சி உணர்வுகளையும் எந்த நாளும் மனதில் கொண்டு பணியாற்ற உறுதி ஏற்போம்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கற்றுத் தந்த பாடங்களை மனதில் நிலைநிறுத்தி அவரது வழியில் நடைபெறும் தமிழக அரசு மக்களுக்கு அனைத்து நேரங்களிலும் பாதுகாவலாகச் செயல்படும் வகையில் பொது வாழ்வுக் கடமைகளை நிறைவேற்ற உறுதி ஏற்போம்.
அனைத்துத் தேர்தல்கள்: சட்டப் பேரவைத் தேர்தல், கூட்டுறவுத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், மீண்டும் சட்டப் பேரவைத் தேர்தல் என அனைத்துத் தேர்தல்களிலும் அதிமுக தொடர்ந்து வெற்றி மேல் வெற்றி ஈட்டியதற்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவே காரணம். அவரது உழைப்பின் மகத்துவத்தை உணர்ந்து அவர் காட்டிய வழியில் பணியாற்றுவோம். எதிர்வரும் சட்டப் பேரவை இடைத் தேர்தல், நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் ஆகியவற்றில் அதிமுக மகத்தான வெற்றி பெற்று, அந்த வெற்றியை ஜெயலலிதாவுக்கு காணிக்கையாக்குவோம்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அளித்த கொள்கைகள், படிப்பினைகளைப் பின்பற்றி, ஒற்றுமையாய் பாடுபட்டு கட்சியைக் கட்டிக் காப்போம் என்று அதிமுகவினர் உறுதிமொழி ஏற்றனர். அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் நன்றி தெரிவித்தார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 2-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையிலிருந்து அவரது நினைவிடம் நோக்கி புதன்கிழமை அமைதி பேரணி சென்ற அதிமுகவினர். 

More from the section

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
இலங்கை கடற்படை அட்டூழியம்: தமிழக மீனவர்கள் 13 பேர் கைது
காங்கிரஸுக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள்: திமுக கூட்டணியில் உடன்பாடு
ஏழைகளுக்கு சிறப்பு நிதியுதவி திட்டம்: 24-ல் தொடக்கம்
காவல்துறை பணியிட மாறுதலில் நீதிமன்றம் தலையிடமுடியாது