சனிக்கிழமை 23 பிப்ரவரி 2019

வரமா? சாபமா? 'இடைநில்லா' பேருந்தால் இன்னல்!

DIN | Published: 03rd December 2018 01:00 AM

சென்னை: தமிழக அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சில மாதங்களுக்கு முன், நடத்துநர் இல்லாமல் ஓட்டுநரால் மட்டுமே இயங்கும், நடுவில் வேறெங்கும் நிற்காத இடை நில்லா பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. தமிழகம் முழுவதும் இவ்வாறு 230 பேருந்துகள் இயக்கப்பட்டன. இத்தகைய பேருந்துகளின் பயண தூரம் 100 கி.மீ. தூரத்துக்குக் குறையாமல் இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 இந்த "இடைநில்லா' பேருந்துகள் இயக்கப்படுவது தமிழகத்தில் புதிதல்ல. கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாகவே, நடத்துநருடன் கூடிய இடைநில்லா பேருந்துகள் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தால் இயக்கப்பட்டு வருகின்றன. உணவு இடைவேளைக்காகக் கூட இத்தகைய பேருந்துகள் நடுவில் நிற்காது என்பது முக்கிய குறைபாடாகக் கூறப்பட்டாலும், புறப்படும் ஊருக்கும், சேரும் ஊருக்கும் இடையிலான பயண நேரம் குறைந்தது அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை மிச்சப்படுகிறது என்பதால் இத்தகைய பேருந்துகளுக்கென வாடிக்கையான பயணிகள் உண்டு.

 சென்னை-திருவண்ணாமலை, சென்னை-கடலூர், திருச்சி-கோவை போன்ற பல்வேறு வழித்தடங்களில் இத்தகைய பேருந்துகள் இயக்கப்படுகின்றன. உதாரணமாக, திருவண்ணாமலையிலிருந்து பெருங்களத்தூர் வருவதற்கு பாயிண்ட் டூ பாயிண்ட் பேருந்தில் 4 மணிநேரத்துக்குக் குறையாமல் ஆகிவிடும். ஆனால், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நடத்துநர் இல்லா பேருந்து சேவையில் மூன்றரை மணிநேரத்துக்குள் பெருங்களத்தூர் வந்து சேர்ந்து விடலாம்.

 ஆனால், குறைந்தது இவ்வளவு தொலைவுக்கு அதிகமாகப் பயணிக்கும் பேருந்துகள், கண்டிப்பாக "இடைநிற்க' வேண்டும் என்ற விதிமுறை போக்குவரத்துத் துறையில் இருப்பதாகத் தெரியவில்லை. பசி மயக்கத்தைப் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால், இயற்கை உபாதை "அவசரத்தை' பொறுத்துக் கொள்வது துயரமானது மட்டுமல்ல, ஆரோக்கிய குறைபாடும் கூட.
 பெரும்பாலும் இத்தகைய "இடைநில்லா பேருந்துகள்' உணவுக்காக வழியில் நிற்பதில்லை. "உணவகம் நில்லா பேருந்து' என்ற பலகையுடன் அத்தகைய பேருந்துகள் பயணிக்கின்றன. இரவு நேர பயணங்களிலோ அல்லது ஓட்டுநர்கள் மனம் வைத்தாலோ, அந்த நேரங்களில் மட்டும் பேருந்துகள் இடையில் சில நிமிடங்கள் நிற்கும். "நேர அவசரம்' கருதியோ அல்லது "எப்படி கேட்பது?' என்று கூச்சம் காரணமாகவோ, அதைப் பற்றி பாதிக்கப்படும் பயணிகளும் கூட துணிந்து கேட்பதில்லை.

 கழிப்பிடம் போவது பற்றி வெளிப்படையாகக் கேட்பதை பலர் அநாகரிகமாகக் கருதும் சூழல் நிலவுகிறது. அத்தகைய மனநிலை, பேருந்துகளை நிறுத்தாமல் பயணிப்பதற்குக் காரணமாகவும் இருக்கிறது. "ஐந்து நிமிடம் கூடவா நிறுத்தக் கூடாது?' என்று யாரும் கேட்கத் துணிவதில்லை. பேருந்து பயணங்கள் இரண்டு மணி நேரத்திற்குக் குறைவாக இருந்தால் பிரச்னையில்லை. பெரும்பாலும், இரண்டு முதல் நான்கு மணிநேர பயணங்களில் ஏற்படும் இத்தகைய அவஸ்தைகளை என்னவென்று சொல்வது, எப்படிப் பொறுத்துக் கொள்வது?
 தனிநபர்கள் மட்டுமல்லாது குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர், சர்க்கரை நோயாளிகள் போன்றவர்களும் அதிவேக, சொகுசுப் பேருந்துகளைப் பயன்படுத்துகின்றனர். நுகர்வோரின் பாதுகாப்பில் மட்டுமல்ல, பயணத்தின்போது அவர்களுக்கு ஆரோக்கிய குறைவு, அசெüகரியம் ஏற்பட்டாலும் போக்குவரத்துக் கழகங்களே பொறுப்பு என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

 அரசு விரைவுப் பேருந்துகளிலும், சொகுசு பேருந்துகளிலும் பயணிக்கும் பெரும்பாலானோருக்கு, பேருந்து பயணங்களில் இயற்கை உபாதை "அவசரம்' ஏற்பட்டால், அவர்களுடைய அனுபவம் துயரம் மிகுந்ததாகவே இருக்கிறது. இத்தகைய அனுபவங்களை நண்பர்களிடமோ, உறவினர்களிடமோ பகிர்ந்து கொள்பவர்கள், அதனை ஓட்டுநரிடமோ, நடத்துநரிடமோ தெரிவிக்கத் துணிவதில்லை.

 சென்னையைச் சேர்ந்த கிருஷ்ணனிடம் இதுபற்றி கேட்டபோது, அவரும் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்தார். ""நானும், என்னுடைய மகளும் ஒருமுறை மதுரைக்கு அரசு விரைவுப் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தோம். பேருந்து வழியில் எங்கும் நிற்காமல் நெடுஞ்சாலையில் நள்ளிரவு நேரத்தில் பயணித்துக் கொண்டிருந்தது. திடீரென என் பெண்ணுக்கு வயிற்று வலி. எனக்கு காரணம் புரிந்தது. நடத்துநரிடம் பேருந்தை நிறுத்த சொல்லி பலமுறை கெஞ்சி பார்த்தும் பலனில்லை. கடைசியில், "எங்கள் ரெண்டு பேரையும் இறக்கிவிட்டு போய்விடுங்கள். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்' என்றேன். அந்த புறவழிச்சாலையில் நள்ளிரவு நேரத்தில் தனியாக இறக்கிவிட்டு பேருந்து சென்றுவிட்டது. பிறகு, படாத பாடுபட்டு வந்து சேர்ந்தோம். வேறென்ன செய்யறது?''என்றார் ஆதங்கத்துடன்.

 - சந்திர. பிரவீண்குமார்
 

More from the section

அதிமுக கூட்டணியை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: ப. சிதம்பரம்
மீட்கப்பட்ட சிலைகளை வைக்க பாதுகாப்பான இடங்களைக்  கண்டறிந்து வருகிறோம்: உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல்
ஆயுதப்படையில் துணை ஆணையர்கள் 4 பேர் மாற்றம்
அமைச்சரின் செல்லிடப்பேசி மாயம்: போலீஸார் விசாரணை
தைலாபுரத்தில் முதல்வர், துணை முதல்வர்