சிசேரியன் பயத்தால் அதிகரிக்கிறதா வீட்டுப் பிரசவங்கள்?

மருத்துவமனைக்குச் செல்லாமல் வீட்டிலேயே கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்த்த இரண்டு சம்பவங்கள் தமிழகத்தில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளன.
சிசேரியன் பயத்தால் அதிகரிக்கிறதா வீட்டுப் பிரசவங்கள்?

மருத்துவமனைக்குச் செல்லாமல் வீட்டிலேயே கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்த்த இரண்டு சம்பவங்கள் தமிழகத்தில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளன.
யூ - டியூப் விடியோ மற்றும் இயற்கை மருத்துவம் ஆகிய இரண்டு காரணங்களினால் வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளனர். அதில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிருத்திகா என்ற கர்ப்பிணி உயிரிழந்தார். தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மகாலட்சுமி என்ற பெண்ணுக்கு 3.15 கிலோ எடையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலமாக உள்ளனர்.

மருத்துவமனைகளின் எண்ணிக்கை மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, முந்தைய காலங்களில் வீடுகளில் மட்டுமே பார்க்கப்பட்ட பிரசவங்கள் தற்போது மருத்துவமனைகளில் நடைபெறுகின்றன. தமிழகத்தைப் பொருத்தவரை 99 சதவீத பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடைபெறுகின்றன. மத்திய, மாநில அரசுகளும் மருத்துவமனை பிரசவங்களையே ஆதரிக்கின்றன. இந்த நிலையில் திடீர் திருப்பமாக இந்த இரண்டு சம்பவங்கள் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காரணம் என்ன?: இயற்கை மருத்துவத்தின் மீதுள்ள ஆர்வம், சமூக வலைதளங்களில் பிரசவம் தொடர்பாகப் பரப்பப்படும் பல்வேறு தகவல்களே வீட்டில் பிரசவம் நடைபெறுவதற்கான காரணங்களாகக் கூறப்படுகின்றன. 

சிசேரியன் பயம்: சுகப் பிரசவம் ஆக வாய்ப்புள்ளவர்களுக்குக்கூட சிசேரியன் எனும் அறுவைச் சிகிச்சைப் பிரசவங்கள் செய்யப்படுவது சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. தனியார் மருத்துவமனைகளைப் பொருத்தவரை சுகப் பிரசவத்துக்கு குறைந்தபட்சம் ரூ.50 ஆயிரம், சிசேரியன் பிரசவத்துக்கு ரூ.1 லட்சம் வசூலிக்கப்படுகிறது. 

அரசு மருத்துவமனைகளிலும் சிசேரியன்: பிரசவத்துக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரில் சிக்கலான பிரசவம் நடைபெறும் என்று கருதுவோரை அரசு மருத்துவர்கள் தாங்கள் வைத்துள்ள கிளினிக்குகள் அல்லது பணியாற்றும் தனியார் மருத்துவமனைகளுக்குப் பரிந்துரை செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

எனவே, சிசேரியன் பிரசவம் தேவைப்படுவோருக்கும் அரசு மருத்துவமனைகளிலேயே சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன், ஒரு மாதத்தில் குறிப்பிட்ட அளவு சிசேரியன் பிரசவங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று சில அரசு மருத்துவமனைகளுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, இலக்கை எட்டுவதற்காக அரசு மருத்துவமனைகளிலும் சிசேரியன் பிரசவங்கள் அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. நல்ல நோக்கத்துக்காக தொடங்கப்பட்ட திட்டம் திசை மாறிப் போனது என்றும் கூறப்படுகிறது.

அரசு மற்றும் தனியார் என இரண்டு மருத்துவமனைகளிலும் அதிக அளவில் சிசேரியன் பிரசவம் மேற்கொள்ளப்படுவதால், இதன் காரணமாக ஏற்படும் மனஅழுத்தமும், வெறுப்பும் வீட்டில் பிரசவம் பார்க்க இன்றைய தலைமுறையினர் ஆர்வம் காட்டுகின்றனர் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு சித்த மருத்துவ அலுவலர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் மருத்துவர் தமிழ்க்கனி கூறியது: வீட்டுப் பிரசவம் என்பது 100 சதவீதம் தவறு என்று கூற முடியாது. பிரசவ காலத்தில் தாய்மார் இறப்பு, பச்சிளங்குழநதை இறப்பு விகிதம் ஆகியவற்றை குறைக்கும் நோக்கில் மருத்துவமனைப் பிரசவங்களை அரசு வலியுறுத்துகிறது. அரசின் கொள்கை முடிவு என்பதால் சித்த மருத்துவர்களும் அதனைப் பின்பற்றுகிறோம்.

சமூக வலைதளங்களில் வரும் தகவல்கள் மட்டுமே வீட்டுப் பிரசவங்கள் நடைபெறக் காரணம் என்று கூற முடியாது. சிசேரியன் பிரசவங்கள் அதிக அளவில் நடப்பதன் காரணத்தினாலும், சிசேரியன் பிரசவத்துக்குப் பின் தாய்மார்களுக்கு ஏற்படும் உடல் பருமன், தீராத முதுகு வலி, ஹெர்னியா போன்ற பக்க விளைவுகளைக் கருத்தில் கொண்டும் சுகப்பிரசவத்துக்காக வீடுகளில் பிரசவம் பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

எனவே, சமூக வலைதளங்களைக் கண்காணிப்பது போன்று சிசேரியன் அறுவைச் சிகிச்சைகளையும் அரசு முறைப்படுத்த வேண்டும். மேலும் நகரம், கிராமப்புறங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு அதன் தரத்தை வைத்து கட்டணத்தையும் நிர்ணயிக்க வேண்டும் என்றார் அவர்.

வேண்டாம் வீட்டுப் பிரசவம்: மருத்துவமனைகளில் பிரசவங்கள் நடைபெறுவதாலேயே தாய்மார் மற்றும் குழந்தை இறப்பு விகிதம் பல மடங்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, மருத்துவமனைகளில் மட்டுமே பிரசவம் பார்க்க வேண்டும் என்கின்றனர் மகப்பேறு மருத்துவர்கள்.

இது தொடர்பாக மகப்பேறு மருத்துவ நிபுணரும் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி முதல்வருமான டாக்டர் வசந்தாமணி கூறியது: முந்தைய காலங்களில் பிரசவ கால தாய்மார் இறப்பு விகிதம் 1 லட்சம் பேருக்கு 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை காணப்பட்டது. மருத்துவமனை பிரசவங்கள் அதிகரித்ததாலேயே பிரசவகால தாய்மார் இறப்பு விகிதம் 62 என்ற நிலைக்குத் தமிழகம் வந்துள்ளது. குறைப் பிரசவத்தில் பிறந்த 600 கிராம் எடையுள்ள குழந்தையைக் கூட எந்தப் பாதிப்பும் இல்லாமல் காப்பாற்ற முடிகிறது.

சில மருத்துவமனைகள் அதிக பணம் வசூலிக்கிறது என்று தெரிந்தால் வேறு மருத்துவமனையைத் தேர்ந்தெடுக்கலாம். எனவே மருத்துவமனைகளைக் காரணம் காட்டி வீட்டில் பிரசவம் பார்ப்பது என்பது அறிவார்ந்த செயல் இல்லை 
என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com