வியாழக்கிழமை 21 பிப்ரவரி 2019

தமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் தாக்கம் குறைந்துள்ளது: சுகாதாரத் துறைச் செயலர்

DIN | Published: 04th December 2018 01:54 AM
கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நோயாளி ஒருவரிடம் குறைகளைக் கேட்டறிகிறார் மாநில சுகாதாரத் துறைச் செயலர்


தமிழகம் முழுவதும் டெங்கு, பன்றிக் காய்ச்சலின் தாக்கம் குறைந்துள்ளதாக மாநில சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினார்.
கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பிரிவு உள்ளிட்ட பல்வேறு வார்டுகளில் திங்கள்கிழமை அவர் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள், அனைத்துத் துறை அலுவலர்கள் முகாமிட்டு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இதுவரை 12,436 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 7.63 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 750 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 1.44 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அவர்களில் தீவிர சிகிச்சை தேவைப்படுவோருக்கு அதற்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்திய மருத்துவ முறையில் 298 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 42 லட்சம் தவணைகளில் நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
புயல் பாதித்த பகுதிகளில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கும் வகையில், 5 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுவினர் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் முகாமிட்டுள்ளனர். ஈக்களைக் கட்டுப்படுத்தவும், குடிநீரில் குளோரினேஷன் செய்யவும், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தனித் தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
டெங்கு காய்ச்சலின் தாக்கம் அக்டோபர், நவம்பர் மாதங்களில் அதிகமாக இருக்கும். தமிழகத்தில் கடந்த ஆண்டு 23,294 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 65 பேர் உயிரிழந்தனர். நிகழாண்டில் இந்த நோயால் 3,845 பேர் பாதிக்கப்பட்டனர். உயிரிழப்பு 13-ஆகக் குறைந்துள்ளது.
அதேநேரத்தில் 2017-ஆம் ஆண்டில் பன்றிக் காய்ச்சலால் 3,800 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 17 பேர் உயிரிழந்தனர். நிகழாண்டு இந்த நோயால் 2,100 பேர் மட்டுமே பாதிக்கப்பட்ட நிலையிலும், உயிரிழப்பு 37-ஆக அதிகரித்துள்ளது. தற்போது இந்த நோய்கள் 35 சதவீதம் அளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. கோவை மாவட்ட எல்லைப் பகுதிகளில் பன்றிக் காய்ச்சலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.
பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவாக உள்ளதாக 17 மாவட்டங்களைக் கண்டறிந்துள்ளோம். இவற்றில், திருவண்ணாமலை மாவட்டம், சேலம் மாவட்டம் ஆத்தூர் ஆகிய பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது என்றார் அவர்.

 

More from the section

இலங்கை கடற்படை அட்டூழியம்: தமிழக மீனவர்கள் 13 பேர் கைது
காங்கிரஸுக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள்: திமுக கூட்டணியில் உடன்பாடு
ஏழைகளுக்கு சிறப்பு நிதியுதவி திட்டம்: 24-ல் தொடக்கம்
காவல்துறை பணியிட மாறுதலில் நீதிமன்றம் தலையிடமுடியாது
கொடநாடு வழக்கு விவகாரம்: சயன், மனோஜை கைது செய்ய தடை