வியாழக்கிழமை 27 ஜூன் 2019

டெல்டா பாசனத்துக்கு தொடர்ந்து தண்ணீர் கிடைக்குமா?: விவசாயிகள் கவலை

DIN | Published: 29th November 2017 12:49 AM
செவ்வாய்க்கிழமை 76.98 அடியாக இருந்த மேட்டூர் அணையின் தோற்றம்.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருவதால், காவிரி டெல்டா பாசனத்துக்கு தடையின்றி தண்ணீர் கிடைக்குமா என்று விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
மேட்டூர் அணை பாசனம் மூலம் 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. ஆண்டுதோறும் ஜூன் 12 -ஆம் தேதி முதல் ஜனவரி 28 -ஆம் தேதி வரை டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும்.குறுவை, சம்பா மற்றும் தாளடி பயிர்களுக்கு 330 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படும். பாசனப் பகுதிகளில் மழை பெய்தால் பாசனத்துக்கான தண்ணீர் தேவை குறையும். 
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி, தமிழகத்துக்கு கர்நாடகம் தண்ணீர் தராத காரணத்தால், கடந்த 6 ஆண்டுகளாக தமிழகத்தில் தொடர்ந்து காவிரி டெல்டா விவசாயம் பாதிப்புக்குள்ளானது. நடப்பாண்டில் மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாத காரணத்தால், குறிப்பிட்ட நாளில் (ஜூன் 12) டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. அதன் பிறகு, பருவமழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்தது. இதனால், கடந்த மாதம் 2- ஆம் தேதி (அக். 2) மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 94.84 அடியாக இருந்தது.
தற்போது காவிரியின் நீர்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,000 கனஅடியாகக் குறைந்துள்ளது. இந்த நிலையில், மேட்டூர் அணையிலிருந்து கால்வாய் பாசனத்துக்கு 900 கனஅடி வீதமும், டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 7 ஆயிரம் கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட, பாசனத்துக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
மேட்டூர் அணையின் நீர்இருப்பு செவ்வாய்க்கிழமை 39 டி.எம்.சி. மட்டுமே. இதில் 9.5 டி.எம்.சி. தண்ணீரை மேட்டூர் அணையின் மீன்வளத்தைப் பாதுகாக்கவும், குடிநீர்த் திட்டங்களுக்காகவும் இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும். மீதம் உள்ள 29.5 டி.எம்.சி. தண்ணீரை சுமார் 40 நாள்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டால், தற்போது இருப்பில் உள்ள தண்ணீர் 30 நாள்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.
இதனால், காவிரி டெல்டா பாசனத்துக்கு தொடர்ந்து தடையின்றி தண்ணீர் கிடைக்குமா என்ற கவலை டெல்டா விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. கர்நாடகம் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை உடனே பெற்றால் மட்டுமே டெல்டா மாவட்டங்களில் விவசாயத்தைக் காப்பாற்ற முடியும் என்று விவசாயிகள் கூறினர்.


 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

மனசத் தொட்டுச் சொல்லுங்க தண்ணீர் பஞ்சத்துக்கு மழைதான் காரணமா? நாம இல்லையா??
சென்னை அருகே ஃப்ரிட்ஜ் வெடித்து 3 பேர் உயிரிழப்பு
கோவையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கியதில் 3 தொழிலாளர்கள் பலி 
கோவையில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்த சதி: கைதான 3 பேருக்கு 5 நாள் காவல்
காங்கிரஸ் கட்சியில் இருந்து கராத்தே தியாகராஜன் தற்காலிக நீக்கம்